Published:Updated:

`பொம்மைகள் சொல்லிக்கொடுக்கும் பாடம்!' கற்பித்தலில் அசத்தும் புதுச்சேரி அரசுப்பள்ளி ஆசிரியை

பாடம் சார்ந்த கதைகளில் மாணவர்களே நடிக்கும்போது, அங்கு மனப்பாடம் பண்ணும் வேலையே இல்லாமல் போச்சு. பசங்களுக்கு இருந்த மேடை பயம் காணாமல் போனதையும் என்னால் உணர முடிஞ்சுது.

ஆசிரியை சங்கர தேவி
ஆசிரியை சங்கர தேவி

``எல்லாப் பெற்றோர்களுமே, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும்னு நினைப்பாங்க. அதுக்காக, பலரும் தனியார் பள்ளியில் சேர்க்க நினைப்பதைப் பார்க்க முடிகிறது. `எம் புள்ள பிரைவேட் ஸ்கூலில் படிக்குது'னு சொல்வதை, பல பெற்றோர்கள் கெளரவமாகப் பார்க்கிறார்கள். அதுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கவும் தயாராக இருக்காங்க. பெற்றோர்களின் இந்த மனநிலைக்கு, உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம், மொழி அறிவு உள்ளிட்டவைக்கு தனியார் பள்ளிகள் உருவாக்கிக்கொடுக்கும் வாய்ப்புகள் போன்றவை காரணமாக இருப்பதோடு, அரசுப் பள்ளிகளில் இவையெல்லாம் இல்லை என்று பார்க்கப்படுவதும் ஒரு காரணமா இருக்கு.

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி

இதற்கான மாற்றம், எல்லா அரசுப்பள்ளி ஆசிரியர்களிடமும்தான் இருக்குதுனு நான் நம்புறேன். அந்த மாற்றத்தை என்கிட்ட இருந்து தொடங்கியிருக்கேன்" என ஆர்வத்துடன் பேசுகிறார், புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சங்கர தேவி.

தன் பள்ளி மாணவர்களுக்குப் பொம்மலாட்டம், இயற்கையுடன் கூடிய பாடம் கற்பித்தல் முறை, இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்துதல் எனப் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு பாடம் நடத்திவருகிறார். தன்னுடைய கற்பித்தல் முறை பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

``எனக்கு சொந்த ஊரு புதுச்சேரிதான். டீச்சர் வேலைக்குச் சேர்ந்து பன்னிரண்டு வருஷமாகுது. இது, என்னுடைய மூன்றாவது பள்ளி. ஒவ்வொரு பள்ளியிலும் என்னால் முடிஞ்ச மாற்றங்களைச் செய்து வருகிறேன்.

`பெற்றோர்கள் ஏன் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும்?'- காரணத்தைப் புரியவைத்த அரசுப்பள்ளி
மாணவர்கள்
மாணவர்கள்

ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கும்போது, அதோடு சேர்த்து வேறு எதையெல்லாம் சொல்லிக்கொடுக்க முடியும்னு ப்ளான் பண்ணிப்பேன். மாணவர்கள் எல்லாருமே, இப்ப ரொம்ப அப்டேட்டா இருக்காங்க. புத்தகத்தில் இருக்கிற தகவலை அப்படியே சொல்லிக்கொடுப்பது மட்டுமே ஆசிரியர் வேலை அல்ல. அதனால, ஒரு பாடத்தைச் சொல்லிக்கொடுக்கத் திட்டமிடும்போதே களப்பயணம், செய்முறைப் பயிற்சி, கதை சொல்லுதல்னு ஒரு பாடத்தைப் பல்வேறு வகைகளாகப் பிரித்து திட்டமிடுவேன்.

பாடம் சார்ந்த பொருள்களை எடுத்துச்சென்று, பாடம் நடத்தும்போது, மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டினாங்க. அவங்களோட கற்பனைத்திறன், ஃபைன் மோட்டர் ஸ்கில் வளர்ச்சி எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்க்க முடிஞ்சுது. அதுமட்டுமில்லாமல், பாடத்தைப் புரிஞ்சு கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அவங்களோட விடைத்தாள்களைத் திருத்தும்போது தெரியவந்தது. அது, என் ஆர்வத்தை இன்னும் தூண்டிவிட்டது. இதன் அடுத்த கட்டம்தான் கதைகள் மூலமாக பாடங்களைச் சொல்லிக்கொடுக்கும் ஐடியா.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

அதுக்காக சில கதை சொல்லிகளிடமிருந்து பயிற்சியும் எடுத்துக்கிட்டேன். ஆரம்பத்தில், சில கதை சொல்லிகளைப் பள்ளிக்கே வரவழைத்து, பாடங்கள் நடத்தியிருக்கேன். பாடம் சார்ந்த கதைகளில் மாணவர்களே நடிக்கும்போது, அங்கு மனப்பாடம் பண்ணும் வேலையே இல்லாமல் போச்சு. பசங்களுக்கு இருந்த மேடை பயம் காணாமல் போனதையும் என்னால் உணர முடிஞ்சுது. அதுவரை மனப்பாடம் பண்ணியே எழுதுன பிள்ளைகள்கூட, அவங்களுக்கான சொந்த நடையில் தேர்வுகள் எழுத ஆரம்பிச்சுட்டாங்க.

அதன்பின், பொம்மலாட்டம் மூலம் பயிற்சிகொடுத்தால் மாணவர்கள் கூடுதலாக ஒரு கலையைத் தெரிஞ்சுப்பாங்களே என்ற எண்ணம் வந்துச்சு. மாணவர்களுக்குப் பொம்மலாட்ட பயிற்சிகள் வழங்கி, அதன்மூலம் பாடம் நடத்த ஆரம்பித்தேன். தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களை பொம்மலாட்டம் மூலம் சொல்லிக்கொடுத்தேன். அதற்குத் தேவையான பொம்மைகளை மாணவர்கள் என்னோடு சேர்ந்து ஒட்டி, வெட்டி உருவாக்குகிறார்கள். பொம்மலாட்டங்கள் மூலமாக பாடங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள். பொம்மைகளே பாடம் சொல்லிக்கொடுக்கையில், புது ஈர்ப்போடு வகுப்பில் பாடங்களைக் கவனிக்கிறார்கள்.

பொம்மலாட்டம்
பொம்மலாட்டம்
`ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா.. மணப்பாறை முறுக்கு..!’ - பலகாரங்களை வைத்து பாடம் நடத்திய அரசுப்பள்ளி

அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை மாணவர்கள் நேரில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டா, இன்னும் எளிமையாக இருக்கும் என்பதால், விதை விதைப்பது,செடிகளை வளர்ப்பது, களை எடுப்பது போன்ற செயல்களை களத்துக்கே அழைத்துச்சென்று கற்றுக்கொடுக்கிறேன். எங்கள் பள்ளியில் சிறிய தோட்டம் அமைத்து, அதை மாணவர்களே பராமரித்து வர்றாங்க" என்று சங்கர தேவி ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.

கற்பித்தல் மட்டுமல்லாது, தன் சொந்தப் பணம் மற்றும் நண்பர்களிடம் நிதி வசூலித்து, பள்ளியை வண்ணமயமாக மாற்றியுள்ளார்.

புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி
புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி

இவரைப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கட்டும். அரசுப் பள்ளிகள் இன்னும் சிறக்கட்டும்.