Published:Updated:

கற்றனைத் தூறும் அறிவு: புதிய தொடர்:

மழலையர் கல்வியும் தேசிய கல்விக் கொள்கையும்!

பிரீமியம் ஸ்டோரி

நாடு சந்திக்கும் எந்தச் சிக்கலுக்குமான தீர்வு ‘இங்கே அடிப்படைக் கல்வி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்’ என்பதில்தான் இருக்கிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையா... கல்வி முறையில் மாற்றம் வேண்டும்! சமூக வன்முறையா... கல்விதான் அதற்கும் தீர்வு. இப்படியான கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்போது அது அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைகிறதா? அண்மையில் டாக்டர் கி.கஸ்தூரிரங்கன் தலை மையிலான கமிட்டியின் புதிய கல்விக் கொள்கை வரைவு, வரவேற்பையும் பல தரப்பட்ட விமர்சனங்களையும் ஒருங்கே சந்தித்து வருகிறது. அதைப் பற்றி அலசும் தொடர் இது!

ஒரு நாட்டின் மிகப்பெரிய வளம் கல்வி. அதில் மிக முக்கியப் பகுதி, ஆரம்பக் கல்வி. பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டுக்கு ஒட்டுமொத்தத் தீர்வாக புதிய தேசியக் கல்விக் கொள்கையை முன்வைக்கின்றது மத்திய அரசு. ஒவ்வொரு மாநிலங்களின் கல்விச்சூழல் வெவ்வேறாக இருக்கும் நிலையில், கல்வி சார்ந்த கொள்கைகளை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுப்பதே சரியாக இருக்கும். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றம் கண்ட சூழலில், புதிய கல்விக் கொள்கை வரைவை மக்களின் கருத்துக் கேட்புக்காக பொதுவில் முன்வைத்திருக்கிறது மத்திய அரசு.

கொள்கை வரைவில் முதல் அம்சமாக முன்வைப்பது முன்மழலைக் கல்வி. மூன்று வயது முதல் ஆறு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் இனி கல்வி வழங்குவது அரசின் கடமை என்கிறது வரைவு. ‘அவர்களுக்கான பாடத்திட்டத்தை இனிமேல் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கும். அத்துடன், முன்மழலையர் அங்கன்வாடிகள் ஏற்கெனவே இயங்கும் தொடக்கப் பள்ளிகளுடன் இணைக் கப்படும்’ என்றும் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆறு வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் கிடைக்கவேண்டும் என்பதை, ‘மூன்று முதல் 18 வயது வரையிலான பிள்ளை களுக்காக...’ என நீட்டிக்கிறது. இது உண்மையில் வரவேற்கத்தக்கது.

கற்றனைத் தூறும் அறிவு: புதிய தொடர்:

ஆனால், முன்மழலைக் கல்வியை அரசு கிட்டத்தட்ட முதலீடாகவே பார்க்கிறது. மேலும், அவர்களுக்கான கல்வியைக் ‘கடமை’ என்பது தவறான சொல்லாடலும்கூட. அவர்களுக்கான கல்வியில் ஒரு ரூபாய் முதலீடு செய்தால், அது பத்து ரூபாய் அளவுக்குத் திரும்பப் பெறப்படும் என்ற வரிகளுடனே அவர்களின் திட்ட வரைவு தொடங்குகிறது. குழந்தையின் ஆறு வயதில்தான் மூளை 85 சதவிகிதம் வளர்ச்சி அடைகிறது. அதனால் மூன்று வயது முதலே அதன் அத்தனை வளர்ச்சிக்கும் வித்திடவேண்டும். அது பள்ளிகளில்தான் ஆரம்பமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக அளவில் எல்லா நாடுகளுமே இந்தப் பார்வைக்குச் சென்று பல ஆண்டுகள் ஆகின்றன. பெல்ஜியம், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இரண்டு வயது முதலே குழந்தையின் வளர்ச்சியில் பங்கெடுக் கின்றன. முறையான முன்மழலைத் திட்டமும் அங்கே அமலில் உள்ளது. பின்லாந்து நாட்டில் முன்மழலையர் பள்ளிகளில் குழந்தைகளைக் கையாள ஒவ்வொருவரும் தனி ஆய்வினையே மேற்கொள்கின்றனர். அங்கே முன்மழலைகளுக்கு விளையாட்டு முறையில் தங்கள் மண் சார்ந்த விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன.

இங்கே பிரச்னை... கொள்கை ஒன்று பேசும்; திட்டம் ஒன்று பேசும்; நடைமுறை வேறாக இருக்கும். கடந்த ஆண்டு முன்மழலையர் பள்ளிக்கான பாடத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருந்தது. அது இரண்டு முதல் மூன்று வயதினருக்கான பாடத்திட்டம். காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த வகுப்புகள் இருக்கும்.

பாடத்திட்டம் பற்றி பொதுமக்கள் கருத்து கூறவும் கால அவகாசம் கொடுத்திருந்தார்கள். அடிப்படையில் இவ்வளவு நெருக்கடியான வகுப்புகள் முன்மழலைகளுக்குத் தேவையே இல்லை. இது கற்றல் மீதான ஆர்வத்தைத் தூண்டாமல் பாரமாக்கிவிடும். பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் கே.ஜி வகுப்புகளுக்கு நிகழ்ந்தன. ஆனால், மழலைகளுக்கான அறைகள் ஒதுக்கப் படவில்லை; ஆசிரியர்கள் வரவில்லை; உணவு ஏற்பாடுகள் சரவர இல்லை; விளையாட்டுப் பொருட்களுக்கும் மகிழ்வான வகுப்பறைக்குமான ஏற்பாடுகளும் இல்லை. என்ன புத்தகங்களை வாசிக்கப்போகிறார்கள் என்ற வழிகாட்டுதலும் இல்லை. கொள்கையிலேயே நிறைய சிக்கல்கள் இருந்தால், திட்டமிடுதலும் நடைமுறைப் படுத்தலும் இன்னும் சிக்கலாகிவிடும் என்பதற்கு தமிழக அரசு நடைமுறைப் படுத்திய முன்மழலை பாடத்திட்டம் ஓர் உதாரணம்.

மழலையர்களுக்கான பள்ளி... சரியான பார்வையா?

‘முன்மழலைக் குழந்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும்; இவர்களின் வளர்ச்சி மிக முக்கியமானது’ என்று வரைவில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கான ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த ஆசிரியர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல் இயலில் குறிப்பிட்டிருக் கிறார்கள். ஆனால், நிதி ஒதுக்கீட்டிலேயே சிக்கல். அங்கன்வாடி ஊழியர்களுக்கான இருபது நாள் பயிற்சிக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி என்றால் பாரம் என்ற கருத்தே நிலவிவருகிறது. முன்மழலையர் பள்ளி என்பதைவிட, இவை குழந்தைகள் வளர்ச்சி மையங்களாகவே இருக்க வேண்டும். இவர்களுக்கு எவ்வாறு கற்பிக்கப்போகிறார்கள், என்ன கற்பிக்கப்படவேண்டும் என்று நுணுக்கமாக வரையறுக்கவேண்டும்.

தற்சமயம் நிலவும் கட்டமைப்பைவிட இன்னும் மிக பிரமாண்ட கட்டமைப்பு தேவை என்று வரைவில் குறிப்பிடப் பட்டுள்ளது. கட்டடம், பொருட்கள், விளையாட்டு இடம் இன்ன பிற கட்டமைப்புகளும் விரிவாக்கத்தில் அடக்கம். ஆனால் நடைமுறை என்ன? இன்னும் 50 சதவிகிதத்துக்கும் மேலான பள்ளிகளில் கழிவறை வசதிகள் கிடையாது, கட்டடங்கள் சீரமைக்கப்படவில்லை.

பள்ளியில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முன்னெடுப்பில், ஆங்காங்கே சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. கல்விச்சீர் என்று மக்களிடமே அரசு உதவி கேட்கின்றது. கடந்த மே 28-ம் தேதியன்று தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் மாணவர்கள் மற்றும் என்.ஜி.ஓ-க்களிடம் ‘பள்ளிகளின் கட்டமைப்புக்கு உதவுங்கள்’ என்கிறார். அதாவது, இருக்கும் பள்ளிகளுக்கே செலவு செய்ய மனமில்லை என்று அரசு சூசகமாகவும் அப்பட்டமாகவும் சொல்கின்றது.

தனியார் மயமோ?

ஏற்கெனவே இயங்கும் அங்கன்வாடிகள் மற்றும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்தவே இந்தப் பகுதி பேசுகிறது. அங்கன்வாடிகளை உருவாக்குவதையும், அதனை ஏற்கெனவே இயங்கும் தொடக்கப்பள்ளி வளாகங்களுடன் எப்படி இணைப்பது என்பதையும் வரைவு கூறுகிறது. இதில் அரசு எவ்வளவு சிரத்தை எடுக்கும் என்பதும் கேள்விக்குறியே. ஏனெனில், கல்வி உரிமைச்சட்டத்தில் கட்டாயக் கல்வி மூன்று வயது முதல் என்று சொல்லிவிட்ட பின்னர், பள்ளிகளை பெருவாரியாகத் தொடங்கவில்லையெனில், ஏற்கெனவே இருக்கும் தனியார் பள்ளிகளிலேயே மாணவர்கள் சேருவார்கள். ஒருேவளை இந்த மொத்த ஏற்பாடும் அதற்குத்தானோ என்ற சந்தேகமும் வலுவாகவே எழுகிறது.

ஆரம்ப மொழி!

‘மூன்று வயது முதல் எட்டு வயது வரையிலான குழந்தைகள் கட்டாயமாகத் தங்கள் தாய்மொழியில் கற்கவேண்டும்; அப்போதுதான் இலகுவாக கற்பார்கள்’ என்று வரைவு முழுக்கவே பேசுகிறார்கள். ஆனால், நடைமுறையில் இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. உதாரணமாகத் தமிழக அரசு ஆரம்பித்திருக்கும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளில் (இப்போது வரப்போகும் மூன்று முதல் ஆறு வயதினருக்கான வகுப்புகளை எவ்வாறு அழைக்கப்போகிறார்கள் என்று எந்தக் குறிப்பும் இல்லை, நம் வசதிக்காக அவை ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி என்று வைத்துக்கொள்வோம்) தமிழிலும் ஆங்கில வழியிலும் கற்கலாம் என்று அறிவித்திருந்தாலும், களநிலவரப்படி கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஆங்கில வழிக் கல்வியிலேயே மாணவர் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

எப்படிப்பட்ட கவனிப்பு தேவை?

முன்மழலையருக்கான கவனம் நிச்சயம் தேவை. அரசே இதனை ஏற்று நடத்தவேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மூன்று முதல் எட்டு வயது வரையிலான கல்வியில் கட்டாயமாக இடமில்லை என்று வரையறுக்க வேண்டும். மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கானதைப் பள்ளி என அழைக்காமல் வளர்ச்சி மையங்கள் என்றே அழைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு, ஊட்டச்சத்து ஆகியவற்றை அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு ஏற்ப, உணவு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப அமைத்திட வேண்டும். தீவிர கவனத்துடன் இவர்களுக்கான பாடத்திட்டம் வகுத்திட வேண்டும். முன் மழலைக்கல்வி, கல்வி என்னும் ஆணிவேரின் தொடக்கம். அதனால், தாய்மொழியிலேயே கட்டாயம் அமைந்திட வேண்டும். தமிழகத்திலும் இந்திய அளவிலும் முன்மழலையர் கல்வி பற்றிய உரையாடல் மற்றும் பேச்சுகளுக்கான களங்களை உருவாக்க வேண்டும். நகரச்சூழல் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே குழந்தை களை பெரும்பாலும் இரண்டு வயது முதலே பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். இவர்களைக் கையாளும் ஆசிரியர்களுக்கு அரசு போதிய பயிற்சிகளை அளித்தல் அவசியம். குழந்தை களிடம் தென்படும் குறைபாடுகளை முன்பே அறிந்து, அதற்கு ஏற்ப வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

மிக முக்கியமாக, இந்தக் கொள்கைகளை மாநில அரசுகளே தங்கள் வளர்ச்சிகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கும் சுதந்திரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்!

விழியன், சிறார் எழுத்தாளர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு