Published:Updated:

`நான் ஒரு முஸ்லிம் என்பதே இப்போதுதான் நினைவுக்கு வருகிறது!’- பேராசிரியர் பிரோஸ் கான் உருக்கம்

`என்னை ஒருபோதும் முஸ்லிமாக நான் அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. உண்மையைச் சொல்வதானால் குரானைவிட எனக்குச் சம்ஸ்கிருதம்தான் அதிகம் தெரியும்.’

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

''இந்துக்களுக்கு மட்டுமே இந்தியா சொந்தமல்ல... முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகளுக்கும் இந்த நாடு சொந்தமானது!'' -

இப்படிச் சொன்னவர் இந்து மகா சபை நிறுவனர் மதன் மோகன் மால்வியா.

சொன்னபடி செய்தும் காட்டினார் மதன் மோகன் மால்வியா. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான். இந்தப் பல்கலையில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் பேராசிரியர்கள் நியமனத்தில் அனைத்து மதத்தினருக்கும் உரிய இடம் அளிக்க வேண்டுமென்ற விதியையும் அவரே வகுத்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் படிக்கிறார்கள்.

சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமாவும்கூட இந்த பனாரஸ் ஐ.ஐ.டி-யில் (இந்து இன்ஜினீயரிங் கல்லூரிதான் 2012-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யாக மாற்றப்பட்டது) சேர்ந்து படிக்கவே ஆசைப்பட்டார். ஆனால், 'வாரணாசியில் மதமோதல்கள் அதிகம் 'என்று கூறி அவருடைய தாயார் தடுத்துவிட, பிறகுதான் ஃபாத்திமா சென்னை ஐ.ஐ.டி-யில் சேர்ந்தார். இப்போது அவர் இல்லை. அவர் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் மர்மமாகவே தொடர்கின்றன.

பனாரஸ் இந்து பல்கலை
பனாரஸ் இந்து பல்கலை

இதற்கிடையில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் விநோதமான ஒரு பிரச்னை வெடித்துள்ளது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் சமஸ்கிருதத்துறை இந்தியாவில் புகழ்பெற்றது. சமீபத்தில் இந்தத் துறையில் துணை பேராசிரியராக ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஃபிரோஸ்கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் சம்ஸ்கிருதத்தில் பிஹெச்.டி பட்டம் பெற்றவர். அவ்வளவுதான். சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. 'இஸ்லாமியர் எங்களுக்கு வேதத்தைப் போதிப்பதா’ என்று போராட்டத்தில் குதித்தனர். ஃபிரோஸ்கானை துறைக்குள்ளேயே மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஃபிரோஸ்கானுக்கு ஆதரவாகவே உள்ளது. தகுதியின் அடிப்படையில் ஃபிரோஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராகேஷ் பட்னாகர், ''நேர்முகத்தேர்வுக்கு 29 பேர் வந்தனர். 10 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்தோம். அதில் ஃபிரோஸ்கான் மட்டுமே 10-க்கு 10 மதிப்பெண் எடுத்தார். மற்றவர்கள் இரண்டு மதிப்பெண்தான் எடுத்தனர். நாங்கள் யாரைத் தேர்வு செய்ய முடியும்? தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஃபிரோஸ்கானைத் தேர்வு செய்தோம். சாதி, மதம், இனத்தைக் காரணம்காட்டி ஒருவரைப் புறக்கணிப்பது எந்தவிதத்தில் நியாயம்? மாணவர்களின் போராட்டம் முற்றிலும் தவறானது'' என்கிறார்.

ஃபிரோஸ்கான்
ஃபிரோஸ்கான்

மாணவர்கள் தரப்போ வேறு காரணத்தைச் சொல்கிறது. இந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில், ''சம்ஸ்கிருத துறையில் மட்டும் இந்து அல்லாதோர் படிக்கவோ பணிபுரியவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்'' என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகமோ,' அப்படி ஒரு கல்வெட்டு பல்கலைக்கழக வளாகத்தில் இல்லவே இல்லை' என மறுக்கிறது. ஃபிரோஸ்கானுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் கிளையான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த 10 நாள்களாகப் பல்கலைக்கழகத்தில் இந்தப் போராட்டம் நடந்துவருவதால் சம்ஸ்கிருதத் துறையே முடங்கிப்போயுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் ரகேஷ் பட்னாகரின் கார் மீது கல்வீசியும் தாக்கியுள்ளனர்.

ஃபிரோஸ்கான் கூறுகையில், ''இரண்டாம் வகுப்பில் இருந்து நான் சம்ஸ்கிருதம் படித்து வருகிறேன். என்னை ஒருபோதும் முஸ்லிமாக நான் அடையாளப்படுத்திக்கொண்டதில்லை. உண்மையைச் சொல்வதானால் குரானைவிட எனக்குச் சம்ஸ்கிருதம்தான் அதிகம் தெரியும். தற்போது, நான் அதில் டாக்டர் பட்டமும் பெற்றுவிட்டேன். பெரும் விருப்பத்தோடு இந்தப் பணியில் சேர்ந்தேன். மாணவர்கள் என்னை எதிர்த்து நடத்தும் போராட்டம்தான் நான் ஒரு முஸ்லிம் என்பதையே எனக்கு நினைவுபடுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்னைப் பாடம் நடத்த அனுமதித்தால் நிச்சயம் மாறிவிடுவார்கள். இதுவரை என்னைப் பாடம் நடத்த மாணவர்கள் அனுமதிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் மனம் விரைவில் மாறும். அதுவரை நான் காத்திருப்பேன்'' என்றார் நம்பிக்கையோடு.

இந்தியாவில் ஏற்கெனவே சம்ஸ்கிருதத்துறையில் இஸ்லாமிய பேராசிரியர் ஒருவர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரின் பெயர் அசாபத் அலி. இவர், கோரக்பூர் தீன்தயாள் உபாத்யா பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அசாபத் அலி இந்தச் சம்பவம் குறித்துக் கூறுகையில், ''எங்கள் காலத்தில் இந்த மாதிரியெல்லாம் எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை. எனக்கு சம்ஸ்கிருதத்தில் இருந்த நிபுணத்துவம் மற்றவர்களை என்னை மதிக்க வைத்தது. எங்கள் துறையில் எனக்கு கீழே பிராமணர்கள், தாக்கூர்கள் போன்ற உயர்சாதியினர்கூட பணி புரிந்தனர். ஒருவர்கூட என்னை அவமதித்ததோ, என் மதத்தைக் காட்டியோ வேறுபாடு காட்டியது கிடையாது'' என்கிறார்.

'தலித் பெண் சத்துணவு சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம்' என்று திருப்பூர் அவினாசி அருகேயுள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினார்கள். தங்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று போர்க்கொடி துாக்கினார்கள். அதுவே தமிழகத்துக்கு மிகப்பெரும் இழுக்காகப் பார்க்கப்பட்டது.

அசாப் அலி
அசாப் அலி

ஆனால், பெருமைக்குரிய பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் படிக்கும் மாணவர்கள் இப்படிப் போராட்டத்தில் குதித்திருப்பது இந்தத் தேசம் எந்தத் திசையில் பயணிக்கிறது என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. குருகுலக் கல்விக்குப் போனால் அங்கே முதலில் கற்றுத்தரும் சம்ஸ்கிருத ஸ்லோகமே... குரு பிரம்மா குரு விஷ்ணு குருவேயோ மகேஷ்வரஹ..!’ என்ற குரு வணக்கம்தான். ஆனால், சம்ஸ்கிருதம் கற்றுத்தரும் குருவையே இப்படி அவமதிப்பவர்களை என்னவென்று சொல்வது?

``இஸ்லாமிய மதத்தவர், எங்களுக்கு வேதத்தைப் போதிக்கலாமா?’’- பனாரஸ் பல்கலையில் மாணவர்கள் போராட்டம்!