Published:Updated:

கொள்ளையடிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப்!

கொள்ளையடிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொள்ளையடிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப்!

‘இல்லாத’ மாணவர்களுக்கும் நிதியுதவி... போலி அடையாள அட்டை...

தமிழகம் முழுவதும் ஏராளமான கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய பல கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையைச் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தினரும், அரசு அதிகாரிகளும் இணைந்து கூட்டுக்கொள்ளை அடித்திருக்கிறார்கள். 2018-ம் ஆண்டே சி.ஏ.ஜி அறிக்கையில் இந்த விஷயம் வெளிவந்த நிலையிலும், அரசுத் தரப்பில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே வழக்கு பதிவு செய்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை!

உயர்கல்வி படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட கல்விச் செலவுகளுக்காக போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் ஸ்காலர்ஷிப் இது. கடந்த 2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 17 கோடி ரூபாயைக் கல்வி நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும் கைகோத்து சுருட்டியிருக்கிறார்கள்.

2018-ல், தணிக்கை அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, 50-க்கும் மேற்பட்ட கல்லூரி முதல்வர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளத் தயாராகிவருகிறது.

அசோக்குமார்
அசோக்குமார்

வழக்கு தொடர்ந்திருக்கும் அசோக்குமாரிடம் பேசினோம். “இது தொடர்பாக சி.ஏ.ஜி வெளியிட்ட தணிக்கை அறிக்கை பல்வேறு மோசடிகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதாவது, அரசு ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்ததாகச் சொல்லி கல்விக் கட்டணத்தை உயர்த்திக் காட்டி 4 கோடியே 34 லட்சத்து 48,000 ரூபாயைக் கையாடல் செய்திருக்கிறார்கள். இல்லாத மாணவர்களின் ஐ.டி-யைப் போலியாகத் தயார் செய்தும், படிப்பை இடைநிறுத்தியவர்களின் பெயர்களிலும் நிதியை எடுத்துள்ளார்கள். அதேபோல இல்லாத கல்லூரிக்கு நிதியுதவியை அளித்ததாகச் சொல்லியும், ஒரே கல்வியாண்டில் பலமுறை நிதியுதவி அளிக்கப்பட்டதாக ஜோடித்தும், மாற்றுச் சமூக மாணவர்களை எஸ்.சி., எஸ்.டி மாணவர்களாகக் கணக்கு காட்டியும் பணத்தை மோசடி செய்துள்ளனர். வெளிமாநில மாணவர்கள் பெயரிலும் ஸ்காலர்ஷிப் மடைமாற்றப்பட்டுள்ளது. விடுதியில் தங்காத மாணவர்களுக்கும் சேர்த்து கணக்கு எழுதப்பட்டுள்ளது. இப்படி, சுமார் 37 வகையான மோசடிகளை அரங்கேற்றி 17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 363 ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது.

தணிக்கை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2018-ம் ஆண்டிலேயே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, உயர்கல்வி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ‘லஞ்ச ஒழிப்புத்துறை இது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இந்த விஷயத்தில் பொதுநலன் சார்ந்திருப்பதால், வழக்கை ரிட் பெட்டிஷனாக மாற்றி உள்துறை, உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகிய துறைகளை எதிர்மனுதாரராகச் சேர்த்தது.

நவம்பர் 30-ம் தேதி இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘மூன்றாண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?’ என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டதுடன், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்துள்ளது” என்றார்.

கொள்ளையடிக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப்!

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் பேசினோம்... “தணிக்கை அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, நாகை, நாமக்கல், பெரம்பலூர் உட்பட 19 மாவட்டங்களிலுள்ள 67 கல்லூரிகளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றில் 52 கல்லூரிகளின் முதல்வர்களிடமும், உயர்கல்வித் துறையைச் சேர்ந்த ஏழு இணை இயக்குநர்களிடமும், ஆதி திராவிடர் நலத்துறையில் பணியாற்றும் 11 அதிகாரி களிடமும் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறோம். கல்லூரி மற்றும் அதிகாரிகள் தரப்பில் கொடுக்கும் ஆவணங்களையும், தணிக்கை அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதனால், விசாரணைக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படும்” என்றார்கள்.

2011-2014 காலகட்டத்தில் இந்த ஸ்காலர்ஷிப் மோசடியால் நேரடியாக பாதிக்கப்பட்ட, தற்போது வழக்கறிஞராக இருக்கும் அசோக் குமாரிடம் (வேறொரு நபர்) பேசினோம். “மெக்கானிக்கல் டிப்ளோமா முடித்து, நல்ல மதிப்பெண் பெற்று, கவுன்சிலிங்கில் பொறியியல் படிப்பை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் தேர்வு செய்தேன். அரசு ஒதுக்கீட்டு இடம். நான் முதல் தலைமுறை மாணவர் என்பதால் 12,500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். ஸ்காலர்ஷிப்பாக அந்தக் கட்டணத்தையுமே அரசு திருப்பியளித்துவிடுகிறது. ஆனால், கல்லூரியில் 67,500 ரூபாய் கட்டச் சொன்னார்கள். இலவசமாகப் படித்திருக்க வேண்டிய என்னிடம், அதிக பணத்தைப் பிடுங்கியது மட்டுமின்றி, எனக்கான ஸ்காலர்ஷிப்பையும் தரவில்லை. இதையெல்லாம் எதிர்கொள்ளத்தான் நான் சட்டக் கல்வியே பயின்றேன்” என்றார்.

கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறாத சமூகங்களின் மாணவர்களைக் கைதூக்கிவிடவே அரசு நிதியுதவி அளிக்கிறது. அந்தப் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது அந்தப் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும்.