புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் செயல்படும் தேதி மற்றும் விடுமுறை நாட்களை குறிப்பிடும் கல்வியாண்டு நாட்காட்டியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டார். அதையடுத்து கல்வித்துறை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 5-ம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகின்றன. அந்த தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின்படி 2022-23 கல்வியாண்டுக்கு புதுவை காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் 23-ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்படும். பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 11-ம் வகுப்பு தொடங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளிகள் திறக்கப்படும் தினத்திலிருந்து மாணவர் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல அன்றைய தினமே பாடப் புத்தகங்களும், சீருடைகளும் வழங்கப்படும். புதிதாக 70 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை நியமிக்க இருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திருக்கிறோம். மொழி ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்பே காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.
பள்ளிகள் திறப்பு அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். அதேபோல இந்தக் கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்தும், புதுவையில் முழுமையாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சென்றால் நாம் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றுவதற்கான தேவை இருக்காது” என்றார்.