மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, `பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் சிக்கன், பழங்கள் வழங்கப்படும்’ என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் நான்கு மாதங்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மாணவர்களுக்கான மதிய உணவை தரம் உயர்த்த அரசு செயல்படும் அதேவேளையில், பிர்பூம் மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளியொன்றில் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதிய உணவுக்குப் பிறகு 30 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
மதிய உணவுக்கான பருப்பு நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் பாம்பு ஒன்றைக் கண்டதாகக் கூறிய பள்ளி ஊழியர் ஒருவர், ``குழந்தைகள் வாந்தி எடுக்கத் தொடங்கியதால் நாங்கள் அவர்களை ராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேர்ந்தது" என்று கூறினார்.

மேலும் இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் திபஞ்சன் ஜனா, ``மதிய உணவைச் சாப்பிட்ட குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாகப் பல கிராம மக்களிடமிருந்து புகார்கள் வந்திருக்கின்றன. ஒரு குழந்தை தவிர, அனைத்துக் குழந்தைகளும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது அந்தக் குழந்தையும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டது" என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.