Published:Updated:

கற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி!

கற்றனைத் தூறும் அறிவு
பிரீமியம் ஸ்டோரி
கற்றனைத் தூறும் அறிவு

ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்

கற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி!

ஓவியா, சமூகச் செயற்பாட்டாளர்

Published:Updated:
கற்றனைத் தூறும் அறிவு
பிரீமியம் ஸ்டோரி
கற்றனைத் தூறும் அறிவு

புதிய கல்விக்கொள்கைக்கான 2019-ம் ஆண்டின் வரைவு அறிக்கை, பல்வேறு கோணங்களிலும் எதிர்வினைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சரி, பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இந்த வரைவு என்ன கூறுகிறது என்பதைப் பார்க்கலாம்.

அறிக்கையில், பெண் குழந்தைகளைப்பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக, `இடைநிற்றல் குழந்தைகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள்தான்’ என்கிறது வரைவு. அதற்கான காரணங்களாக குழந்தைத் திருமணம், ஈவ்டீஸிங், பாலியல் வன்முறை மற்றும் வன்கொடுமைகள் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. பள்ளிகளில் பெண்களுக்கான கழிவறை வசதிகள் இல்லை என்பது வரை, பெண் கல்வியிலுள்ள பிரச்னைகளை நுட்பமாகப் பதிவுசெய்கிறது புதிய கல்விக்கொள்கை வரைவு. பிரச்னைகளைப் பட்டியலிடுவதைவிட, அதற்கான தீர்வுகளைச் சொல்வது தானே சரி? ஆனால் புதிய கல்விக்கொள்கை, நம் முன்வைக்கும் தீர்வுகள் ஏற்புடையதாக இல்லை.

கற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி!

‘அனைவருக்கும் சமத்துவமான கல்வி’ என்ற தலைப்பில் பெண் கல்வியில் நாம் அடைய வேண்டிய இலக்குகளைப்பற்றி ஆறாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தீர்வுகள்தான் தலைச்சுற்றவைக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநில அரசு ஒரு நிதியை உருவாக்க வேண்டுமாம். அந்த நிதியின் முதல் பகுதி, மத்திய அரசு ஆணைப்படி பெண் கல்விக்கான நலத் திட்டங்களுக்குச் செலவழிக்கப்படுமாம். அதாவது, பெண்களுக்கான கழிவறை வசதி, நாப்கின் வழங்குதல், சைக்கிள் வழங்குதல், பண உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் இனி இந்த நிதியின் மூலம்தான் நிறைவேற்றப்படும் என்கிறார்கள். என்னென்ன நலத்திட்டங்கள் என்பதை, மத்திய அரசுதான் வகுக்கப்போகிறது.

செயல்படுத்துவது மட்டும்தான் மாநில அரசு என்று சொல்கிறார்கள். அதிலேயே பல முரண்பாடுகள் இருந்தாலும், மாநில அரசு உருவாக்க வேண்டிய நிதி எங்கிருந்து, எதிலிருந்து வரும் என்பதைச் சொல்லவில்லை.

12-ம் கிரேடு முடித்த பிறகு பொதுத் தேர்வுகள் வாயிலாகவே கல்லூரிப் படிப்பு எனில், கிராமப்புற மாணவியரின் கல்வி, பள்ளிப் படிப்புடன் முடிந்துவிடக் கூடிய அபாயமும் உண்டு.

இந்த நிதியின் இரண்டாவது பகுதி, உள்ளூர் அமைப்புகள் அதாவது ‘வகுப்புரீதியான அமைப்புகளுக்கு’ (community based organisations) நிதி தரப்பட்டு, அந்தந்த வகுப்புகளில் உள்ள பெண்களின் படிப்புக்குச் செலவிடப்பட வேண்டும் என்கிற பொருளில் கூறப்பட்டிருக்கிறது. ‘வகுப்புரீதியான அமைப்புகள்’ என்பதை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது, சாதிச் சங்கங்கள் என்றா? அப்படியெனில், சாதிச் சங்கங்களுடன் மத்திய/மாநில அரசுகள் நேரடியாகத் தொடர்பு வைத்துக்கொள்ளுமா? தங்கள் சாதிப்பெண்கள், தங்களுக்கும் தங்கள் சாதியில் உள்ள பிற்போக்குத் தனமான நடைமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர் களாகவே இருக்க வேண்டும் என்ற வெறியுடன் இன்று பல்வேறு சாதி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில், சாதி அமைப்புகள் மூலம் பெண் கல்வியை இவர்கள் வளர்த்துவிடுவார்களா? சரி... அந்தச் சொற்றொடர் சாதிச் சங்கங்களைக் குறிக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். அப்படியெனில், அந்த வார்த்தைகள் வேறு எதைக் குறிக்கின்றன? அதற்கு இந்த அறிக்கையில் பதில் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து, பெண்களின் பாதுகாப்புப்பற்றி உணர்வுபூர்வமாகப் பேசுகிற இந்த அறிக்கை, அதற்கான தீர்வு என்று வரும்போது, ‘உதவி அலைபேசி எண் தருவோம்’ என்று மட்டும் சொல்கிறது. இங்கே உதவி அலைபேசி எண்களுக்கா பஞ்சம்?! மேலும், `அருகில் இருக்கும் பள்ளிகள்’ என்ற கொள்கையைக் கைவிட்டு, மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளை ஓரிடத்தில் ஒருங்கிணைத்திட வேண்டும் என்கிறது அறிக்கை. அப்படி தொலைதூரத்தில் அமையும் பள்ளிகளுக்கு, பெண் குழந்தைகள் செல்ல சைக்கிள் தருவோம் என்றும் சொல்கிறார்கள். தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் ஏற்கெனவே இருக்கிறது. தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்காக இங்கே விலையில்லா சைக்கிள் கொடுக்கப் படவில்லை. ஏழை மாணவ-மாணவிகளுக்கு சுதந்திரத்தின் சிறகுகளைப் பரிசளிப்பதற்காகவே இங்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. பாதுகாப்புப்பற்றிப் பேசும் இவர்கள், பள்ளிகள் தூரமாக அமைக்கப்பட்டால் அங்கு செல்லும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது; அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா என்பதையெல்லாம் துளியும் யோசிக்கவில்லை.

அடுத்ததாக, `பட்டியல் சமூக மாணவ, மாணவிகளில் சிறப்பாகப் படிப்பவர்களை, உள்ளூரிலேயே ஆசிரியர்களாகப் பணிக்கு அமர்த்திட வேண்டும்’ என்கிறது வரைவு. இது அவர்களுக்கான நிபந்தனையாக அல்லது அரசின் ஆணையாக மாறுமெனில், அந்த மாணவர்களின் வளர்ச்சியைத் தடைசெய்யும் அபாயமும் இதில் ஒளிந்திருக்கிறது. பெண்கள் மற்றும் திருநங்கையரை உள்ளடக்கிய பாலினப் புரிந்து கொள்ளலுடன்கூடிய பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும், கல்வி வளாகங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் ஆகிய பரிந்துரைகளை முன்வைப்பது பாராட்டுக்குரியது. பாலியல் கல்வியைக் குறித்தும் அறிக்கை பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், நமக்கு அறிக்கையின் குறிக்கோள் வாசகத்திலேயே குழப்பம் ஏற்படுகிறது, ‘21-ம் நூற்றாண்டின் உலகு தழுவிய லட்சியத்தை எட்டுவதற்கான கல்விக்கொள்கை’ என்று தன்னை முன்னிறுத்திக்கொள்கிற ஒரு கல்விக்கொள்கை, இந்தியாவின் தொன்மங்களின் வேரிலிருந்துதான் அந்தப் பயணத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கிறது. அந்தத் தொன்மங்களை, சம்ஸ்கிருத இலக்கியம் கற்றுத்தருவதன் வாயிலாக அடையப்போவதாகவும் சொல்கிறது. இந்திய மொழிகளுக்கு மூலமொழி சம்ஸ்கிருதமா என்கிற அரசியலுக்குள் நான் போகவில்லை. ஆனால், ஆயக்கலைகள் 64 என்று இவர்கள் பூரிக்கும் கலைகள் இந்த அறிக்கை முன்வைக்கும் பாலின சமத்துவப் பார்வைக்கு நேர்மறையான பங்களிப்பைத் தருமா அல்லது எதிர்மறையான பங்களிப்பைத் தருமா என்பதை விவாதிக்க வேண்டியது முக்கியம்.

கற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி!

தேசியக் கல்விக்கொள்கை வழிகாட்டுதல் மூலம் வகுக்கப்படும் பாடத்திட்டத்தில் மட்டும் காளிதாசர், பாசாவின் காப்பியங்கள் எல்லாம் பெண்ணுரிமை பேசப்போகின்றனவா? பாலியல் கல்வி என்பதை ‘காமசூத்திரம்’ என்று மொழிபெயர்க்கப்போகிறார்களா? இவற்றையெல்லாம் தனிப் பாடமாகத் தேர்ந்தெடுத்து மாணவர்கள் படித்தால் அது வேறு விஷயம். ஆனால், இந்தப் படிப்புகளை அனைத்து மாணவர்களும் படிக்கும் வகையில் பொதுப்பாடங்களாக வைக்க வேண்டும் என்று இந்தக் கல்விக்கொள்கை முன்னிறுத்துகிறது. அறிவியலுக்கும் கலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழித்து அவற்றை இணைக்கும் பாடத்திட்டமாக இது இருக்க வேண்டும் என்கிற பார்வையை இந்தக் கொள்கை முன்வைக்கிறது. அறிவியல் கண்கொண்டு கலைகளைப் புரிந்துகொள்வதே இன்றைய தேவை. கலைகளுக்குள் அறிவியலைத் தேடினால் அது அபத்தம்.

சோதனைகள் மிகுந்த பாதையில் தத்துவம் மற்றும் கலைகள் வாயிலாக மனித சமுதாயம் ஒவ்வொரு காலகட்டத் திலும் உருவாக்கிய நம்பிக்கைகளைத் தகர்த்துதான் அறிவியல் பயணப்படுகிறது. பல விஞ்ஞானிகள் உயிரைக்கொடுத்து நிரூபித்திருக்கும் உண்மை இது. மேலும், உலகில் உள்ள எந்தக் கலையும் இன்று வரை பெண்களுக்கானதாக இல்லை. கடந்தகாலக் கலைகளையும், ஆணாதிக்கத்தையும் தூக்கிப் பிடிக்கும் பாடத்திட்டம், பெண்களுக்கு என்ன நீதியை வழங்கிவிடும்? பெண்களுக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எந்தப் பிரிவினருக்குமே மையப்படுத்தப் பட்ட கல்வி நன்மை பயக்காது.

கற்றனைத் தூறும் அறிவு: கேள்விக்குறியாகும் பெண் கல்வி!

மொத்தத்தில் இந்தக் கொள்கை மூலம் தொலைவில் செல்லும் பள்ளிகளால் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. குழந்தைப் பருவத்திலேயே சந்திக்கப்போகும் பொதுத்தேர்வுகளும், அவற்றில் ஏற்படப் போகும் முடிவுகளும் பெண் குழந்தைகளை மேலும் முடக்கிப்போடும். 12-ம் கிரேடு முடித்த பிறகு பொதுத் தேர்வுகள் வாயிலாகவே கல்லூரிப் படிப்பு எனில், கிராமப்புற மாணவியரின் கல்வி, பள்ளிப் படிப்புடன் முடிந்துவிடக் கூடிய அபாயமும் உண்டு.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, பெண்ணியவாதிகள் மட்டுமல்ல... பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவரும் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்க வேண்டியது அவசியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism