Published:Updated:

`இப்போ 2 புத்தகம் எழுதியாச்சு; 2 ஆப் உருவாக்கியாச்சு!' - சாதிக்கும் சிவகாசி பள்ளி மாணவர்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

சிவகாசி பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்றுவரும் பரத்குமார், பல்வேறு சாதனைகளைப் படைத்துவருகிறார்.

பரத்குமார்
பரத்குமார்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் செல்போனும் கையுமாகத்தான் திரிகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமான செல்போனில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், சிறுவர்கள் கேம்ஸ் விளையாடவே அதிக முக்கியத்துவம் தருவதால், குழந்தைகளை நினைத்து பெற்றோரும் அச்சமடைகின்றனர். ஆனால், 8-ம் வகுப்பு படிக்கும்போதே புதிய ஆப் உருவாக்குதல், புத்தகம் எழுதுதல் என தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்திவருகிறார், சிவகாசியைச் சேர்ந்த பள்ளி மாணவர்.

பரத்குமார்
பரத்குமார்

சிவகாசியில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர், பரத்குமார். சாஃப்ட்வேர் துறையில் சாதித்துவரும் இவர், கூகுள் நிறுவனத்திடமிருந்து கூகுள் அனலிடிக்ஸ் ஃபார் பிகினர்ஸ், கெட்டிங் கூகுள் அனலிடிக்ஸ், கூகுள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். மேலும், சோஷியல் மீடியா, நெட் சர்ஃபெர்ஸ் ஃபார் பிகினர்ஸ் ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்கள், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களில் விற்பனைக்கு உள்ளன.

எக்ஸ்-ஃபேக்டர் ப்ரோ மற்றும் ஜேசீஸ் போர்ட்ஃபோலியோ ஆப் ஆகிய ஆப்களை உருவாக்கியுள்ளார். ஜேசீஸ் போர்ட்ஃபோலியோ என்ற இவர் உருவாக்கிய ஆப், இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்குறித்த விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்காக, பள்ளியில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

பரத்குமார்
பரத்குமார்

இதுகுறித்து மாணவர் பரத்குமார் கூறும்போது, ``கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல். சுந்தர் பிச்சை, பில்கேட்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் துறையில் உள்ள நபர்கள் குறித்து நிறைய படிப்பேன். சுந்தர் பிச்சையின் வரலாற்றை தினமும் கேட்டுவிடுவேன். இப்போ நான் உருவாக்கிய ஆப், பள்ளியில் பயன்படுத்திவருவது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் பல ஆப்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன்” என்று தெரிவித்தார்.