அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கைவிடப்பட்டதா அரசுப் பள்ளி? - கொதிக்கும் தாளவாடி மலைக்கிராம மக்கள்

குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி

2018-ல்தான் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்க்க, இரு தற்காலிக ஆசிரியர்களையும், ஒரு மாற்றுப்பணி ஆசிரியரையும் மாவட்ட கல்வித்துறை நியமித்திருக்கிறது

‘ஏ.சி வகுப்பறை, டிஜிட்டல் வழிக் கல்வி என டெல்லியிலுள்ள மாதிரிப் பள்ளிகள் போன்று தமிழ்நாட்டிலும் அமைக்கப்படும்’ என்கிறார் முதல்வர். ஆனால், ‘குன்னன்புரம் அரசுப் பள்ளி, கல்வித்துறையால் கைவிடப்பட்டுவிட்டது’ என்று குமுறுகின்றனர் ஊர் மக்கள்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி தாலுகாவுக்கு உட்பட்ட மலைக்கிராமமான குன்னன்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சுற்றுப்புற மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். 6 முதல் 10-ம் வகுப்பு வரை இருந்தும், இந்தப் பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட வெறும் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். இவர்களிலும் ஆசிரியர் ஒருவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு, நீண்ட விடுப்பில் இருந்தார். தலைமையாசிரியரும் பணி நிமித்தமாக வெளியே சென்றுவிட்டால், ஓர் ஆசிரியர் மட்டுமே அனைத்து வகுப்புகளையும் நடத்துகிறார். இதனால் கொதிப்படைந்த பெற்றோர், கடந்த 12, 13-ம் தேதிகளில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கைவிடப்பட்டதா அரசுப் பள்ளி? - கொதிக்கும் தாளவாடி மலைக்கிராம மக்கள்

இது குறித்து கிராமக் கல்விக்குழு உறுப்பினர் சு.கண்ணையன் நம்மிடம், ‘‘6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் குறைந்தது ஐந்து வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. ஆனால், மூன்று வகுப்பறைகள் மட்டுமே இருப்பதால் மாணவர்களை மரத்தடியில் அமரவைத்துத்தான் பாடம் நடத்துகிறார்கள். 73 மாணவிகள் உட்பட 142 பேர் படிக்கும் இந்தப் பள்ளியில் ஒரே ஒரு கழிப்பறைதான் இருக்கிறது. அந்தக் கழிப்பறையையும் தலைமையாசிரியர்தான் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது’’ என்றார்.

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தாமஸ் ஆகியோர் நம்மிடம், ‘‘கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது இந்தப் பள்ளி. அடிப்படை வசதியில்லாத மலைக்கிராமமாக இருப்பதால், இங்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஓரிரு மாதங்களில் வேறு பள்ளிக்குப் பணி மாறுதலாகிச் சென்றுவிடுகின்றனர். மலைப்பகுதியில் பணியாற்ற அவர்களைக் கட்டாயப்படுத்துவதைவிட, ‘மலைப்படி’ கொடுத்து ஊக்குவித்தால் அவர்கள் பணிமாறுதலாகிச் செல்ல நினைக்க மாட்டார்கள். அதேபோல பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளும் இயக்க வேண்டும்’’ என்றனர்.

கண்ணையன், ராஜேஸ்வரி, தாமஸ் , அய்யண்ணன்
கண்ணையன், ராஜேஸ்வரி, தாமஸ் , அய்யண்ணன்

தாளவாடி குன்னன்புரம் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது, ‘‘2018-ல்தான் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்க்க, இரு தற்காலிக ஆசிரியர்களையும், ஒரு மாற்றுப்பணி ஆசிரியரையும் மாவட்ட கல்வித்துறை நியமித்திருக்கிறது. தாளவாடியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்படி வழங்குவதற்கான உத்தரவு இல்லை. எனவே, தற்போது பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

‘எந்த மாதிரியான வசதிகளை செய்திருக்கிறீர்கள்...’ என்று நாம் கேட்க.... கோபத்துடன் அழைப்பை துண்டித்துக்கொண்டார்!