Published:Updated:

என்ன வசதி இல்லை நம் நாட்டில்? ஏன் கல்வி அயல்நாட்டில்?

ஏன் கல்வி அயல்நாட்டில்?
பிரீமியம் ஸ்டோரி
ஏன் கல்வி அயல்நாட்டில்?

நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் 108.

என்ன வசதி இல்லை நம் நாட்டில்? ஏன் கல்வி அயல்நாட்டில்?

நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் 108.

Published:Updated:
ஏன் கல்வி அயல்நாட்டில்?
பிரீமியம் ஸ்டோரி
ஏன் கல்வி அயல்நாட்டில்?

திங்கள்கிழமை நிலவரப்படி உக்ரைனிலிருந்து 1,200 தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். இன்னும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில் சிலர் வன்மமான கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். இங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேரத் தகுதியற்ற மாணவர்களே வெளிநாடுகளுக்குப் போய்ப் படிக்கிறார்கள் என்றெல்லாம் பதிவுகள் இடப்படுகின்றன.

தமிழகத்திலிருந்து சுமார் 40,000 பேர் கல்விக்காக ஆண்டுதோறும் வெளிநாடு செல்கிறார்கள். இந்தியாவிலிருந்து சுமார் ஆறு லட்சம் மாணவர்கள். இதில் 80% பேர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள். அறிவியல், தொழில்நுட்பம், ஹாஸ்பிடாலிட்டி, பொறியியல், சட்டம், மேலாண்மை போன்ற துறைகளில் இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு முதுநிலை படிக்கச் செல்பவர்களே அதிகம். 10% மாணவர்களே இளநிலைப் படிப்புகளுக்காக வெளிநாடு செல்கிறார்கள். மருத்துவப் படிப்புக்குச் செல்பவர்கள் அதில் வெறும் 15% முதல் 20% மட்டுமே.

2002-க்குப் பிறகு, ரஷ்யா, சீனாவுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன், ஜார்ஜியா, அர்மேனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகள் தங்கள் கல்விக்கட்டமைப்பை மேம்படுத்தி வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்தன. மாணவர் சேர்க்கைக்காக இந்தியாவெங்கும் முகவர்களையும் நியமித்தார்கள். சமூக ஊடகங்கள் வந்தபிறகு விளம்பரங்கள் பரவின. எளிய சேர்க்கை நடைமுறை, குறைந்தபட்ச மதிப்பெண், குறைவான கல்விக்கட்டணம் எனப் பல வசதிகள் இருந்ததால் 2008-க்குப் பிறகு இந்த நாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

என்ன வசதி இல்லை நம் நாட்டில்? ஏன் கல்வி அயல்நாட்டில்?

ஆனாலும் 2016-க்கு முன்புவரை தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே மருத்துவம் படிக்க வெளிநாடு சென்றார்கள். 2016-க்குப் பிறகு இந்த எண்ணிக்கை 4,000 முதல் 5,000 என்ற அளவுக்கு அதிகரித்தது. இந்திய அளவிலும் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

“கடந்த செப்டம்பரில் 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். சுமார் 66,000 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளை மொத்தமாகச் சேர்த்தால்கூட 8,000 எம்.பி.பி.எஸ் இடங்களே இருக்கின்றன. 720-க்கு 540 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 3 முதல் 6 லட்ச ரூபாய்க்குள் மொத்தப் படிப்பையும் அங்கு முடித்துவிடலாம். சுயநிதி மருத்துக் கல்லூரிகளில் 60 முதல் 90 லட்ச ரூபாய் செலவாகும். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்க 90 லட்சம் முதல் 1.4 கோடி வரை செலவாகும்.

நீட் தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் தேர்ச்சி மதிப்பெண் 108. முன்னேறிய வகுப்பினர் 134 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. நீட் தேர்வில் 108 மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனின் கையில் ஒன்றேகால் கோடி ரூபாய் இருந்தால்தான் தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் சேர முடியும். இரண்டு, மூன்று முறை நீட் எழுதி, தேர்ச்சி பெற்றும் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத எளிய, நடுத்தரக் குடும்பத்து மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது ஒரு வாய்ப்பாக இருக்கிறது” என்கிறார், வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் முகமது கனி.

என்ன வசதி இல்லை நம் நாட்டில்? ஏன் கல்வி அயல்நாட்டில்?

தமிழகத்திலிருந்து மருத்துவம் படிக்கச் செல்வோரில் 35% முதல் 40% மாணவர்கள் பிலிப்பைன்ஸைத் தேர்வு செய்கிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. தட்பவெப்பம் ஒரேமாதிரி. இந்தியாவில் இருப்பதைப் போலவே 19 பாடங்கள் பிலிப்பைன்ஸிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் காலனியாக இருந்ததால் ஆங்கிலமே கல்வி மொழியாக இருக்கிறது. இங்கே மருத்துவப் படிப்பை முடிக்க ரூ.30 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவாகும்.

பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாணவர்கள் ரஷ்யாவையும் உக்ரைனையுமே தேர்வு செய்கிறார்கள். இங்கு அதிகபட்சம் 30 லட்சத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிடலாம். உக்ரைனில் 15 மருத்துவப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. பெரும்பாலான பல்கலைக்கழகங்களை அரசே நேரடியாக நடத்துகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி, 10, +2வில் 50% மதிப்பெண், குரூப் பாடங்களில் 50% மதிப்பெண் இருந்தால் அட்மிஷன் உறுதி. அதன்பின் இந்தியாவில் மருத்துவராகப் பதிவு செய்ய FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தேர்வை எழுதவேண்டும்.

2023 முதல் National Exit Test (NEXT) என்ற தேர்வைக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. வெளிநாடுகளில் மட்டுமன்றி, இந்தியாவில் மருத்துவம் படித்தவர்களும் இந்தத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராகப் பதிவு பெறமுடியும்.

“மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு இந்திய மாணவர்கள் செல்வதைத் தடுக்கவேண்டுமானால் இங்கு போதிய வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். இந்தியாவில் மாலை நேர மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். இதற்கெனப் புதிதாக எந்த உள்கட்டமைப்பும் தேவையில்லை. இந்தியா முழுவதும் சுமார் 88,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருக்கின்றன. மாலைக் கல்லூரிகள் கொண்டு வந்தால் அது 1,76,000 இடங்களாகும். தமிழகத்தில் இப்போது 8,000 இடங்கள் இருக்கின்றன. 16,000 இடங்களாக உயர்த்தலாம். தமிழகத்தில் 232 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் மருத்துவம் படிக்கும் மாணவர்களைப் பயிற்சிக்காகப் பிரித்து அனுப்பலாம்” என்கிறார் முகமது கனி.

என்ன வசதி இல்லை நம் நாட்டில்? ஏன் கல்வி அயல்நாட்டில்?

“உக்ரைன் போன்ற நாடுகளுக்குப் படிக்கச் செல்வதை உயிரைப் பணயம் வைக்கும் செயல்பாடாகவே நான் கருதுவேன். அந்த நாட்டின் தட்பவெப்பம் முதல் நிர்வாக அமைப்பு, பொருளாதார நிலைவரை எதையுமே புரிந்துகொள்ளாமல் எப்படியாவது பிள்ளையை மருத்துவராக்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் பெற்றோர் அனுப்பிவிடுகிறார்கள். 17 வயதில் அந்தத் தேசத்தைப் பற்றி எதையும் அறியாமல் மாணவர்கள் செல்கிறார்கள். இவ்வளவு சிரமத்துக்கு இடையில் மருத்துவம் படித்துவிட்டு வருகிறவர்கள், இங்கே வந்ததும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதற்குத் தனியாக கோச்சிங் போகவேண்டும். பலநூறு பேர் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் எதிர்காலம் பாதிக்கப்பட்டுத் தவிக்கிறார்கள். அரசு இதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்...” என்கிற கல்வியாளர் நெடுஞ்செழியன், “மத்திய தணிக்கை அறிக்கைப்படி இந்தியாவில் கல்விக்காக வசூலிக்கப்பட்ட செஸ் வரி மட்டும் 2.18 லட்சம் கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. இதைச் செலவிட்டுக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மருத்துவப் படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களை இங்கேயே தக்க வைக்கலாம்” என்கிறார்.

“தற்போது உக்ரைனிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்களை இங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவர்கள் கற்ற கல்விமுறை வேறு. இங்கு பயிற்றுவிக்கப்படும் முறை வேறு. தவிர, உக்ரைனைவிட மோசமான நாடுகளில் பல நூறு தமிழக மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கிடையில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வியும் எழும். உக்ரைனில் எப்போது நிலைமை சீராகும் என்று தெரியவில்லை. வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் பற்றிய முறையான தரவுகள்கூட நம் அரசுகளிடம் இல்லை. இதையெல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்” என்கிறார் நெடுஞ்செழியன்.

ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்
ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்

“இந்தியர்கள் இந்தியாவில் படிக்கவேண்டும் என்கிறார் பிரதமர். ஆனால் அதற்கான வாய்ப்புகளை அவரது அரசு உருவாக்கித் தந்திருக்கிறதா? உக்ரைன் உட்பட உலகெங்கும் அரசுதான் அதிகமான கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. இந்தியாவில் மட்டும்தான் கல்வியில் தனியார்கள் கோலோச்சுகிறார்கள். சட்டபூர்வமாகவே அதிக கட்டணம் அனுமதிக்கப்படுகிறது. இந்தச் சூழலை சில வெளிநாட்டுக் கல்வி முகவர்கள் பயன்படுத்துகிறார்கள்...” என்கிற கல்வி ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், ஒரு புள்ளிவிவரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன்

“இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. இதில் 27% ஐ.ஐ.டிகளுக்கு மட்டும் ஒதுக்குகிறார்கள். இந்தியாவிலிருக்கிற ஐ.ஐ.டி-களில் படிக்கும் மாணவர்கள் வெறும் 1.18% தான். என்.ஐ.டி-களுக்கு 18% ஒதுக்கப்படுகிறது. அங்கு படிக்கும் மாணவர்கள் 1.37%. ஐ.ஐ.எம்களுக்கு 3.35% ஒதுக்குகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் 0.12% மட்டும்தான். வெறும் 3 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 50% ஒதுக்கீடு. 97% மாணவர்களுக்கு 50%. இந்தப் பாகுபாடுதான் பிரச்னையின் தொடக்கம்.

முகமது கனி
முகமது கனி

வளர்ச்சி என்பது எல்லாத்தரப்பு மாணவர்களையும் சமமாக வளர்த்தெடுப்பது. ஆனால் அரசின் கொள்கை நேரெதிராக இருக்கிறது. அதனால்தான் எளிய நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகள் உக்ரைன் போன்ற நாடுகளுக்குச் செல்லவேண்டியிருக்கிறது...” என்கிற ஸ்ரீனிவாஸ் சம்பந்தம், உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டுள்ள மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் பேசுகிறார்.

“உக்ரைனின் அண்டை நாடுகளில் இந்த மாணவர்கள் படிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும். போலந்து, உக்ரைனில் படித்த மாணவர்கள் இங்கே வந்து அதே வகுப்புகளில் இணையலாம் என்று அறிவித்துள்ளது. ஜார்ஜியாவிலும் கல்வி நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இறுதியாண்டு படித்து, தேர்வெழுதாமல் வந்துள்ள மாணவர்களை இங்கு நேரடியாக FMGE தேர்வெழுத அனுமதிக்கலாம். அங்கு நடத்தப்படும் பாடங்களை ஆய்வுசெய்து அதற்கேற்ப இங்கு வகுப்புகளில் இணைத்துக் கல்வி வழங்கலாம். படிப்பு முடிந்ததும் அவர்களை FMGE தேர்வு எழுதச் செய்யலாம்” என்கிறார்.

தற்போதிருக்கும் சூழலில், மீட்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் உக்ரைன் திரும்பிப் படிக்க வாய்ப்பில்லை என்ற எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இணைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், “சூழல் எப்போது சரியாகும், மாணவர்கள் திரும்பவும் எப்போது உக்ரைன் செல்லமுடியும் என்று தெரியவில்லை. பொறியியல் படிப்பென்றால், தமிழகத்தில் போதிய ஏற்பாடுகள் இருக்கின்றன. மருத்துவப் படிப்பில் அப்படியான சூழல் இல்லை. ஆனாலும் எந்தச் சூழலிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது. முதல்வரின் வழிகாட்டுதல்படி இதில் நடவடிக்கை மேற்கொள்வோம்” என்கிறார்.

பரிதவித்து நிற்கும் மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது தேசம்!

*****

5,160 மாணவர்களின் கதி?

கொரோனாப் பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து 2020 தொடக்கத்தில் சீனாவில் மருத்துவம் படித்த 5,160 மாணவர்கள் இந்தியா திரும்பினார்கள். மீண்டும் அவர்கள் சீனா செல்ல எத்தனித்த நேரத்தில் இந்திய - சீன எல்லையில் பிரச்னைகள் வெடித்தன. அதனால் சீனக் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை இந்தியாவிலேயே இருக்குமாறு அறிவுறுத்தின. இப்போதுவரை அவர்களைச் சீனாவுக்கு அழைக்கவில்லை. 2 ஆண்டுகள் வீணான நிலையில் எதிர்காலம் புரியாமல் தவிக்கிறார்கள் மாணவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism