Election bannerElection banner
Published:Updated:

"அழுக்கா இருந்தாதான் ஆசிரியர்ன்னு ஏத்துப்பாங்க!" மலைப் பள்ளி ஆசிரியர்களின் அனுபவங்கள்

school students
school students

மலைப் பகுதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் அனுபவங்கள்.

ஆசிரியர் கேசவன் வேலை பார்க்கும் விளாங்கோம்பை பள்ளிக்குச் செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் குண்டேரி பள்ளம் அணையைக் கடந்து, டி.என்.பாளையம் வரை பேருந்து அல்லது மினி பஸ்ஸில் செல்ல முடியும். அங்கிருந்து தொடங்கும் வனப்பாதையில் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனம் அல்லது நடந்து சென்றுதான் விளாங்கோம்பை ஊரை அடைய முடியும். அந்தப் பாதையை எப்போதோ தார்ச்சாலை போட்டிருந்த அடையாளத்தை மட்டுமே பார்க்க முடியும். அந்தளவு சிதைந்திருக்கும். இடையில் நான்கு ஆறுகளையும் கடக்க வேண்டும். நீர் இல்லாவிட்டால் எளிதாகக் கடந்துவிடலாம், தண்ணீர் ஓடினால் ரொம்பவே சிரமம். இவற்றைக் கடந்தும் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. அந்தப் பாதையில் காட்டு விலங்குகள் திரியும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் மட்டுமே அந்தச் சாலையில் பயணிக்க முடியும்.

Teacher Kesavan
Teacher Kesavan

இப்படியான சாகசப் பயணத்தைக் கடந்துதான் ஆசிரியர் கேசவன் தான் பணிபுரியும் பள்ளிக்குச் செல்கிறார். ஆனால், தினமும் இப்படிச் செல்வது சாத்தியமில்லை. அதனால், திங்கள்கிழமை காலையில் உள்ளே செல்பவர் வெள்ளி மாலைதான் அங்கிருந்து வருகிறார். 50-க்கும் குறைவான குடும்பங்களே அங்கு வாழ்கின்றனர். அடிப்படை வசதிகளான ரேஷன் கடையோ, மருத்துவ உதவியோ அங்கு இல்லை. இவ்வளவு சிரமங்களைக் கடந்துசெல்வது அரசுப் பள்ளிக்குக்கூட அல்ல. அரசுப் பள்ளிகள் இல்லாத இடங்களில் தன்னார்வ அமைப்புகள் தொடங்கும் அல்லவா. அப்படி, ‘சுடர்’ என்ற அமைப்பின் முயற்சியால் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில்தான் கேசவன் பணிபுரிகிறார்.

திங்கள்கிழமை காலையில் ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாக வந்தாலும் ஊரில் உள்ளவர்கள் ஏன் என்னாச்சு என்று பதறிவிடுகிறார்கள்
கேசவன், ஆசிரியர்
Kesavan and Students
Kesavan and Students

கேசவனைப் பார்த்தால், நமது ஊரில் பார்க்கும் நேர்த்தியாக உடை உடுத்தியிருக்கும் ஆசிரியர்களின் தோற்றத்தில் இருக்க மாட்டார். ஏனென்றால், அந்தக் கிராமத்து மனிதர்களின் தன்மையோடு இருக்கும் ஆசிரியர்களையே அங்குள்ள குழந்தைகள் ஏற்றுக்கொள்கிறார்களாம். "நான் இந்தப் பள்ளியில் ஐந்தாண்டுகளாயிற்று. முதலில் கிராமத்துப் பெரியவர்களே என்னை ஏற்றுக்கொள்ள யோசித்தார்கள். பிறகு, மெல்ல மெல்ல குழந்தைகள் வரை நான் பழகிக்கொண்டேன். ஒவ்வொரு குழந்தையின் வீட்டுக்கும் சென்றுதான் அழைத்து வர வேண்டும். இது பழகப் பழக அவர்களே வந்துவிடுகிறார்கள். இப்போ, நான் இந்த ஊரில் ஒருவனாகிவிட்டேன். திங்கள்கிழமை காலையில் ஏதோ ஒரு காரணத்தால் தாமதமாக வந்தாலும் ஊரில் உள்ளவர்கள் ஏன் என்னாச்சு என்று பதறிவிடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் முதன்முறையாகக் கல்வி பெற வரும் ஒரு குழந்தைக்கு நான் உதவுகிறேன் என்பதைவிட வேறென்ன பெருமையும் நிம்மதியும் கிடைத்துவிடப்போகிறது" என்று பெரிய விஷயத்தை மிகச் சாதாரணமாகப் பேசுகிறார். குழந்தைகளும் அவரிடம் சக மாணவரைப்போல விளையாடி மகிழ்கின்றனர்.

ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களிடம் உடனே நேர்காணல் செய்ய மாட்டேன். முதலில், பள்ளியை நேரடியாகச் சென்று பாருங்கள் என்றுதான் சொல்வேன்.
'Sudar' Natarajan
'Sudar' Natarajan

சுடர் அமைப்பின் தலைவர் நடராஜன், மலைப்பகுதிப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் நிலை பற்றி விவரிக்கிறார். "கல்வி பெறவேண்டிய குழந்தையின் இருப்பிடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தொடக்கப் பள்ளி இருக்கவேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், அவ்வாறு சமவெளிப் பகுதிகளிலேயே முழுமையாக இருப்பதில்லை. மலைப்பகுதிகளில் என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால், இங்குள்ள குழந்தைகளுக்கு மிகவும் கல்வி அவசியம். ஏனென்றால், இங்கு அதிகளவில் குழந்தைத் திருமணம் நடக்கிறது; பெற்றோர் வெளியூருக்கு ஒரு மாதம் இரண்டு மாதம் என வேலைக்குப் போகும்போது பிள்ளைகளை அழைத்துச் சென்று, குழந்தைத் தொழிலாளியாக்கி விடுகின்றனர். இவை தடுக்க நிச்சயம் கல்வி வேண்டும்.

அங்குள்ள பெற்றோர்களிடம் பேசி, அவர்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதுதான் முதல் பணி. தினந்தோறும் பள்ளிக்கு, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை அழைத்துவர வேண்டும்.
school students
school students

அரசுப் பள்ளிகள் இல்லாத நிலையில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளைத் தொடங்கினோம். அதற்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களிடம் உடனே நேர்காணல் செய்ய மாட்டேன். முதலில், பள்ளியை நேரடியாகச் சென்று பாருங்கள் என்றுதான் சொல்வேன். பள்ளி என்றதுமே காலை தொடங்கி மாலையில் முடிவடையில் சமவெளிப் பள்ளிகள்போல அல்ல அவை. அது சின்ன கட்டடம். அதைச் சுற்றியுள்ள வீடுகளுக்குச் சென்று அங்குள்ள பெற்றோர்களிடம் பேசி, அவர்களின் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதுதான் முதல் பணி. தினந்தோறும் பள்ளிக்கு, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை அழைத்து வர வேண்டும். ஒரு மாணவர் பள்ளியின் அருகே இருந்தால், இன்னொருவர் மூன்று கிலோமிட்டர் தொலைவில் இருப்பார். எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடனே பாடங்களை நடத்தத் தொடங்கிவிட முடியாது. அவர்கள் சாப்பிட்டார்களா... இயல்பான சூழல் வீட்டில் நிலவுகிறதா... உடல்நிலை சீராக உள்ளதா என்பது தொடங்கிப் பல விஷயங்களைக் கேட்டறிய வேண்டும்.
school students
school students

மாணவர்கள் பள்ளிக்கு வந்தவுடனே பாடங்களை நடத்தத் தொடங்கிவிட முடியாது. அவர்கள் சாப்பிட்டார்களா... இயல்பான சூழல் வீட்டில் நிலவுகிறதா... உடல்நிலை சீராக உள்ளதா என்பது தொடங்கிப் பல விஷயங்களைக் கேட்டறிய வேண்டும். இவையெல்லாவற்றையும்விட முக்கியமானது அக்குழந்தையும் ஊர்க்காரர்களும் உங்களை நட்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றுவதில் வெற்றி பெற முடியும். விளாங்கோம்பை கிராமத்தில் பத்தாண்டுகளுக்கு முன் பள்ளித் தொடங்கியபோது பிரபு என்பவர் ஆசியராகப் பணியாற்றச் சென்றார். ஓரிரு மாதங்களில் அவ்வூரின் ஒருவராக மாறிவிட்டார். சில ஆண்டுகள் கழித்து அரசுப் பணி கிடைத்தாலும் இப்போது அவரை நினைவில் வைத்திருக்கின்றனர் கிராமத்தினர். தற்போது பணிபுரியும் கேசவன் அந்த இடத்தை மிகச் சரியாக நிரப்பி வருகிறார்.

அந்தியூர் ஒன்றியத்தின் சுண்டைப்போடு கிராமப் பள்ளியில் மாரப்பன் என்பவர் பணிபுரிந்துவந்தார். வழக்கமாகப் பள்ளிக்கு வரும் மாணவன் சில நாள்களாக வரவில்லை. என்ன காரணம் என்று பார்க்கும்போது, தினமும் அரைப்படி அரிசி கொடுத்துவந்தது நின்றதும், பள்ளிக்கு வருவதும் நின்றுவிட்டது. அந்தளவு வறுமையான சூழல் நிலவும் பகுதி. கேசவன், பிரபு, தனபால், பெரியசாமி எனப் பல ஆசிரியர்கள் தங்கள் வருமானத்தை விடவும் இக்குழந்தைகளுக்குக் கல்வி அளிக்க வேண்டும் என்பதால்தான் இந்தப் பணிக்கு வருகின்றனர். வேலைக்குச் சேரும்போது 1,500 ரூபாய்தான் கிடைக்கும். நாளடைவில் மத்திய அரசு 7,000 ரூபாய் என்று உயர்த்தியுள்ளது. பி.எட், எம்.எட் படித்தவர்களுக்கு இது மிக மிகக் குறைவு. இவர்கள்போல அர்ப்பணிப்போடு இயங்கவில்லை என்றால், இந்தப் பகுதி மாணவர்களுக்குக் கல்வி என்பது கனவாகத்தான் இருக்கும்" என்கிறார் 'சுடர்' நடராஜன்.

school students
school students

ஆசிரியர்களின் முதல் தகுதி குழந்தைகளை நேசிப்பது. இந்த ஆசிரியர்களுக்கு அது தன்னியல்பாக அமைந்திருப்பது வாழ்த்துகளுக்கு உரியது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு