Published:Updated:

ஸ்மார்ட் வகுப்பறை, சிறப்பான கற்றல் அனுபவம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் தினேஷ் சரவணன்!

ஸ்மார்ட் வகுப்பறையில் தினேஷ் சரவணன்

தனியார் பள்ளிகளைவிட மிக உயர்தர வசதியுடன் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவிக்கரம் நீட்டிவருகிறார் வேலூரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் தினேஷ் சரவணன்.

ஸ்மார்ட் வகுப்பறை, சிறப்பான கற்றல் அனுபவம்; அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் தினேஷ் சரவணன்!

தனியார் பள்ளிகளைவிட மிக உயர்தர வசதியுடன் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவிக்கரம் நீட்டிவருகிறார் வேலூரைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் தினேஷ் சரவணன்.

Published:Updated:
ஸ்மார்ட் வகுப்பறையில் தினேஷ் சரவணன்

முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு நாம் செய்யும் உதவிதான் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும். அப்படியான நெகிழ்ச்சியான சம்பவங்களை அடிக்கடி நிகழ்த்தி, விளிம்பு நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு அரணாக நிற்கிறார் வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் தினேஷ் சரவணன். 33 வயதாகும் இவர், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த இளம் வயதில் இவர் செய்யும் சமூக நலக் காரியங்களால் நலிவுற்ற பலரின் வீடுகள் மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கின்றன.

வேலூர் வசந்தபுரம் பகுதியில், கணவரையிழந்த பரமேஸ்வரி என்ற பெண் தன் மகளுடன் மண் குடிசையில் தங்கியிருந்து, வீட்டு வேலைக்குச் சென்றார். மழைக்கு வீட்டின் கூரை பொத்தல் பொத்தலாக மாறியது.

டிஜிட்டல் வகுப்பறை
டிஜிட்டல் வகுப்பறை

இது குறித்து தினேஷ் சரவணனின் கவனத்துக்கு வந்தவுடன், அவர் நேரில் சென்று, புதிய தென்னங்கீற்றை வாங்கி, கூலி ஆள்களை வைத்து வேய்ந்து கொடுத்தார். இப்போது, அந்த வீட்டில் நிம்மதி தவழ்ந்துகொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி மலைகளில் விதைப்பந்து தூவுவது, ஏழை எளிய பிள்ளைகளின் கல்விக்கு உதவுவது, இயலாதோரின் குடும்பத்துக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது எனப் பல்வேறு சேவைகளையும் செய்து வருகிறார்.

கொரோனா பொதுமுடக்கத்தின்போது, வேலூரில் மட்டும் சுமார் 10,000 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினார். தொடர்ந்து, `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசு வழங்கப்படும்’ என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாவட்ட நிர்வாகத்துக்கு உதவினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்படி, வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டினர். அவர்களின் பெயர், வீட்டு முகவரி, செல்நம்பர் ஆகியவற்றை சேகரித்துக்கொண்ட தினேஷ் சரவணன் குலுக்கல் முறையில் சிலரை தேர்ந்தெடுத்து, முதல் பரிசாக ஒருவருக்கு வாஷிங் மெஷின், இரண்டாம் பரிசாக மூன்று பேருக்கு தங்க கம்மல், மூன்றாம் பரிசாக ஒருவருக்கு மிக்ஸி ஜாடி, நான்காம் பரிசாக 100 பேருக்கு சில்வர் பாத்திரங்களை வழங்கி அசத்தினார்.

சமீபத்தில், பேரணாம்பட்டு அரவட்லா மலைக்கிராமத்துக்கு சென்ற தினேஷ் சரவணன், பழங்குடியின பெண்களுக்கு நாப்கின் வழங்கி சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

டிஜிட்டல் வகுப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த எம்.எல்.ஏ நந்தகுமார்
டிஜிட்டல் வகுப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவந்த எம்.எல்.ஏ நந்தகுமார்

இப்படி பல்வேறு உதவிகளால் நெகிழ வைக்கும் தினேஷ் சரவணன், ஏற்கெனவே அலமேலுமங்காபுரம் அருகேயுள்ள நடப்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.1 லட்சம் செலவில் ஸ்மார்ட் டிஜிட்டல் வகுப்பறையை மாணவர்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தார். தொடர்ந்து, பெருமுகைப் பகுதியிலிருக்கும் அரசு தொடக்கப் பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்திக் கொடுத்த அவர், அதே பகுதியிலுள்ள அரசு ஆதிதிராவிடர்நல மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட், டாய்லெட் வசதியையும் அமைத்துக் கொடுத்தார்.

இந்நிலையில், தற்போது அணைக்கட்டு பகுதியிலிருக்கும் கருகம்பத்தூர் அரசு ஆதிதிராவிடர்நல நடுநிலைப்பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் அமைத்துக்கொடுத்த ஸ்மார்ட் வகுப்பறைக்குள் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பிக்கும் வசதி இருக்கிறது. ப்ரொஜெக்டர், ஸ்பீக்கர், ஸ்கிரீன் வசதி என ஒரு தியேட்டருக்குள் அமர்ந்திருக்கும் அனுபவம் தரும் அளவுக்கு வகுப்பறையை மாற்றியிருக்கிறார். அதோடு, வகுப்பறையின் உள்புறத்தில் விலங்கினங்களின் படங்கள், வெளிப்புறத்தில் வண்ண ஓவியங்கள் என அசத்தலாக மாற்றிக்கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில், வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து ஸ்மார்ட் வகுப்பறையை திறக்கச் செய்தார் தினேஷ் சரவணன். இந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாபு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமூக செயற்பாட்டாளர் தினேஷ் சரவணனை வெகுவாகப் பாராட்டினர்.