Published:Updated:

`பள்ளிக்கூடத்தைச் சுத்தம் செய்ய 7 மணிக்கே போகணும்!' - ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியின் அவலம்

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை அருகே கறம்பக்குடியில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயல்படும் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் தேவையான வசதிகள் ஏற்படுத்த மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி
ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி ( வெங்கடேஷ்.ஆர் )

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தான்மனையில் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. குறிப்பாக, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இந்தப் பள்ளியில் இல்லை. இதுபற்றி, மாணவர்களின் பெற்றோர் பலமுறை ஆசிரியர்களிடமும் கல்வித்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் எந்தப் பலனும் இல்லை.

மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
மாணவர்களுடன் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்கள்
வெங்கடேஷ்.ஆர்

இந்தநிலையில்தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு  மாணவர்களின் பெற்றோர் மாணவர்களோடு சேர்ந்து சாலை மறியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால், கலைந்து சென்றனர். தற்போது, உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

`23ல் இருந்து 69 ஆன எண்ணிக்கை..!'- இஸ்ரோ தலைவர் சிவனால் வளர்ந்த அரசுப் பள்ளி

இதுபற்றி மாணவர்களின் பெற்றோர்கள் கூறும்போது, ``ஆதிதிராவிடர் நலப் பள்ளி என்பதால், அனைத்துத் தரப்பினருமே அலட்சியம் காட்டுகின்றனர். இங்கு குடிநீர் சரியாக வருவதில்லை. ஆசிரியர்களுக்கான கழிப்பறை தவிர மற்றவை செயல்பாட்டில் இல்லை. மாணவர்களுக்குத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. போதாக்குறைக்கு ஆசிரியர் பற்றாக்குறை வேறு. பிள்ளைகள் ஒரு சில நாள்கள் சீக்கிரமாக எழுந்து 7 மணிக்கெல்லாம் பள்ளிக்குக் கிளம்பிடுவாங்க.

மண்டபத்தில் அடைக்கப்பட்ட மாணவர்கள்
மண்டபத்தில் அடைக்கப்பட்ட மாணவர்கள்
`தாம்பூலப் பையில் விதைப் பந்து... 10 குழந்தைகளுக்குப் பிரியாணி!' - பள்ளி மாணவர்களின் சமூக அக்கறை

என்னவென்று கேட்டால், பள்ளிக்கூடத்தைச் சுத்தம் செய்யணும், அதுக்காகப் பள்ளியில் குழு பிரிச்சு விட்டுருக்காங்க என்று சொல்லிவிட்டு கிளம்புவாங்க. பள்ளிக்குப் போய் என்ன ஏதுன்னு விசாரித்தால், அந்த நேரத்திற்குப் போய் பள்ளியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யுறாங்க. பள்ளிக்கூடத்தைச் சுத்தம் செய்வது தப்பு இல்லை. ஆனால், அதற்காக உள்ள பணியாளர்களை வைத்துச் சுத்தப்படுத்தலாம்.

ஆனால், பச்சைப் பிள்ளைகளை சீக்கிரமாக வரவழைத்து தினம் தினம் சித்ரவதைப்படுத்துறாங்க. இதையெல்லாம், பார்த்துவிட்டு பொறுக்க முடியாமல்தான் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினோம். காவல்துறையினர் எங்களுடன் பச்சைப்பிள்ளைகளையும் சேர்த்து மண்டபத்தில் அடச்சிவச்சி அப்புறம் வெளியில விட்டாங்க. அந்தப் பள்ளிக்காக பல வருஷமாகப் போராடிக்கிட்டுதான் இருக்கோம்.

ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி
ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி

ஆனாலும், எதையும் நிறைவேற்றலை. தொடர்ந்து, போராடினால்தான் அனைத்தும் நடக்கும் என்றால், தொடர்ந்து போராடுவோம்" என்றனர். இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``தற்போது தற்காலிக ஆசிரியர் பணிக்குச் செல்வார். விரைவில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படுவார். தொடர்ந்து, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும்" என்றனர்.