Published:Updated:

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் தரவரிசை - அண்ணா பல்கலைக்கழகம் கண்ட முன்னேற்றம்!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

2020 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் பாடப்பிரிவு வாரியாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள QS ( Quacquarelli Symonds ) குயாக்யாரலி சைமண்ட்ஸ் என்ற கல்வி சார்ந்த நிறுவனம், 2004-2009 காலகட்டத்தில் டைம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து உலகப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையை வெளியிட்டு வந்தது. 2010 ஆம் ஆண்டிலிருந்து தனியாகவே தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

கல்வி வட்டங்களில் இருக்கும் நற்பெயர், வேலை வழங்குவோர் வட்டங்களில் நற்பெயர், ஆசிரியர் மாணவர் விகிதம், சராசரி ஆசிரியரின் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு இருக்கும் மேற்கோள் எண்ணிக்கை (Citations), வெளிநாட்டு மாணவர்கள் சதவிகிதம் மற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சதவிகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தத் தரவரிசையைப் பட்டியலிடுகிறது.

தரவரிசைப் பட்டியல்
தரவரிசைப் பட்டியல்

2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலை, கலை மற்றும் ஹியூமனிட்டிஸ் (Arts and Humanities), பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (Science and Technology) லைஃப் சயின்சஸ் மற்றும் மருத்துவம் ( Life sciences and Medicine), இயற்கை அறிவியல் (Natural Sciences), சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை (Social sciences and Management) ஆகிய ஐந்து பிரிவுகளாகப் பிரித்து வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்கள் எல்லாப் பாடப்பிரிவுகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள மஸாச்சுஸட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology), ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் (Stanford University), ஹார்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University) ஆகியவையும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge university), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (University of Oxford), லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அன்ட் பொலிடிகல் சயின்ஸ் (London School of Economics and Political Science) ஆகியவையும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன. கலைப் பிரிவில் ஜே.என்.யூ 162, டெல்லிப் பல்கலைக்கழகம் 231 -ம் இடங்களையும் பெற்றுள்ளன.

london School of Economics and Political Science
london School of Economics and Political Science
ED SWEETMAN

லைஃப் சயின்சஸ் மற்றும் மருத்துவப் பிரிவில் எய்ம்ஸ் மருத்துவமனை 231-வது இடத்தை எட்டியுள்ளது. சமூக அறிவியல் மற்றும் மேலாண்மைப் பிரிவில் 160 -வது இடத்தில் டெல்லிப் பல்கலைக்கழகமும், ஐஐடி டெல்லி 183 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. இயற்கை அறிவியல் (Natural Sciences) பிரிவில் 108-வது இடத்தில் ஐஐடி பாம்பேவும் 111 -ல் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்சஸும் உள்ளன.

இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பப் பாடப்பிரிவில் 44 ஆவது இடத்தில் ஐஐடி பாம்பே, 47 ஆவது இடத்தில் ஐஐடி டெல்லி, 86 ஆவது இடத்தில் ஐஐடி கரக்பூர், 88 ஆவது இடத்தில் ஐஐடி மெட்ராஸ் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 53 ஆவது இடத்தில் இருந்த ஐஐடி பாம்பே, 9 இடங்கள் முன்னேறியுள்ளன. அதேபோல ஐஐடி டெல்லி 14 இடங்களும் ஐஐடி மெட்ராஸ் 7 இடங்களும் முன்னேறியுள்ளன. மேலும், கடந்த ஆண்டு 397 ஆவது இடத்திலிருந்த அண்ணா பல்கலைக்கழகம் 24 இடங்கள் முன்னேறி 373 ஆவது இடத்தை அடைந்துள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 10 ஆவது இடத்திலும் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு