Published:Updated:

அண்ணா பல்கலை இன்ஜினீயரிங் கவுன்சலிங்..!- முடங்கியது இணையதளம்

எம்.குமரேசன்

இணையதளம் முடங்கியதால் கவுன்சலிங் நடவடிக்கைகள் பாதிப்பு

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சலிங், இணையதளம் முடங்கியதால் பாதிப்புக்குள்ளானது.

அண்ணா பல்கலை கவுன்சலிங்
அண்ணா பல்கலை கவுன்சலிங்

கடந்த ஆண்டு வரை இந்த கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக்கழகமே மேற்கொண்டது. இந்த ஆண்டிலிருந்து தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்துகிறது. அந்த வகையில், டி.என்.இ.ஏ-2019 (தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன்ஸ்-2019) என்கிற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு கவுன்சலிங் நடக்கிறது.

பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பதிவுக் கட்டணமான 5,000 ரூபாயைச் செலுத்தும் வேலைகள் மட்டும் தொடங்கின. முதல் ரவுண்ட் ஆன்லைன் கவுன்சலிங் 8.7.2019 திங்கள் கிழமை காலை தொடங்கி, 10-ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி வரை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (8.7.2019) காலை 10 மணிக்கு www.tneaonline.in என்ற இணையதளத்தில் விரும்பிய படிப்பு மற்றும் கல்லூரியைத் தேர்வு செய்வதற்காக மாணவர்கள் முயற்சி செய்தனர். ஆனால், `ஆரம்பத்திலிருந்தே சர்வர் வேலை செய்யவில்லை' என்றே திரையில் தெரிந்துகொண்டிருக்கிறது. மொத்தமே சுமார் 9,000 மாணவர்கள்தான் முதல் ரவுண்ட் ஆன்லைன் கவுன்சலிங் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள். இப்படி சில ஆயிரம் பேர் பார்வையிட்டதற்கே இந்த www.tneaonline.in இணையதளம் முடங்கியிருப்பது வேடிக்கையே.

அண்ணா பல்கலை கவுன்சலிங்
அண்ணா பல்கலை கவுன்சலிங்

கவுன்சலிங் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், என்ன ஆகுமோ.. ஏதாகுமோ என்று மாணவர்கள் பதற ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக தொலைபேசி மூலமாக (044- 22351014/22351015) கேட்டபோது, 'அதுதான் மூன்று நாள் இருக்கிறதே' என்பதையே பதிலாகச் சொல்லிக் கொண்டுள்ளனர், இரண்டு மணி நேரமாகியும்.

பாவம்தான் மாணவர்கள்!