கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆதரவற்றவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், தினக்கூலிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த நிலையில், ஆங்காங்கே தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உணவு சமைத்து கொடுப்பது, அத்தியாவசிய பொருள்கள் வழங்குவது என இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ஹரிஹரன், தான் பணிபுரிந்த தூய சவேரியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வறுமையில் வாடி வரும் 100 மாணவர்களின் குடும்பத்திற்கு தனது சொந்த நிதியில் இருந்து அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அடங்கிய 65,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்பினை தன் மனைவி கலாவுடன் இணைந்து வழங்கியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS“நான் 31 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியர் நிலையில், தமிழாசிரியராக இந்தப் பள்ளியில்தான் பணி செய்தேன். கொரோனா பரவலால் பள்ளிகள் எல்லாம் மூடி கிடக்கின்றன. மாணவர்கள் நிறைந்த வகுப்பறைகளும், மைதானமும் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஊரடங்கினால், மாணவர்களுக்கான கல்வி மட்டுமல்ல, தொழில்களும் முடங்கிப் போயுள்ளன. நான் பணி செய்த இந்தப் பள்ளியில் படித்து வரும் பெரும்பாலான மாணவர்கள் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பத்தில் இருந்து வருபவர்கள்.

குடும்ப கஷ்டத்தையும், வறுமைச் சூழலையும் உணர்ந்து படித்து முன்னேறி வருபவர்கள். இம்மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தாண்டி, சக ஆசியர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போது பள்ளி நிர்வாகத்துடன், சக ஆசிரியர்கள் இணைந்து 225 மாணவர்களின் குடும்பத்திற்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் தொகுப்பை வழங்கினார்கள். அதில், ஓய்வு பெற்ற ஆசிரியர் என்ற முறையில் நானும் எனது பங்களிப்பைச் செலுத்தினேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த ஆண்டும், கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டபோதே, 100 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் குடும்பத்திற்காக அரிசி, காய்கறி, மளிகைத் தொகுப்பை என்னுடைய சொந்த செலவிலேயே கொடுக்கலாம் என நானும், என் மனைவி கலாவும் சேர்ந்து முடிவெடுத்தோம். எங்களின் இந்த முடிவை பள்ளியின் தலைமையாசியர் அருட்சகோதரர் ஆரோக்கியதாஸிடம் சொன்னேன். அவரும் சம்மதித்தார். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தப் பிரிவுகளில் 45 வகுப்பபுகள் உள்ளன.

ஒரு வகுப்பறைக்கு 2 மாணவர்கள் என அந்தந்த வகுப்பாசிரியர்கள் மொத்தம் 90 பேரை தேர்வு செய்தனர். இதுதவிர 12-ம் வகுப்பு படித்து வரும் 10 மாணவர்கள் தன்னார்வத்தின் பேரில் முன்களப் பணியாளர்களாக அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேவையாற்றி வருகிறார்கள். அந்த மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 100 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைத் தொகுப்பினை வழங்கியுள்ளோம்” என்றார் ஆசிரியர் ஹரிஹரன்.
“அந்த நிவாரணத் தொகுப்புகளை ஒவ்வொரு மாணவரும், அவரின் பெற்றோரும் கையில் பெற்றபோது வெளிப்பட்ட சந்தோஷத்தில் பூரித்துப் போனோம். அவர்களின் முகத்தில் இறைவனைக் கண்டேன். பெற்ற பிள்ளைகளையும் எங்களிடம் படிக்கும் பிள்ளைகளையும் எப்போதுமே நாங்கள் வெவ்வேறாக நினைத்ததில்லை. ஊரடங்கால் பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பில்லாததால் வறுமையில் தவிக்கும் எங்கள் பிள்ளைகள் ஒருபோதும் பசியோடு இருக்கக்கூடாது” எனத் தழுதழுக்கிறார் ஹரிஹரண்.