
மாநில அரசும், ஒன்றிய அரசும் கல்விக்காக ஏராளமான உதவித் தொகைகளை (ஸ்காலர்ஷிப்) வழங்குகின்றன. ஆனால், அவை குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மாணவர் களுக்குப் போய்ச் சேர்வதில்லை. தமிழகத்தை நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்ற இந்த விழிப்புணர்வு மிக அவசியமாகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் குறித்த தகவல்களை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் சிறு முயற்சிதான் இந்த `ஊக்கமளிக்கும் உதவித் தொகைகள்' எனும் புதிய பகுதி!
‘`அரசுப் பள்ளிக்கூடங்களில், குறிப்பாக கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் வழங்குகிற உதவித்தொகைகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. படித்த பெற்றோர்களிடம்கூட இந்த விழிப்புணர்வு இல்லையென்பதால், ஆசிரியர்கள்தான் இதற்கான பொறுப்பை முன்னெடுத்து மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்’’ என்கிறார் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற கல்வியாளர் முனைவர் ராஜம்மாள். இந்த இதழில், லட்சக் கணக்கான மாணவர்களுக்கு கைகொடுக்கும் `நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்' (National Means Cum-Merit Scholarship - NMMS) உதவித்தொகை பற்றிச் சொல்கிறார்.
‘`ஒவ்வோர் ஆண்டும் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கான நுழைவுத்தேர்வை எழுதி, 200-க்கு 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தால், 9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை மாதம்தோறும் 1,000 ரூபாய் வீதம் வருடத்துக்கு 12,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். தொடர்ந்து நான்கு வருடங்கள் உதவித்தொகை தரப்படும் என்றாலும் இந்த நுழைவுத்தேர்வை ஒருமுறை எழுதினாலே போதும்.
நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள், 8-ம் வகுப்பில் எஸ்.சி/எஸ்.டி மாணவர்கள் 50% மதிப்பெண்ணும், மற்ற மாணவர்கள் 55% மதிப்பெண்ணும் பெற்றால், 9-ம் வகுப்பு படிக்கும்போது NMMS உதவித்தொகை கிடைத்துவிடும். இதே சதவிகிதத்தில் 9-ம் வகுப்பிலும் மதிப்பெண் பெற்றால், 10-ம் வகுப்பிலும் இந்த உதவித் தொகை கிடைக்க ஆரம்பிக்கும். 11-ம் வகுப்பிலும் உதவித்தொகை தொடர வேண்டு மென்றால், 10-ம் வகுப்பில் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் 50% மதிப்பெண்ணும், மற்றவர்கள் 60% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பிலும் NMMS உதவித்தொகை தொடர, 11-ம் வகுப்பில் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் 50% மதிப்பெண்ணும், மற்ற மாணவர்கள் 60% மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

யாரெல்லாம் இந்த உதவித்தொகையைப் பெற முடியும்?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களில் படிக்கிற 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் NMMS உதவித்தொகைக்கான தேர்வை எழுத முடியும்.
மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர், அவருடைய பெற்றோர் என மூவரிடமும் `பான் கார்டு’ இருக்க வேண்டும். சிங்கிள் பேரன்ட் என்றால் அம்மா/அப்பா, பிள்ளை என ஜாயின்ட் அக்கவுன்ட் இருக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பப் படிவத்தை scholarships.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து, ஸ்கேன் செய்து பூர்த்தி செய்து, உங்கள் பள்ளியின் ஒப்புதலோடு அனுப்ப வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் விண்ணப்பிக்க வேண் டும். தேர்வுகள் மாநில அளவில் நேரடியாக எழுதும் வகையில் நடத்தப்படுகின்றன.
நுழைவுத்தேர்வு பற்றி சில தகவல்கள்!
NMMS தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் வெற்றிபெற 8-ம் வகுப்புக்கான அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்தாலே போதும். தேர்வு முடிவுகளை மாநில தேர்வு அதிகாரிகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வெளி யிடுவார்கள்.