Published:Updated:

இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?

இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?

தனியார்ப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஓரளவுக்கேனும் ஆசிரியர்களோடு தொடர்பில் இருக்க, அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளியை மறந்தே விட்டார்கள்.

இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?

தனியார்ப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஓரளவுக்கேனும் ஆசிரியர்களோடு தொடர்பில் இருக்க, அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளியை மறந்தே விட்டார்கள்.

Published:Updated:
இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?
பிரீமியம் ஸ்டோரி
இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?

கொரோனா தொற்றின் வீரியம் சற்று தணிந்திருக்கிறது. ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுவிட்டன. ஆனாலும் பள்ளிகளைத் திறப்பது குறித்து உறுதியான முடிவு எடுக்கமுடியவில்லை. புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், திறக்கும் முடிவைக் கைவிட்டுவிட்டது புதுவை அரசு. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.

இந்தச்சூழலில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த தகவல் அமைப்பு, தமிழகம் குறித்த சில ஆய்வுமுடிவுகளை வெளியிட்டிருக்கிறது. 2019-20 கல்வியாண்டில் 9-10ம் வகுப்புகளில் 9.6 சதவிகித மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்றுள்ளதாகச் சொல்கிறது அந்த அறிக்கை.

கடந்த 16 மாதங்களாக மாணவர்கள் கல்விச் செயல்பாடுகளிலிருந்து விலகியிருக்கிறார்கள். தனியார்ப்பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஓரளவுக்கேனும் ஆசிரியர்களோடு தொடர்பில் இருக்க, அரசுப்பள்ளி மாணவர்கள் பள்ளியை மறந்தே விட்டார்கள். பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கும் அரசு, இத்தனைக் காலம் பள்ளியைவிட்டு விலகியிருக்கும் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து யோசிக்கவில்லை என்பதுதான் துயரமானது.

முன்னேறிய மாநிலம், கல்வியில் உச்சம் தொட்ட மாநிலம், சமூகநீதி தழைத்திருக்கும் மாநிலம், உயர்கல்வி சேர்க்கையில் முன்னணியில் இருக்கும் மாநிலம் என்றெல்லாம் நாம் பெருமிதப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், கோவிட் பெருந்தொற்றால் பலநூறு அடித்தட்டுக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக்கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. சிறுமிகள் பலர் மனைவியாக, தாயாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இடைநிற்கும் குழந்தைகள்... எதிர்காலம் என்ன?

கோவிட் பெருந்தொற்று உலகத்தின் இயல்பை மாற்றியிருக்கிறது. மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவே போராட வேண்டிய நிலை. ஆனாலும் பல நாடுகள் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் உறுதியான சில முடிவுகளை எடுத்து பாதிப்பில்லாமல் பார்த்துக்கொண்டன. தமிழகத்தில் ஆரம்பம் முதலே முடிவெடுக்க முடியாமல் முந்தைய அரசு தடுமாறியது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, தொற்றுக்கான சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் காட்டியது. ஆனால், தமிழகத்தின் 58,897 பள்ளிகளில் படித்துவரும் 1 கோடியே 33 லட்சத்து 883 மாணவர்களின் நிலையைக் கண்டறியவோ, அவர்களுக்கான தீர்வை உருவாக்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சில தொண்டு நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் ஆய்வுசெய்து மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியிருக்கும் அவலத்தை வெளியில் கொண்டு வந்தன. குழந்தைத் திருமணங்கள் அதிகரித்ததையும் கண்டறிந்து வெளியிட்டன. குறிப்பாக மலை கிராமங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

“நான் பணியாற்றும் ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் இந்த கோவிட் காலத்தில் ஏராளமான குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. பலவற்றை நாங்கள் சைல்ட்லைன் ஹெல்ப்லைன் மூலம் தடுத்துள்ளோம். ஆனாலும் முழுமையாகத் தடுக்கமுடியவில்லை...” என்கிறார் அரசுப்பள்ளி ஆசிரியை மகாலட்சுமி.

“கொரோனாவுக்கு முன்பு மாணவர்கள் இடைநிற்பதைத் தடுக்க கல்வித்துறையில் பல ஏற்பாடுகள் இருந்தன. சி.இ.ஓக்கள் நேரடியாக அதைக் கையாண்டார்கள். ஒரு மாணவி/வன் பள்ளிக்குத் தொடர்ந்து வரவில்லையென்றால் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் இணைந்து அதற்கான காரணத்தை ஆய்வுசெய்து அந்த மாணவரைப் பள்ளிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு வராத அல்லது கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடாத குழந்தைகளைக் கட்டாயப்படுத்தாதீர்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

கோவிட் காலத்தில் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. அதனால் குழந்தைகளும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நான் பணியாற்றும் ஜமுனாமரத்தூரில் நிறைய மாணவர்கள் பிழைப்புக்காகத் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். பலர் கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் இருக்கிற பருத்தித் தோட்டங்களுக்குச் வேலைக்குச் செல்கிறார்கள். பள்ளிகள் திறந்தாலும் இவர்களெல்லாம் வருவார்களா என்பது சந்தேகம். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது” என்கிறார் மகாலெட்சுமி.

இடைப்பட்ட இந்தக் காலத்தில் பல குழந்தைகள் அரிச்சுவடியைக்கூட மறந்திருப்பார்கள். கொரோனாவுக்கு முன்பு 5ம் வகுப்பு படித்த குழந்தை இப்போது 7ம் வகுப்பில் இருக்கிறது. நேரடியாக அவர்களுக்கு 7ம் வகுப்பு பாடத்தை நடத்துவது குழப்பத்தில் ஆழ்த்தும். அது மேலும் இடைநிற்றலுக்கு வழிவகுத்துவிடும். புதிய வகுப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பொதுவான ஒரு வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை உருவாக்க வேண்டியதும் அவசியம்.

“இடைநிற்றல் குறித்து இப்போது வருகிற புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல, பெருந்தொற்று முடிந்து பள்ளி திறக்கும்போது இதைவிடவும் பல மடங்கு இடைநிற்றல் இருக்கும் என்பது என் கணிப்பு. கடந்த ஜனவரியில் 10, + 2 மாணவர்களுக்கு பள்ளி திறந்தபோதே 10 முதல் 20 சதவிகிதம் மாணவர்கள் வரவில்லை. சில பகுதிகளில் 30-40 சதவிகிதம்கூட இருந்தது. இதை மிகவும் தீவிரமான பிரச்னையாக அரசு உணரவேண்டும்.

விழியன், மகாலட்சுமி, ரேவதி
விழியன், மகாலட்சுமி, ரேவதி

கொரோனாவால் பல தொழில்கள் முடங்கியுள்ளன. குறைந்த சம்பளத்தில் வேலை செய்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போய்விட்டார்கள். அந்த இடத்தை சிறுவர்களை வைத்து நிரப்புகிறார்கள். வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்கியுள்ள பிள்ளைகள் திரும்பவும் பள்ளிக்கு வருவார்களா என்பது முதல் கேள்வி. அப்படியே வந்தாலும் அவர்களை பள்ளியில் தக்கவைக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். பள்ளி திறந்து முதல் இரண்டு மாதங்கள் பிள்ளைகளை வகுப்பறையில் அமரவைப்பது சவாலான பணி” என்கிறார் குழந்தைகள் எழுத்தாளரும் குழந்தை உரிமை ஆர்வலருமான விழியன்.

செப்டம்பரில் கொரோனா மூன்றாவது அலை தாக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். இறக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை சில நாள்களாக மெல்ல உயர்கிறது. இந்தச்சூழலில் பள்ளித்திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கமுடியாது என்பதுதான் எதார்த்த நிலை. ஆனால் பள்ளிக்கல்வித் துறையின் பணி பள்ளியைத் திறப்பதும் பாடம் நடத்துவதும் மட்டுமல்ல. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும்தான். இந்தக் கல்வியாண்டிலும் பள்ளிகளைத் திறக்க இயலாத நிலை வந்தால், கல்வித் தொலைக்காட்சியை நோக்கி கைநீட்டாமல் நடைமுறைச் சாத்தியமுள்ள பிற வாய்ப்புகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

தனியார்ப் பள்ளிகளின் ஆன்லைன் கல்வியை முறைப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதுவரை தரப்பட்ட ஆன்லைன் கல்வியால் நேர்ந்த சாதக பாதகங்களை முழுமையாகத் தணிக்கை செய்யவும் வேண்டும்.

“குழந்தைகள் கல்விச் செயல்பாடுகளில் விலகியிருப்பது மட்டுமல்ல, மிகப்பெரும் மனஅழுத்தத்துக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். பல குழந்தைகள் பெற்றோரை, உறவுகளை இழந்திருக்கிறார்கள். பல குடும்பங்கள் புலம்பெயர்ந்திருக்கின்றன. நிறைய பேர் வேலையிழந்திருக்கிறார்கள். இவை எல்லாமே குழந்தைகளை உடலளவிலும் மனதளவிலும் பெரிதாகப் பாதித்துள்ளன. இவற்றையும் இணைத்தே குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கவேண்டும். முதலில், ஆசிரியர்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் இருக்கும் மாணவர்களின் தற்போதைய சூழல் பற்றி விரிவான ஆய்வு நடத்த வேண்டும். அந்த ஆய்வு முடிவுகளை வெளிப்படையாக வைத்து, அவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்...” என்கிறார் குழந்தைகள் உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரான முனைவர் ஏ.டி.ரேவதி.

குழந்தைகள்தான் தேசத்தின் எதிர்காலம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கைவிடப்பட்டிருக்கிறார்கள். நிறைய குழந்தைகள் குடும்பத்தைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்டு மீண்டும் மாணவர்களாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை தீவிரமாகச் செயல்பட வேண்டிய நேரம் இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism