Published:Updated:

தமிழ்வழிப் பள்ளிகளில் முறைகேடு! - டெல்லியிலிருந்து எழும் புகார்

கழகத்தில் பணப்புழக்கம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, பணத்தைக் கையாடல் செய்யத் தொடங்கினார்.

பிரீமியம் ஸ்டோரி

டெல்லி தமிழ்க் கல்விக்கழகம் நடத்தும் தமிழ்வழிப் பள்ளிகளில் விதிமுறைகளை மீறி முறைகேடு செய்வதாகவும், இது குறித்துக் கேட்டால் குண்டர்களை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தலைநகர் டெல்லியிலிருந்து புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணியை விசாரித்தோம்...

டெல்லி தமிழ்க் கல்விக்கழகத்தின் சார்பில் டெல்லியில் இயங்கிவரும் ஏழு தமிழ்வழிப் பள்ளிகளில் சுமார் ஏழாயிரம் தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள். 1923-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிகள், தற்போது டெல்லி மாநில அரசின் கல்வித்துறையின்கீழ் இயங்குகின்றன. இந்தப் பள்ளிகளின் நிர்வாகச் செலவில் 95 சதவிகிதத்தை டெல்லி அரசும், ஐந்து சதவிகிதத்தை டெல்லி தமிழ்க் கல்விக்கழகமும் மேற்கொள்கின்றன. இதன் செயலாளராக இருக்கும் ராஜு என்பவர் மீதுதான் முறைகேடு புகார் எழுந்துள்ளது.

ஜெயக்குமார் - ராஜு
ஜெயக்குமார் - ராஜு

கழகத்தின் முன்னாள் உறுப்பினரான ஜெயக்குமார், 11 ஆண்டுகளாக ராஜுவுடன் இணைந்து பணியாற்றியவர். அவர் நம்மிடம், “டெல்லித் தமிழ்க் கல்விக்கழகம் 1990-ம் ஆண்டுவரை நன்றாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு தேர்தல் நடைமுறைக்கு வந்ததிலிருந்தே குளறுபடிகள் தொடங்கிவிட்டன. இலவசமாக நடைபெற்ற மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலித்தார்கள். ஆசிரியர்கள், நிர்வாகிகள் நியமனத்திலும் பணம் விளையாடியது. இப்போது செயலாளராக இருக்கும் ராஜு வந்ததும் இந்தப் பிரச்னைகள் எல்லை மீறிவிட்டன.

கழகத்தில் பணப்புழக்கம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, பணத்தைக் கையாடல் செய்யத் தொடங்கினார். நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் ரசீது இல்லாமல் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பணம் வசூலித்தார். கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை கேள்வி கேட்பவர்கள் மீது குண்டர்களை ஏவிக் கொலை மிரட்டல் விடுப்பதுடன் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புப் பிரிவிலும் புகார் அளிப்பார். டெல்லி துணைநிலை ஆளுநர் தொடங்கி காவல்துறை வரை இவர்மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதிகாரிகளின் துணையோடு புகார்களை அமுக்கிவிடுகிறார்” என்றார்.

தமிழ்வழிப் பள்ளிகளில் முறைகேடு! - டெல்லியிலிருந்து எழும் புகார்

இந்தப் புகார்கள் குறித்து ராஜுவிடமே விளக்கம் கேட்டோம்... “என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகளின் வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்படுகின்றன. இந்தக் கணக்குகளை டெல்லி அரசே ஆடிட் செய்து ஊழல் நடக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது. 2010-ல் நான் பொறுப்பேற்கும் முன் கழகம் 52 லட்சம் ரூபாய் கடனில் இருந்தது. ஆறு மாதங்களாக ஆசிரியர்கள் உட்பட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார்கள். இவற்றை சரிசெய்ததோடு, மயூர்விஹார் பகுதியில் 1982-ல் தொடங்கி முடிக்கப்படாமல் இருந்த எட்டாவது பள்ளிக்கூடத்தை கடந்த அ.தி.மு.க அரசிடமிருந்து 5 கோடி ரூபாய் நிதியுதவி பெற்று கட்டி முடித்திருக்கிறேன். டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்தல்கள் அனைத்தும் ஓய்வுபெற்ற நீதிபதிகளின் முன்னிலையில்தான் நடக்கும். இதுவரை ஒன்பது வழக்குகள் என்மீது பதிவு செய்திருக்கிறார்கள். அனைத்து வழக்குகளும் புனையப்பட்டவை என நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. தவிர, நான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதாலும் என்மீதான காழ்ப்புணர்ச்சியால் இது போன்ற புகார்களை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்” என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு