Published:Updated:

`நானே சீட் வாங்கித் தருகிறேன்!’ - சாதனை சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய வைகோ

ராம் பிரசாத்

தெருவோர உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாதித்த தமிழக சிறுவர்கள் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

வைகோ
வைகோ

தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச அளவிலான போட்டிகளை ஸ்ட்ரீட் சைல்ட் யுனைடெட் நிறுவனம் அமைப்பு நடத்துகிறது. சாலைகளில் வசிக்கும் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த அமைப்பின் பிரதான நோக்கம். அண்மையில் தெருவோர சிறுவர்களுக்காக நடந்த உலகக்கோப்பை தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பங்குபெற்றனர். லண்டனில் நடந்த தொருவோர சிறுவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பால்ராஜ், சூர்யா, மோனிஷா, நாகலட்சுமி ஆகிய நான்கு பேர் பங்கேற்று விளையாடினர். இவர்கள் கோப்பையையும் வென்று சாதித்தனர். இவர்களை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை கூறினார்.

வைகோ
வைகோ

வீரர்களுடன் கலந்துரையாடிய வைகோ அவர்களின் பொருளாதார சூழல் குறித்துக் கேட்டறிந்தார். இவர்களில் மோனிஷா என்ற சிறுமி பள்ளியில் படித்து வருகிறார். நாகலட்சுமி கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். சூர்யா, பால்ராஜ் ஆகியோர் சென்னை மாநிலக் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இவர்கள் சென்றதால் கல்லூரியில் நடந்த நேர்காணலில் பங்கேற்க முடியவில்லை. விளையாட்டு வீரர்கள் அடிப்படையில் தங்களுக்கு சீட் கிடைக்கும் எனக் காத்திருந்துள்ளனர். கல்லூரியில் சேர்வதற்காக தொடர்ந்து முயற்சி செய்துவந்துள்ளனர். ஆனால், இவர்களின் பெயர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது.

வைகோவுடன் கலந்துரையாடும்போது இந்த விவரத்தை அவரிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டதும் "நாளை கல்லூரிக்கு வாருங்கள் நான் பேசுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று காலை சென்னை மாநிலக் கல்லூரிக்கு அவர்களுடன் வைகோ சென்றார். கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளார். அதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

மாநில கல்லூரியில் வைகோ
மாநில கல்லூரியில் வைகோ

கல்லூரியில் இடம் கிடைத்தது தொடர்பாக அந்த விளையாட்டு வீரர்களிடம் பேசினோம், "தெருவோர கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதற்காக வைகோவை சந்தித்துப் பேசினோம். அப்போதுதான் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றோம். அதற்கு அவர் மாநிலக் கல்லூரியில்தான் நான் படித்தேன். நானே உங்களுக்கு இடம் வாங்கித் தருகிறேன் என்றார். இன்று கல்லூரி முதல்வரை சந்திக்க அழைத்துச் சென்று கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்தார்!” என்றனர்.