Published:Updated:

முதுநிலை பட்டப்படிப்பை இங்கிலாந்தில் படிக்கலாம்! விண்ணப்பிக்க வழிகாட்டல் #Education

முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு துறை படிப்புகளைப் படிக்கலாம். சமீபத்தில், 2020-2021-ம் கல்வியாண்டில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

இங்கிலாந்து அரசால் நிறுவப்பட்டது, `செவனிங் உதவித்தொகைத் திட்டம்’ (Chevening Scholarships). இந்தத் திட்டத்தின்கீழ் முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் பல்வேறு துறைப் படிப்புகள் படிக்கலாம். சமீபத்தில், 2020-2021-ம் கல்வியாண்டின் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

செவனிங் திட்டம்

இங்கிலாந்து தவிர்த்து பிற நாடுகளில் வசிப்பவர்கள், இங்கிலாந்தில் கல்வி பயின்று, தங்களுடைய சொந்த நாட்டில் பணியாற்றுவதற்கேற்ப, உயர்ந்த எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் வகையில், இங்கிலாந்து அரசால் 1983-ம் ஆண்டு `செவனிங் உதவித்தொகைத் திட்டம்’ (Chevening Scholarships) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், படிப்பு உதவித்தொகை (Scholarship) மற்றும் ஆய்வு உதவித்தொகை (Fellowship) எனும் இரு பிரிவுகளில் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

இந்திய மாணவர்கள்

செவனிங் திட்டத்தின்மூலம் இங்கிலாந்திலுள்ள 122 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் ஒரு வருடகால முதுநிலைப் பட்டப்படிப்புகள் படிக்கலாம்; இரண்டு அல்லது மூன்று மாதகால அளவிலான நிதி சேவைகள், இதழியல், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளையும் படிக்கலாம். இந்தத் திட்டத்தில், இந்தியாவிலிருந்து 120 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கான முழு படிப்புதவித்தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கத் தகுதி

இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். இங்கிலாந்தில் கல்விக்கான படிப்பை நிறைவுசெய்துவிட்டு இரண்டு ஆண்டுகளில் சொந்த நாடு திரும்புபவராக இருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்து இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும். இங்கிலாந்தில் படிப்பதற்குத் தேவையான ஆங்கில மொழித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழித் தகுதி குறித்த விவரங்கள், இந்த அமைப்பின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பட்டப்படிப்பு
பட்டப்படிப்பு

விண்ணப்பம்

http://www.chevening.org/india எனும் இணையதளத்துக்குச் சென்று, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்பாக, விண்ணப்பம் செய்வதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது செல்லத்தக்க கடவுச்சீட்டு (Valid Passport), தேசிய அடையாள அட்டை (National ID Card), பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் (University Transcripts and Degree Certificates) போன்றவற்றைப் பதிவேற்றம் செய்யவேண்டியிருக்கும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களிலிருக்கும் படிப்புகளில், அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ஏதாவது மூன்று படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 5-11-2019.

creativity
creativity

நேர்காணல் இணையதளத்தின் வழியாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, 2019-ம் ஆண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலத்தில் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவால் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வுசெய்யப்படும்.

2019-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல்வார காலத்துக்குள்ளாக இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரகம் / துணைத் தூதரக அலுவலகங்களில் நேர்காணலுக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர், பிப்ரவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நேர்காணலுக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

job
job

நேர்காணலுக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்கள், 25-2-2019-ம் தேதிக்குள் இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதன்பிறகு, 2-3-2019 முதல் 1-5-2020 வரையிலான காலத்தில் உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலிருந்து மாணவர்களுக்கான நேர்காணல்கள் அந்தந்த நாடுகளிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம் / துணைத் தூதரகம் / உயர் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெறும். இந்திய மாணவர்களுக்கான நேர்காணல் மேற்காணும் நாள்களுக்குள் ஒன்றாக இருக்கும்.

முடிவுகள்

நேர்காணலுக்குப் பிந்தைய முடிவுகள், 2020-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும். இங்கிலாந்து பல்கலைக்கழகங்களுக்கான கட்டுப்பாடற்ற அளிப்புகள் (Unconditional Offers) மற்றும் ஆங்கில மொழித் தேவைக்கான சந்திப்புகள் போன்றவை 16-7-2020-ம் நாளுக்குள் நிறைவு செய்யப்படும். செவனிங் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 2020-2021-ம் கல்வியாண்டிடுக்கான படிப்புகள் 2020-ம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும்.

கூடுதல் தகவல்களுக்கு...

http://www.chevening.org/india இணையதளத்தைப் பார்க்கலாம். அத்துடன், இந்த இணையதளத்திலிருக்கும் https://www.chevening.org/FAQs எனும் இந்த அமைப்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி-பதில்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

Vikatan