Published:Updated:

கல்விக் கடன் வாராக்கடனாக மாற என்ன காரணம்?

கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

கல்விக் கடன்

கல்விக் கடன் வாராக்கடனாக மாற என்ன காரணம்?

கல்விக் கடன்

Published:Updated:
கல்விக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
கல்விக் கடன்

கடந்த 2020-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரை நாடு முழுவதும் 24,84,397 பேருக்கு ரூ.89.883 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 8,587 கோடி ரூபாய், வாராக்கடனாக உள்ளது. கல்விக் கடன் அதிகம் பெறப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் கேரளா முன்னிலையில் இருக்கின்றன. எனவே, கல்விக் கடன் அதிகமாக வாராக்கடன் ஆன மாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன.

கல்விக் கடன் வாராக்கடனாக மாற என்ன காரணம்?

தமிழகத்தில் 6,97,066 மாணவர்கள் ரூ.17,193 கோடி கல்விக் கடன் பெற்று உள்ளனர். இதில் 1,68,410 மாணவர்கள் பெற்ற ரூ.3,490 கோடி வாராக்கடனாக உள்ளது. கேரளாவில் 3,25,703 மாணவர்கள் ரூ.10,236 கோடி கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். இதில் 54,519 மாணவர்கள் பெற்ற ரூ.1,396 கோடி வாராக்கடனாக உள்ளது. அதே போல, புதுச்சேரி மாநிலத்தில் 18,311 மாணவர்கள் ரூ.482 கோடி கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். இதில் 4,807 மாணவர்கள் வாங்கிய ரூ.93.31 கோடி வாராக்கடனாக இருக்கிறது என்கின்றன சமீபத்திய புள்ளிவிவரங்கள்.

ஏன் கல்விக் கடன் வாராக்கடன் ஆகிறது, வாராக்கடன் எண்ணிக்கை அதிகரிப்பதால்தான் வங்கிகள் கல்விக் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றவா என்ற கேள்வியை சிட்டி யூனியன் பேங்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி என்.காமகோடியிடம் கேட்டோம்.

என்.காமகோடி
என்.காமகோடி

குறைவான வேலைவாய்ப்புதான் பிரச்னை...

“வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதில்லை என யாராலும் குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில், அனைத்துப் பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் மாணவர்கள் கல்வி பயில்வதற்காகக் கடன்களைக் கொடுக்கின்றன. அதே சமயம், ஒரு சில வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டு கின்றன. சில தனியார் வங்கிகளில் கல்விக் கடன் வழங்கு வதில்லை என்கிற முடிவையும் எடுத்துள்ளன.

இதற்கு மிக முக்கியமான காரணம், கல்விக் கடனை வாங்கும் பலர் அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது தான். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கல்விக் கடன் என்.பி.ஏ-வால், புதிதாகக் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மிகப் பெரிய பிரச்னையை ஏற்படுத்துகிறது.

கல்விக் கடன் வாங்கி மாணவர்கள் படித்து முடித்தாலும் சரியான வேலைவாய்ப்பு அமைவதில்லை. அதேநேரத்தில், தனியார்மயமாகி வரும் கல்வி மற்றும் குறைவான வேலைவாய்ப்பு மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள நிலையில், நன்கு படித்தவர்களுக்கே வேலை கிடைக்கத் திண்டாட்ட மாக உள்ள நிலையில், சராசரி மாணவர்களுக்கு வேலை கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது.

மாணவர்கள்தாம் முழுப் பொறுப்பு...

கல்விக் கடன் விஷயத்தில் மாணவர்கள்தாம் முழுப் பொறுப்பு. அனைத்து வகையிலும் தங்களின் திறன்களை வளர்த்துக்கொண்டு, வேலை கிடைப்பதில் வெற்றி கண்டு, வாங்கிய கடனை முறையாகச் செலுத்த வேண்டியது அவர்களுடைய கடமை. அப்போதுதான் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மற்ற மாணவர் களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். வாங்கிய கல்விக் கடனை சரியாக திரும்பச் செலுத்தவில்லை எனில், பிற்காலத்தில் அவரால் எந்தவொரு வங்கியிலும் எந்தவிதமான கடனை யும் வாங்க முடியாது” என்றார் தெளிவாக.

ஏ.ஜி.தனசேகரன்
ஏ.ஜி.தனசேகரன்

கல்விக் கடன் வாராக்கடன் ஆகாமல் இருக்க...

கல்விக் கடன் வாராக்கடன் ஆகாமல் இருக்க ஏதாவது வழி இருக்கிறதா என பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஏ.ஜி.தனசேகரனிடம் கேட்டோம்.

“வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள் வாராக்கடன்களாக ஆகிவரக் காரணம், கல்விக் கடன் வாங்கும்போது மாணவர்கள் காட்டும் ஆர்வம், அதைத் திருப்பிச் செலுத்துவதில் காட்டுவதில்லை. தவிர, அரசியல் கட்சிகள் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடனை ரத்து செய்வோம்’ எனத் தேர்தல் வாக்குறுதி தந்துவிடுகின்றன. இது நடக்குமா நடக்காதா என்பது ஒரு பக்கமிருக்க, அப்படி ஒரு பேச்சு வந்த பிறகு, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் பலரும் நிறுத்திவிடுகிறார்கள். எந்தவொரு கடனை யும் மூன்று மாதம் தொடர்ந்து கட்டாமல் போனால், அந்தக் கடன் வாராக் கடனாக மாறிவிடும்.

வீட்டுக் கடன், கார் கடன் மாதிரியான கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் தரப்படுவதில்லை. ஆனால், கல்விக் கடனை திருப்பிச் செலுத்த மட்டும் கால அவகாசம் தரப்படுகிறது. அதாவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த அந்த மாணவரின் கல்லூரிக் காலம் முடிந்ததிலிருந்து ஒரு வருடம் கால அவகாசம் வழங்கப் படுகிறது. அதன் பிறகும் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டால், அதைக் கல்விக் கடன் கொடுத்த வங்கிக்கு தெரியப்படுத்தி மேலும் சில மாதங்களை அவகாசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், கடன் வழங்கிய தேதியிலிருந்து ஏழு ஆண்டு களுக்குள் கடனை முழுமையாக அடைத்துவிட வேண்டும் என்பது மிக முக்கியமான விதிமுறை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் கல்விக்கடனை சம்பந்தப்பட்ட மாணவர் கட்டவில்லை எனில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கடன் கொடுத்த வங்கிக்கு முழு உரிமை உண்டு.

கல்விக் கடன் என்பது மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும். அதுவும் கொரோனா மாதிரியான சூழலில் அனைத்து தரப்பினர்களுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் வங்கிகள் வழங்கும் கல்விக்கடன், மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பேருதவி செய்யும். இந்த வாய்ப்பை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதுதான் அவர்களுக்கும் அவர்களுக்கு பின் கல்விக் கடன் வாங்க விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் நல்லது” என்றவர், கல்விக் கடன் வாராக்கடனாக மாறாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சில விஷயங்களை எடுத்துச் சொன்னார்.

கல்விக் கடன் வாராக்கடனாக மாற என்ன காரணம்?

நிறுவனங்களின் பங்கு!

“கல்விக் கடன் வாராக்கடன் ஆகாமல் இருக்க வேண்டும் எனில், நிறுவனங்கள் ஒரு முக்கியமான வேலையைச் செய்ய வேண்டும். கல்விக் கடன் வாங்கிய மாணவர் களுக்கு வேலை தரும்போது, அவர்களிடம் மற்ற ஆவணங்கள் குறித்த கேள்விகளை எழுப்புவது போல, கல்விக் கடன் இருக்கிறதா என்கிற கேள்வியையும் கட்டாயம் கேட்லாம். கல்விக் கடனை சரியாகக் கட்டி முடித்திருந்தால், அது குறித்த ஆவணங்களையும் கேட்டுப் பெறலாம். கல்விக் கடன் சரியாகத் திரும்பக் கட்டவில்லை எனில், சம்பளக் கணக்கு வைத் திருக்கும் வங்கியில் இருந்து, கல்விக் கடன் கொடுத்திருக்கும் வங்கிக்கு இ.சி.எஸ் முறையில் மாதாந்தரக் கடன் தவணையைச் செலுத்த ஏற்பாடு செய்யலாம். இந்த யோசனையை நிறுவனங்கள் நினைத்தால் மட்டும் சாத்திய மாகாது. அரசு தப்பிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தால், கல்விக் கடன் வாராக்கடன் ஆவது நிச்சயம் குறையும்’’ என்றார் தெளிவாக.

கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விஷயத்தில் அலட்சியம் கூடாது என்பதை மாணவர்கள் அனைவரும் உணர்ந்து செயல் படுவது அவசியம்!