Published:Updated:

பதவி உயர்வில் முறைகேடு - சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை

முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வின்மீது பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அலுவலகப் பணியாளர்கள் தங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி அண்மையில் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணை எண் 107-ல், அரசுப் பணிகளில் பதவி உயர்வு பெறுவதற்கு 10 + 2 + 3 என்கிற அடிப்படையில் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்கிற விதிமுறை செயல்படுத்தப்பட்டது. இது, அல்லாத திறந்தவெளி பல்கலைக்கழக முறையில் (OUS முறையில்) பயின்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது என்கிற நிலை உருவானது. இதே விதிமுறை சென்னைப் பல்கலைக்கழகத்தால் 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விதிமுறையை மீறி 2014-ம் ஆண்டு OUS முறையில் கல்வி பயின்ற 24 ஊழியர்களுக்கு உதவி அலுவலர் பணியிலிருந்து அலுவலர் பணிக்குச் சட்டவிரோதமாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து முறையிட்டபோது தமிழக அரசு உயர்கல்வித் துறை, ’அவ்வாறு பதவி உயர்வு வழங்கியது செல்லாது’ என்று பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தது. ஆனால், முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வின்மீது பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

இந்நிலையில், தற்போது அலுவலர் பணியிலிருந்து துணைப் பதிவாளர் பணிக்குப் பதவி உயர்வு பெற 12 பேரும், உதவி அலுவலர் பணியிலிருந்து அலுவலர் பணிக்கு பதவி உயர்வு பெற 12 பேரும் என மொத்தம் 24 பேர் தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டும் பதவி உயர்வு ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி அலுவலர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலர்கள் சார்பாகப் பேசிய மாயக்கண்ணன், “2009-ம் ஆண்டு அரசாணை வெளிவந்ததற்குப் பிறகு, தமிழகத்தில் வேறு எந்தக் கல்வி நிலையத்திலும் இத்தகைய முறையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மட்டுமே இவ்வாறு நடைபெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே ஆட்சிமன்றக் குழுவின் ஒப்புதலோடு அடுத்த பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராகிவிட்ட நிலையில், பல்கலைக்கழகத்துக்குப் பொருந்தாத தேர்தல் நடத்தை விதியைக் காரணம் காட்டி பதவி உயர்வு வழங்காமல் நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகம்

இதற்கிடையே அரசு பரிந்துரைந்த முறையில் கல்வி பயிலாத ஊழியர்கள் புதிய பதவி உயர்வைச் செயல்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களைக் கூறி தனி நீதிபதியிடம் இடைக்கால உத்தரவு பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரணையில் இருப்பதால், தனி நீதிபதி வழங்கிய உத்தரவு செல்லாது என்றபோதிலும் அதைக் காரணம் காட்டியே பதவி உயர்வு வழங்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கு மாறாக, சட்டவிரோதமாகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பதவி உயர்வு வழங்குவதற்கான வேலைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

தகுதியிருந்து பட்டியல் வெளியிட்ட பிறகும் உரியவர்களுக்கு நியமன ஆணை வழங்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. துணைவேந்தர் தரப்பிலிருந்து இதுதொடர்பாக எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இதற்கு மேலும் நிர்வாகம் காலம் தாழ்த்தினால் அடுத்தகட்ட சட்டப்போராட்டத்தையும் நடத்தத் தயாராகவே இருக்கிறோம்” என்றார்.

ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழக விடுதிகளில் மாணவர் சேர்க்கை உட்பட பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகப் போராட்டம் நடத்தியிருந்தனர். அதன் தொடர்ச்சியாகத் தற்போது மீண்டும் ஒரு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அலுவலர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 162 ஆண்டு பழைமைவாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம் தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.