சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

பாதுகாப்பும் முக்கியம் பாப்பா!

மாணவி
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவி

இது அசாதாரணமான சூழல். பெரியவர் களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல் வெளியில் தெரியும். குழந்தைகளின் மன நெருக்கடி வெளியில் தெரியாது.

நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவுள்ளன. ‘மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரத்தேவையில்லை... விரும்பிய பெற்றோர் அனுப்பி வைக்கலாம்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். கொரோனாத் தொற்று பெருமளவு கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில் திரையரங்குகள் முதல் மதுக்கூடங்கள் வரை அனைத்தையும் முழுமையாகத் திறக்க முடிவுசெய்துள்ளது அரசு. ஓரளவுக்கு இயல்பு திரும்பியுள்ள சூழலில் பள்ளிகள் திறக்கும் முடிவை பெரும்பாலான பெற்றோர் வரவேற்கவே செய்கிறார்கள்.

ஆயினும் கொரோனா நம்மை விட்டு முழுமையாக விலகிச் சென்றுவிடவில்லை. அருகிலிருக்கும் கேரளாவில் தினமும் 8,500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். ரஷ்யா, இஸ்ரேல், இங்கிலாந்து நாடுகளில் AY.4.2 என்ற, டெல்டாவைவிட வேகமாகத் தொற்றும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 1200-க்கும் கீழே தொற்று எண்ணிக்கை குறைந்திருக்கிறது. தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் மக்கள் நெருக்கமாக நடமாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் ஜனவரியில் மூன்றாம் அலை தாக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அதேநேரம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. திங்கள்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் 4 கோடிப் பேர் முதல் தவணையும் 1.61 கோடிப் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்கள். ‘நோய்த் தடுப்புத்திறன் அதிகரித்ததால்தான் அக்டோபர், நவம்பரில் வருமெனக் கணிக்கப்பட்ட மூன்றாம் அலை தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தச் சூழலில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அரசு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில், நெருங்கிய உறவுகளின் இறப்புகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் கடந்து மிகவும் மனநெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவிருக்கிறார்கள். இது பெற்றோரையும் சற்று பதற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

“இது அசாதாரணமான சூழல். பெரியவர் களுக்கு இருக்கும் உளவியல் சிக்கல் வெளியில் தெரியும். குழந்தைகளின் மன நெருக்கடி வெளியில் தெரியாது. அதை நாம் உணராமலே இருந்திருப்போம். பிற குழந்தைகளோடு விளையாடாமல், வெளியிலே செல்லாமல், ஆன்லைன் திரைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பதுகூட மன நெருக்கடிதான். இந்தச் சூழலிலிருந்து விடுபட பள்ளி செல்வது ஒன்றுதான் தீர்வு...” என்கிறார், உளவியல் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

பாதுகாப்பும் முக்கியம் பாப்பா!

“எல்லாக் குழந்தைகளுமே குழப்பமான மனநிலையில்தான் பள்ளிக்கு வருவார்கள். வகுப்பறையில் சின்னச்சின்ன தவறுகள் செய்யும்போது கடுமை காட்டக்கூடாது. கனிவோடு கையாளவேண்டும். இரண்டாண்டு களுக்கு முன்பு பார்த்த பார்வையில் இப்போது குழந்தைகளை ஆசிரியர்கள் பார்க்கக்கூடாது. காயப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. வழக்கத்தை மீறி சோர்வாகவோ, துறுதுறுப்பாகவோ இருந்தால், அந்தக் குழந்தைகள் மேல் தனிக்கவனம் தேவை.

இரண்டாண்டுகள் நேரடியாகக் கல்வியிலிருந்து பிள்ளைகள் ஒதுங்கி இருக்கிறார்கள். பள்ளிக்கு வந்ததுமே பாடங்களை நடத்தாமல் இயல்பாக அவர்களை வகுப்பறையோடு ஒன்றச் செய்யவேண்டும். மன நெருக்கடியில் இருந்து விடுவித்து, நம்பிக்கை தரும்விதத்தில் அவர்களை நடத்த வேண்டும். இப்போது குழந்தைகளுக்கான கல்வி என்பது, அவர்களை மன நெருக்கடியிலிருந்து மீட்பதுதான்.

குழந்தைகளின் கற்றல் திறன் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இது உலகம் முழுமையும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வெளிவந்திருக்கும் உண்மை. அதனால், ‘படிக்கவில்லை, புரிந்துகொள்ளவில்லை’ என்று அவர்களைக் கண்டிக்கத் தேவையில்லை. காலப்போக்கில் அது இயல்பாகவே வந்துவிடும். இரண்டாண்டுகள் வீட்டிலிருந்து பழகிவிட்டதால் குழந்தைகள் வகுப்புகளில் ஒன்றாமல் போகலாம். இதைப் பெரிதுபடுத்தக்கூடாது. ஆன்லைனில் நடத்தியதை எல்லாக் குழந்தைகளும் முழுமையாக உள்வாங்கியிருப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஆன்லைன் கல்வி என்பது வகுப்பறைக் கல்விக்கு மாற்று கிடையாது. தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இப்போதைய பாடம் என்பது ஆற்றுப்படுத்துதல் மட்டுமே. அதை ஆசிரியர்களும் பெற்றோரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.

“பிள்ளைகளை அச்சமின்றிப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றால் பெரிய வர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். இப்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு 8 பேர் தொற்று பாதித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஐந்தாறு நாள்களில் வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். இதுவே ஐசியூவில் 14 நோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் யாரும் ஒரு டோஸ் தடுப்பூசி கூடப் போட்டுக் கொள்ளவில்லை. அதனால் கண்முன்னால் தடுப்பூசியின் பயன் தெரிகிறது.

கோவிட் என்பது Endemic disease. இனி, மலேரியா, ஃபைலேரியா போல நம் மத்தியில் நிரந்தரமாக இருக்கவே செய்யும். நாம் தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டால்தான் இயல்பு நிலைக்குத் திரும்பமுடியும்...” என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்.

“குழந்தைகளுக்குக் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் சில பெற்றோர் மருந்து கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிவிடுவார்கள். கண்டிப்பாக அந்தத் தவற்றைச் செய்யக்கூடாது. மூன்று நாள்களுக்கு மேல் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும்.

ஆசிரியர்களுக்குக் கொரோனா குறித்து முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும். குழந்தைகளிடம் மாற்றம் தெரிந்தால் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு தேவை. தினமும் வகுப்பைத் தொடங்குவதற்கு முன்பாக குழந்தைகளைத் தனித்தனியாக கவனிக்கவேண்டும். விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி வரவாய்ப்புள்ளது. வரும்போது பெற்றோர் தயக்கமில்லாமல் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவேண்டும்.

சிவபாலன்
சிவபாலன்

இருமும்போதோ தும்மும்போதோ முழங்கை பகுதியால் வாயை மூடிக்கொள்ளவேண்டும் என்பதைப் பிள்ளைக்கு சொல்லித் தரவேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவுமாறும் பயிற்றுவிக்க வேண்டும். பள்ளிகளில் தண்ணீர்க் குழாய்கள் இருக்குமிடங்கள் அனைத்திலும் லிக்விட் சோப் வைக்கவேண்டும். நகங்கள், விரல்கள் தொடங்கி கைகளை எப்படிக் கழுவவேண்டும் என்பதையும் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களே இதற்கெனச் செயல்முறை வகுப்புகளை நடத்தலாம். பள்ளிக் கழிவறைகளை இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும். வெளியே வந்ததும் பயன்படுத்தும் வகையில் சானிட்டைசர்கள் வைக்கவேண்டும்.

வகுப்பறைகளில் கட்டம் போட்டு தகுந்த இடைவெளி விட்டு பிள்ளைகளை அமரவைக்கவேண்டும். நீண்டநாள் கழித்து ஒன்றுகூடுவதால் பிள்ளைகள் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். குழந்தைகளுக்குத் தடுப்பூசி வரும் காலம் வரையேனும் இப்படி நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆசிரியர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய தருணம். அவர்களை நம்பித்தான் பிள்ளைகள் பள்ளிக்கு வரப்போகின்றன. கண்டிப்பாக அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டிருக்கவேண்டும். லேசாக அறிகுறிகள் தெரிந்தாலும் தயக்கமில்லாமல் ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேரணி ராஜன்
தேரணி ராஜன்

இரண்டாண்டுகளாக மின்திரையைப் பார்த்துப் பல குழந்தைகளின் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளேயே இருந்ததால் உடற்பருமன் ஏற்பட்டுள்ளது. நிறைய தம்பதிகள், பிள்ளைகளை வேலை செய்பவர்களின் பராமரிப்பில் விட்டுச் செல்கிறார்கள். இதுவும் குழந்தைகளை பாதித்திருக்கிறது. குழந்தைகளின் இயல்பு மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதுதான்...” என்கிற தேரணி ராஜனிடம் “இன்னும் எத்தனை காலத்துக்கு மாஸ்க் தேவைப்படும்?” என்றேன்.

“இனி மாஸ்க்கை எந்தக் காலத்திலும் தவிர்க்கமுடியாது என்பதே நிஜம். மாஸ்க்கால் கொரோனா மட்டுமன்றி பல நோய்கள் குறைந்திருக்கின்றன. மருத்துவமனைக்கு வரும் மூச்சுத்திணறல், அலர்ஜி, காசநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது...” என்கிறார் அவர்.

குழந்தைகள் விஷயத்தில் சமரசம் வேண்டாம்... தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்காதீர்கள் மக்களே!