Published:Updated:

நீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்!

நீட்
பிரீமியம் ஸ்டோரி
நீட்

#KnowNeetNoNeet

நீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்!

#KnowNeetNoNeet

Published:Updated:
நீட்
பிரீமியம் ஸ்டோரி
நீட்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரத்தை, பிரதமர் நரேந்திர மோடி ‘கல்விக்கான காசி’ என்று மக்களவையில் புகழ்ந்தார். அவ்வளவு புனிதமான நகரமா அந்தக் கோட்டா?

ஐ.ஐ.டி-களில் சேர்வதற்கான ஜே.இ.இ, நீட் போன்ற தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் கொள்முதல் சந்தைதான், கோட்டா. வி.கே.பன்சால் என்பவர், ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். ‘மஸ்குலர் டிஸ்ட்ரோபி’ எனப்படும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலிக்குள் முடங்கியது அவரது வாழ்க்கை. வாழ்வாதாரத்துக்காக, அவரது வீட்டின் டைனிங் ரூமில் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். 1983-ம் ஆண்டில் ‘பன்சால் கிளாஸஸ்’ என்ற பெயரில், எட்டு மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பயிற்சி மையம்தான் விதை. அதன் பிறகு, புற்றீசல்போல் அந்த நகரெங்கும் பயிற்சி மையங்கள் தோன்றின. கோட்டா என்றாலே ‘கோச்சிங் ஹப்’ என்றாகிப்போனது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை தி.நகரில் துணிக்கடைகள் இருப்பதுபோல், கோட்டா நகரத்து சந்துபொந்துகளிலெல்லாம் கோச்சிங் மையங்கள். வருடந்தோறும் சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத்தேர்வுகளுக்காக இங்கே பயிற்சி எடுத்துக்கொள்ள வருகின்றனர். பயிற்சிக்கான கட்டணம், எண்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை. தங்குமிடம், உணவு, போக்குவரத் துக்கான செலவுகள் எல்லாம் தனி. பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளையை நம்பர் 1 ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசையில், கோட்டா நகரிலேயே குடும்ப சகிதமாகக் குடியேறிவிடுகிறார்கள். இப்படி, ஒரு வருடத்துக்கு கோட்டா நகரத்து கோச்சிங் மையங்கள் ஈட்டும் தொகை மட்டும் 600 கோடி ரூபாய்! கோட்டா மட்டுல்ல, டெல்லியின் முகர்ஜி நகர், ராஞ்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் என நிறைய நகரங்களில் கோச்சிங் பிசினஸ் களைகட்டுகிறது. வண்ண வண்ண வார்த்தைகள் சொல்லி, பெற்றோரையும் மாணவர்களையும் வளைக்கும் இந்தப் பயிற்சி மையங்கள் கற்றுத்தருவதென்னவோ வெறும் குறுக்குவழி டெக்னிக்குகளை மட்டும்தான். அதற்கான சான்று, இந்த உரையாடல்!

நீட்
நீட்

சென்னையின் டாப் 10 நீட் கோச்சிங் மையங்களில் ஒன்றை தொடர்புகொண்டு, ‘பயிற்சியில் சேர வேண்டும்’ என்று கூறினேன். அந்த உரையாடலைக் கேளுங்கள்.

நான்: சார், எனக்கு டாக்டர் ஆகணும்கிறது கனவு. எந்த மாதிரி கோச்சிங் எடுத்துக்கிட்டா நீட்ல பாஸாக முடியும்?

பயிற்சி மையம்: ஒரு வருடப் பயிற்சி சரியா இருக்கும்மா. அதுல சேர முடியலைன்னா மூணு மாச கோர்ஸ் இருக்கு. அதுகூட ட்ரை பண்ணலாம்.

நான்: அதென்ன சார் மூணு மாச கோர்ஸ்?

பயிற்சி மையம்: சிலர் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியில வீக்கா இருப்பாங்க. அவங்களுக்கு பயாலஜி மட்டும் கோச் பண்ணுவோம். கூடவே கொஞ்சம் டெக்னிக் கத்துக்கொடுப்போம். அந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணினா, கண்டிப்பா நீட்ல பாஸ் பண்ணிடலாம்.

நான்: என்ன மாதிரி டெக்னிக் சார்?

பயிற்சி மையம்: எல்லாத்தையும் போன்ல சொல்ல முடியாதும்மா. நெகட்டிவ் மார்க்கைத் தவிர்க்கிற வழிமுறைகள், கேள்விகளைக் கையாள்ற வழிகளையெல்லாம் சொல்லித் தருவோம்.

நான்: அதுமூலமா கவர்மென்ட் காலேஜ் கிடைக்குமா சார்?

பயிற்சி மையம்: வாய்ப்பே இல்லம்மா... நீங்க சப்ஜெக்ட்ல ஸ்ட்ராங்கா இருந்தா பேசிக்கான மார்க் வாங்கி பாஸ் பண்ணலாம். கவர்மென்ட் காலேஜ் போகணும்னா ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ கோச்சிங் வேணும்.

நான்: ஃபீஸ் எவ்வளவு சார்?

பயிற்சி மையம்: அது ஒவ்வொருத் தருக்கும் மாறும். நீங்க வெளியூர்லயிருந்து வந்து தங்கிப் படிக்கிறீங்கன்னா, ஒரு வருஷத்துக்கு பயிற்சி, ஹாஸ்டல் எல்லாம் சேர்த்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும். சென்னையில இருந்து வந்துட்டுப் போனா வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும்.

நான்: மூணு மாச கோர்ஸுக்கு சார்?

பயிற்சி மையம்: கோச்சிங் மட்டும் முப்பதாயிரம் ஆகும்மா. தங்குற செலவு, சாப்பாடு செலவெல்லாம் உங்களோடது.

நான்: ஒரு வருஷத்துல கண்டிப்பா எனக்கு டாக்டர் சீட் கிடைச்சிடுமா சார்?

பயிற்சி மையம்: ஐ.ஐ.டி ஸ்டாஃப் எல்லாம் இங்க இருக்காங்கம்மா. நல்லா சொல்லித்தருவாங்க. மத்தபடி நீங்க கத்துக்கிறதுலதாம்மா இருக்கு.

(உரையாடல் நிறைவடைகிறது.)

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தற்போது வெளிநாட்டில்தான் இருக்கின்றனர்

டாப் பயிற்சி மையங்களில் வீட்டில் இருந்து கோச்சிங் செல்ல வருடத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். சுமாரான பயிற்சி மையங்களில் கோச்சிங் செல்ல குறைந்தபட்சம் 30,000 ரூபாயாவது தேவைப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூற்றுப்படி, தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வசிப்பவர்கள் 65 லட்சம் பேர். சென்னையில் வசிப்பவர்களில் 40 சதவிகிதம் பேர், அரசாங்க அளவீட்டின்படி வறுமைக் கோட்டுக்குக்கீழ்தான் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அன்றாட வருமானம் என்பது, உணவுக்கே போதுமானதாக இல்லை. இவர்கள் வீட்டுப் பிள்ளை களெல்லாம் என்னதான் ஈடுபாட்டுடன் படித்தாலும், மருத்துவர் ஆக முடியாது என்பதுதான் யதார்த்தம். ஐ.ஐ.டி பேராசிரியர், கோட்டா பயிற்சி மையத்தில் கற்பித்தவர் என்றெல்லாம் பல ஜிகினாக்களைத் தூவி இங்கு இருக்கும் கோச்சிங் மையங்கள் விற்கும் நீட் பயிற்சியை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் இந்தக் குடும்பங்களின் பிள்ளைகளால் நெருங்கக்கூட முடியாது. இது எவ்வளவு பெரிய பாகுபாடு!

நீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்!

‘‘சென்னையின் டாப் 10 பயிற்சி மையங்களில் மட்டும், ஒவ்வொரு வருடமும் சேரும் மாணவர்களின் சராசரி எண்ணிக்கை 15,000. கோவை, மதுரை, திருச்சி என பிற மெட்ரோ நகரங்களை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், இந்த வணிகத்தின் அளவு தலைசுற்றவைக்கிறது. பெரும்பாலான பயிற்சி மையங்களை அறக்கட்டளைகளாகப் பதிவுசெய்திருக் கின்றனர். இதன் வழியாக அவர்கள் பல வரிவிலக்குகளையும் சலுகைகளையும் பெறுகின்றனர்’’ என்கிறார் கடலூரைச் சேர்ந்த ஆடிட்டர் ரங்கராஜன்.

மருத்துவரும் சமூகச்செயற் பாட்டாளருமான எழிலன், ‘‘நீட் தேர்வைக் கொண்டுவந்தபோது, ‘மாணவர்கள் மனப்பாடம் செய்து எழுதுகின்றனர். அதைத் தடுத்து நிறுத்தி தகுதிவாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகவே இந்தத் தேர்வு முறையைக் கொண்டுவந்தோம்’ என்றார்கள். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்போதுதான் 1200-க்கு 1100-க்குமேல் மதிப்பெண் எடுக்கத் தொடங்கியிருக் கின்றனர். அதை, மனப்பாடம் செய்து எழுதுகின்றனர் என்று சர்வசாதாரணமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அவர்கள், தங்கள் பகுதியின் வசதிவாய்ப்பையும் சுகாதாரத்தையும் நன்கு அறிந்தவர்கள். அவர்கள் மருத்துவரானால் நிச்சயம் தங்கள் பகுதிக்காக உழைப்பார்கள். ஐ.ஐ.டி-களில் படித்த எத்தனை மாணவர்கள் நம் நாட்டிலேயே இருக்கின்றனர்? எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தற்போது வெளிநாட்டில் தான் இருக்கின்றனர்’’ என்றார்.

நீட்
நீட்

மாணவி லதாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை, அதற்கு ஓர் உதாரணம். லதாவின் பெற்றோர் வெளிநாட்டில் வேலைசெய்கின்றனர். தன் பாட்டி வீட்டில் தங்கிப் படிக்கிறார் லதா. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே லதாவால் தன் பெற்றோரைச் சந்திக்க முடியும். மருத்துவரான தன் அம்மா வெள்ளை கோட்டுடன் உலா வருவதைப் பார்த்து, தானும் மருத்துவர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டார் லதா. முதல்முறை நீட் தேர்வு எழுதியபோது பெற்ற மதிப்பெண் 103. நான்கு மதிப்பெண் குறைந்துவிட்டதால் அவரால் தேர்ச்சிபெற முடியவில்லை.

இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுத இருக்கிறார். இந்த முறை எப்படியும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்று எப்படியேனும் பாஸ் செய்துவிட்டால் போதும்... தன் அம்மா தனக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாகச் சொல்லிவிட்டார் என்கிறார். லதாவுக்கு தன் அம்மாவைப்போலவே வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்பது ஆசை.

பணம் இருந்தால் எப்படியும் மருத்துவர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் லதா போன்றோரை மருத்துவர்கள் ஆக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கவே நீட் தேர்வு. லதாவைப்போல் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுடன் அரசு கவுன்சலிங் வழியாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் எவ்வளவு தெரியுமா? தனியார் மருத்துவக் கல்லூரியின் தரத்தைப் பொறுத்து வருடத்துக்கு, 1.20 லட்சம் ரூபாய் முதல் 5.54 லட்சம் ரூபாய் வரை. இது நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கான கட்டணம் மட்டுமே. இவை தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு என ஒதுக்கப்படும் 15 சதவிகித மேனேஜ்மென்ட் இடங்களுக்கு நான்கு மடங்கு அதிகம் என்கிறது மருத்துவக் கல்விக்கான தேர்வு ஆணையம்!

இந்தக் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம், ஏற்கெனவே இருந்த கட்-ஆஃப் முறையை ஒதுக்கி வைத்துவிட்டு, நீட் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட பெர்சன்டைல் முறைதான்! அந்த முறையில் இருக்கும் கோளாறுகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்...

(ட்ரீட்மென்ட் தொடரும்)

‘நீட்’ தொடர்பான உங்கள் கருத்துகள், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள neetvirus@vikatan.com