Published:Updated:

யாருக்கானவை அரசுப்பள்ளிகள்?

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

சித.க.செல்வசிதம்பரம் - அரசுப் பள்ளி ஆசிரியர்

கல்வி பெற்றால் முன்னேற்றம், பெறாவிட்டால் தடுமாற்றம் என்பதை அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த ஆட்சியாளர்களைப் பெற்றதால், தமிழ்நாடு கல்வியில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு காலத்தில் சாதி, மதங்கள், உயர்ந்தோர், தாழ்ந்தோர் மாயை உடைத்து ஒரு சமதர்ம சமுதாயம் உருவாகும் இடமாக பள்ளிகள் இருந்தன. காரணம் அன்று அரசுப்பள்ளிகளுக்கு மாற்றாக பெரிய அளவில் தனியார் பள்ளிகள் இல்லை.இன்றோ மாணவர்கள் பொருளாதாரத்தின் அடிப்டையில் இரு பிரிவினராக கல்வி கற்கும் நிலை உருவாகி உள்ளது.

வசதி படைத்தோருக்கு தனியார் பள்ளி; வசதி இல்லாதவர்களுக்கு அரசுப்பள்ளி என்றும் அரசு பள்ளியில் படித்தால் சமூக தகுதி குறைவு என்றும் மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

யாருக்கானவை அரசுப்பள்ளிகள்?

உண்மை நிலை என்ன?

கல்வி என்பது குடிமக்கள் அனைவரின் உரிமை என்று அரசியல் சாசனம் கூறுகிறது. அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயில ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

இன்று தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலணி முதல் கணினி வரை பதினான்கு வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை; தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கு ரூ 75,000 உதவித்தொகை; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட குழந்தைகள் நல மையம் மூலம் உண்டு உறைவிடப்பள்ளிகள்; இயலாக் குழந்தைகளுக்கு உடல் நலன் எந்த வகையில் பாதிக்கப்பட்டிருந்தாலும் வட்டார அளவில் இயலாக் குழந்தைகளுக்கான பகல் நேர பராமரிப்பு மையம்; இயலாக் குழந்தைகளுக்கு வாகன செலவுத் தொகை; மாதந்தோறும் இலவச மருத்துவ பரிசோதனை... என அரசால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்க திட்டங்கள் கணக்கிடலங்காது.

இவற்றுக்கெல்லாம் ஒற்றைக்காரணம் குடும்ப, சமூக, உடல் நலன் சார்ந்த எந்தவொரு ஒற்றை காரணத்தினாலும் கற்றல் நிகழ்வு தடைபட்டுவிடக்கூடாது என்ற அரசின் நோக்கமே ஆகும். கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், நவீன தொழில் நுட்பங்கள், கணினி, அறிவியல் ஆய்வகங்கள், பாட அறிவில் தேர்ந்த ஆசிரியர்கள் என அரசுப்பள்ளிகளை எந்தவிதத்திலும் தனியார் பள்ளிகளை விட குறைத்து மதிப்பிட முடியாது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெறுகின்றனர்; வேலை பளு குறைவு என்ற எண்ணம் பொது மன நிலையாக மாறியுள்ளது. இது உண்மையா என்றால், நிச்சயமாக இல்லை இதற்கு அளவுகோலாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அருகிலுள்ள அரசு பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை கொஞ்சம் நேரம் ஒதுக்கி விசாரித்தாலே தெரியும்.

யாருக்கானவை அரசுப்பள்ளிகள்?

நிச்சயமாக 90 சதவிதத்திற்கு மேலே இருக்கும். தமிழகம் முழுவதும் 10, +2 பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு நிர்ணையித்துள்ள கற்பித்தல் நேரங்களைவிடக் கூடுதலாக ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்துகிறார்கள். அங்குள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாலை நேர சிற்றுண்டி வழங்குகின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்கள் நலன் சார்ந்து மட்டுமின்றி, ஒரு அரசுப்பள்ளி ஆசிரியனாக தன்னையும் தன் பள்ளியையும் மற்றவர்களைவிட உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுகின்றனர்.

பள்ளி வகுப்பறை கட்டமைப்புகளுக்கு ஆண்டுதோறும் அரசு பல கோடி ஒதுக்குகின்றது. அரசால் செய்து தரப்படும் வசதிகள் தவிர்த்து எங்கள் பள்ளியில் தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்களின் உதவியுடன் அனைத்து வகுப்பறைகளுக்கும் டைல்ஸ் தரைத்தளம், ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்றவற்றை அமைத்துள்ளோம்.

இதுபோன்று எனக்குத்தெரிந்த நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளிகளைக் கூற முடியும். இந்த கொரோனா காலத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களால் ஆன்லைன் வகுப்புகள் வெற்றிகரமாக நடத்த முடியவில்லை என்பது உண்மைதான். அதற்குக் காரணம், மாணவர்களிடம் ஸ்மார்ட் போன், இணைய வசதி இல்லாமை. இருப்பினும் ஆசிரியர்கள் விலையில்லா பாடப் புத்தங்கங்கள் முதல் சத்துணவு பொருட்கள் வரை மாணவர்களின் வீடுதேடித் சென்று நேரிடையாக வழங்கியுள்ளனர். இன்றைய கொரோனா காலகட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேல் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறவில்லை என்ற காரணத்தை நாம் அளவுகோலாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசால் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்கள் வருங்காலங்களில் சிறப்பான நிலையை அடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை

யாருக்கானவை அரசுப்பள்ளிகள்?

கொரோனா ஊரடங்கு காலத்தில் என்னைச்சுற்றியுள்ள நாற்பது அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கு தன்னார்வவர்களின் உதவியோடு உடனடியாக நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்களின் நலனின் அக்கறை கொண்டு செயல்பட்டனர். கொரோனா காலத்தில் மாணவர்களின் சேர்க்கை கூடுதலாகக் காரணம், மக்களுக்கானவை அரசுப்பள்ளிகள் என்பதை உணர்த்துகிறது.

சிற்சில குறைகள் எல்லா நிர்வாகங்களில் இருப்பது போல அரசுப்பள்ளிகளிலும் இருக்கலாம். இருப்பினும் அவை எளிதில் களையக்கூடியவைகளே.

மருத்துவப்படிப்பில் 7.5 சதவிதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எந்தநிலையிலும் மாணவர்கள் இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் பலகோடிகளை செலவு செய்கிறது அரசு. மாற வேண்டியது, அரசுப்பள்ளிகளில் பயின்றால் கௌரவக்குறைவு என்ற மக்களின் மனநிலை தான்!