Published:Updated:

பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு மாணவிகளுக்குப் பிரகதி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண்குழந்தைகளின் பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை
பெண்குழந்தைகளின் பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்குப் பிரகதி உதவித்தொகை... விண்ணப்பிப்பது எப்படி? ஒரு முழுமையான வழிகாட்டல் இதோ!

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அகில இந்தியத் தொழில்நுட்பக் குழு பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயின்று வரும் மாணவிகளுக்குப் பிரகதி உதவித்தொகையினை (AICTE – Pragati Scholarship Scheme For Girl Students) வழங்கி வருகிறது.

நோக்கம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (All India Council for Technical Education – AICTE) என்பது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் தொழில்நுட்பக் கல்விக்காகத் தேசிய அளவில் அமைக்கப்பட்ட ஒரு சட்ட வழியிலான அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம், தொழில்நுட்பக் கல்வியைத் தொடரும் பெண்களுக்கு சிறப்பு உதவியினை வழங்கும் வகையில், பிரகதி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வளர்ச்சிப் பணியில் முழுமையாகப் பங்கேற்கத் தேவையான அறிவு, திறன் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான வழிமுறைகளில் கல்வி ஒன்றாக இருக்கிறது. இளம் பெண்களுக்குத் தொழில்நுட்பக் கல்வி வழங்குவதன் வழியாகப் பெண்களை மேம்படுத்துவதுடன், வரும் காலத்தில் பெண்களை வெற்றிகரமான எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் முயற்சியாக, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பட்டயப்படிப்பு (Diploma) மற்றும் பட்டப்படிப்பு (Degree) பயிலும் மாணவிகளுக்கு என்று இரு பிரிவுகளாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை
பட்டப்படிப்பிற்கு உதவித்தொகை

தகுதிகள்

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் பட்டயப்படிப்பில் (Diploma) முதலாண்டு சேர்க்கை அல்லது இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற மாணவியர்கள் இந்தப் பட்டயப்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதே போன்று, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவினால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் இடம் பெற்றிருக்கும் பட்டப்படிப்பில் (Degree) முதலாண்டு சேர்க்கை அல்லது இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற மாணவியர்கள் பட்டப்படிப்புக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த உதவித்தொகையினை ஒரு குடும்பத்திலிருந்து இரண்டு மாணவியர்கள் பெற்றிட முடியும். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவியரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை

இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள்/ஒன்றியப் பகுதிகளில் (State/Union Territory) பட்டயப்படிப்பில் (Diploma) பயின்று வரும் மாணவிகளிலிருந்து மொத்தம் 5000 மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதேபோன்று, பட்டப்படிப்பில் (Degree) பயின்று வரும் மாணவிகளிலிருந்து மொத்தம் 5000 மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அனுமதி அளிக்கப்பட்ட பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு இடங்களுக்கேற்ப இந்த உதவித்தொகைக்கான எண்ணிக்கை பிரிக்கப்பட்டிருக்கிறது.

பட்டயப்படிப்புக்கான பட்டியலில் உதவித்தொகை எண்ணிக்கை குறைந்தது 50 என்றும், அதிக அளவாக 700 என்றும் இருக்கிறது. ஒன்றியப் பகுதிகளில் சண்டிகர், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவற்றிலும், மாநிலங்களில் கோவா, இமாசலப்பிரதேசம் ஆகியவற்றிலும் குறைந்த அளவான 50 எனும் எண்ணிக்கை இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவாக 700 எனும் எண்ணிக்கை இருக்கிறது.

உதவித்தொகை
உதவித்தொகை

பட்டப்படிப்புக்கான பட்டியலில் உதவித்தொகை எண்ணிக்கை குறைந்தது 50 என்றும், அதிக அளவாக 800 என்றும் இருக்கிறது. ஒன்றியப் பகுதிகளில் சண்டிகர், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகியவற்றிலும், மாநிலங்களில் கோவா, இமாசலப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகியவற்றிலும் குறைந்த அளவான 50 எனும் எண்ணிக்கை இருக்கிறது. அதிக அளவாக தமிழ்நாட்டில் 800 எனும் எண்ணிக்கை இருக்கிறது.

ஒன்றியப் பகுதிகளான அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ. இலட்சத்தீவு பகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநிலங்களிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதியுடைய மாணவிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பம்

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிவிப்புக்குப் பின்னர் தேசிய உதவித்தொகைக்கான வலைத்தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அதற்கு முன்பாக, பட்டயப்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த இணைய முகவரியிலிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளையும், பட்டப்படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்த இணைய முகவரியிலிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30-11-2021

இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை முதல் நிலையில், மாணவிகள் படிக்கும் கல்லூரி/கல்வி நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நிலையில், குறிப்பிட்ட மாநில/ஒன்றியப் பகுதியின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பயனாளர்கள் தேர்வு

இணைய வழியில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பட்டயப்படிப்பாக இருப்பின், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டும், பட்டப்படிப்பாக இருப்பின், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்ற விண்ணப்பதாரர் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டும், மாநிலங்களுக்கான உதவித்தொகை எண்ணிக்கைக்கேற்ப இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றித் தகுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகை

பட்டயப்படிப்புக்கான உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்பெற்றவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.50,000/- வீதம் முதலாமாண்டு சேர்க்கை பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும், இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். பட்டப்படிப்பு உதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்பெற்றவர்களுக்கு, முதலாமாண்டு சேர்க்கை பெற்றவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கும், இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை பெற்றவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் என்று ஆண்டுக்கு ரூ.50,000/- வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகைக்கான பணம் மாணவியின் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெண் கல்வி
பெண் கல்வி

உதவித்தொகை கிடைக்கப் பெற்றவர்கள் வரும் ஆண்டுகளில் தேசிய உதவித்தொகைக்கான வலைதளத்தில் தங்களது உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பத்தை தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல், தொடர்ந்து படித்து வருவதற்கான கல்லூரி முதல்வரின் சான்றிதழ் ஆகியவற்றுடன் சமர்ப்பித்திட வேண்டும். உதவித்தொகை பெறுபவர், அடுத்த நிலைக்கு உயரத் தவறும் நிலையில் உதவித்தொகை பெற இயலாது என்பதையும் எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவல்கள்

இந்த பிரகதி உதவித்தொகை குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த வலைதளத்தினைப் பார்வையிடலாம். பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்புக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்,

அதேபோல, இந்த அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி - பதில்களைப் படித்து நல்ல தெளிவினைப் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு