Published:Updated:

விகடன் பிரசுரம் மற்றும் எஸ்.எஸ்.சி மேக்ஸ் அகாடமி இணைந்து நடத்திய எஸ்.எஸ்.சி தேர்வு பயிற்சி முகாம்!

எஸ்.எஸ்.சி தேர்வு பயிற்சி முகாமில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் சந்தேகங்களை துறை சார்ந்த வல்லுநர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

எஸ்.எஸ்.சி  தேர்வு பயிற்சி முகாம்
எஸ்.எஸ்.சி தேர்வு பயிற்சி முகாம் ( ராகேஷ்.பெ )

விகடன் பிரசுரம் மற்றும் எஸ்.எஸ்.சி மேக்ஸ் அகாடமி இணைந்து நடத்திய எஸ்.எஸ்.சி (Staff Selection Commission) தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாமானது எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. எஸ்.எஸ்.சி போட்டித்தேர்வுக்கு வழிகாட்ட வழங்கப்படும் முதல் முகாம் இதுதான். யூ.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி போட்டித்தேர்வுகளைப் போன்று எஸ்.எஸ்.சி தேர்வு குறித்த விளக்கங்களும் விழிப்புணர்வும் முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சி.இராஜேந்திரன் ஐ.ஆர்.எஸ், "எஸ்.எஸ்.சி போட்டித்தேர்வின் மூலமாக நிரப்பப்படும் பணியிடங்கள் மரங்களில் இருக்கின்ற வேர்கள் போன்றது. மரம் நன்றாக இருக்கவேண்டுமெனில் வேர்கள் நன்றாக இருக்க வேண்டும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டை தாண்டவே மறுக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசுக் காலிப்பணியிடங்களில் தமிழர்களே இல்லை. தமிழகத்தில் உள்ள மத்திய அலுவலகங்களில் இன்னும் பத்து வருடங்களில் தமிழில் பேச முடியாது. டெல்லியில் கோட்டையைப் பிடித்த காலம் சென்று, உள்ளூரிலேயே வேறு மாநில ஆட்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகமும் உழைப்பும் அவர்களுக்கு வெற்றியைத் தந்துகொண்டிருக்கிறது" என உற்சாகமாகப் பேசினார்.

எஸ்.எஸ்.சி  தேர்வு பயிற்சி முகாம்
எஸ்.எஸ்.சி தேர்வு பயிற்சி முகாம்
ராகேஷ்.பெ

பயிற்சி முகாமில் அடுத்து பேசிய போட்டித்தேர்வு நூல் எழுத்தாளர் டாக்டர் சங்கர சரவணன், ``1948-ல் முதன்முதலாக நடந்த ஐ.ஏ.எஸ் தேர்வில் 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், இப்போது மத்திய அரசு அலுவலகங்களில் வெளிமாநிலத்திலிருந்து வந்து வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழகத்தில் ஆட்கள் இல்லை. யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களைவிட எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுபவர்கள் தமிழகத்தில் மிகவும் குறைவு. எஸ்.எஸ்.சி தேர்விலும் +2 முடித்ததும் எழுதக்கூடிய தேர்வுகள் இருக்கின்றன. விகடன் எடுத்திருக்கும் இந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெற நீங்கள் மட்டுமல்லாது உங்கள் நண்பர்களையும் விண்ணப்பிக்கச் செய்ய வேண்டும்" என்றார்.

எஸ்.எஸ்.சி தேர்வு குறித்து சங்கர் கணேஷ் கருப்பையா ஐ.ஆர்.எஸ் பேசும்போது ``நம்முடைய எண்ணமெல்லாம் ஒண்ணு மேல இல்ல, கீழ என்று இருக்கிறது. இடைப்பட்ட விஷயங்களைப் பற்றிப் போதுமான விழிப்புணர்வு இல்லை. எஸ்.எஸ்.சி போட்டித் தேர்வையும் டி.என்.பி.எஸ்.சி, பேங்கிங் தேர்வு பேட்டர்னில் கொண்டுவந்தால் நிறைய பேர் தேர்வெழுத வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்" என்றார். எஸ்.எஸ்.சி மேக்ஸ் அகாதமியின் கௌரவ இயக்குநர் பா.கலைச்செல்வன் பேசுகையில், எஸ்.எஸ்.சி தேர்வில் இருக்கும் சிக்கலான விஷயங்கள், வெற்றி பெறுவதற்கான வழிகள், பலகட்ட தேர்வு முறைகள், மனதளவில் தேர்வுக்குத் தயாராவது ஆகியவற்றைப் பற்றி விளக்கினார்.

பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள்.
பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள்.
ராகேஷ்.பெ

தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களுக்கு மாதிரி பயிற்சி வகுப்பும் நடத்தினார். வகுப்பிற்குப் பின் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்வில் பங்கேற்றவர்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றனர். எஸ்.எஸ்.சி தேர்வு தொடர்பான சந்தேகங்களை கலந்துகொண்டவர்கள் பதிவு செய்தனர். 2020ல் வெளியாகும் விகடன் இயர் புத்தகத்தில் 'எஸ்.எஸ்.சி எக்ஸாம் தெரிந்ததும் தெரியாததும்' என்ற தலைப்பில் சந்தேகங்களுக்கான விடைகள் வல்லுநர்களின் பதில்களுடன் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.