Published:Updated:

`பாண்டே ஜர்னலிசம் ஸ்கூல்ல என்ன விசேஷம்?’ - ரங்கராஜ் பாண்டே பதில்

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே

பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, `பாண்டே ஜர்னலிசம் ஸ்கூல்’ என்ற பெயரில் இதழியல் தொடர்பான கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்க இருக்கிறார்.

பத்திரிகையாளராகப் பணியைத் தொடங்கி, சினிமா நடிகர் மற்றும் யூடியூபர் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர் ரங்கராஜ் பாண்டே. பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியில் அவர் நடத்திவந்த `கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சி பரவலான கவனம் பெற்றது. பின்னர், செய்தித் தொலைக்காட்சிப் பணியில் இருந்து விலகிய அவர், `பிங்க்’ படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீ-மேக்கான நேர்கொண்ட பார்வை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அஜித் நடித்திருந்த அந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் பாண்டேவின் அனல் பறக்கும் வாதம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.

Vikatan

சாணக்யா டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி தற்போது அவர் நடத்தி வருகிறார். குணசித்திர வேடங்களில் நடித்துவந்த பெரியகருப்பத் தேவரின் மகன் பெ.விருமாண்டி இயக்கியுள்ள க/பெ ரணசிங்கம் படத்திலும் பாண்டே முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சமுத்திரக் கனி, வேல.ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றது. படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ரங்கராஜ் பாண்டே, ``ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் அட்டகாசமான நடிப்பை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன். எல்லாப் பெருமைகளும் பெ.விருமாண்டியையும் தயாரிப்பாளரையுமே சேரும்" என்று குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் இவர், தற்போது இதழியல் கல்வி நிறுவனம் ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே
Vikatan

இதுகுறித்து ரங்கராஜ் பாண்டேவிடம் பேசினோம். ``ஜர்னலிசம் ஸ்கூல் ஆரம்பிக்கப்போறது உண்மைதான். என்ன ஸ்பெஷல்னு கேட்டீங்கனா எல்லாரும் சொல்ற மாதிரிதான் இருக்கும். நிறைய உருப்படியான விஷயங்கள், உண்மையான விஷயங்கள் எதிர்பார்க்கலாம். சினிமா எடுக்குற மாதிரிதானே.. வித்தியாசமான கதைன்னு.. அதேமாதிரிதான் நானும் சொல்ற மாதிரி இருக்கும். பிராக்டிகலா அந்த அனுபவச்சுப் பார்க்கும்போதுதான் வித்தியாசம் தெரியும்’’என்பதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு