Published:Updated:

`வகுப்பறையில் வலிப்பு; சுருண்டுவிழுந்த மாணவி!’ -வேலூரைப் பதறவைத்த சிசிடிவி காட்சிகள்

மாணவி நிவேதினி
மாணவி நிவேதினி

காட்பாடி அருகே உள்ள தனியார் பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவி மயங்கிவிழுந்து உயிரிழந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த லத்தேரியைச் சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், பணிபுரிந்துவருகிறார். இவரின் மகள் நிவேதினி (14), கே.வி.குப்பம் அருகே சென்னாங்குப்பத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 9-ம் வகுப்பு படித்துவந்தார்.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், வகுப்பறையில் அமர்ந்திருந்த நிவேதினி திடீரென மயங்கிவிழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு கே.வி.குப்பத்தில் உள்ள ரூசா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவல் தெரிந்ததும், பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு, மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த மருத்துவர்கள், `வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குச் செல்லுங்கள்’ என்று கூறினர்.

சி.சி.டி.வி காட்சி
சி.சி.டி.வி காட்சி

சி.எம்.சி-க்கு வருவதற்குள் நிவேதினி உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

`வகுப்பறையில் ஏற்பட்ட காயம்; அலட்சிய ஆசிரியர்கள்!’- 5ம் வகுப்பு சிறுமியின் உயிரைப் பறித்த பாம்பு

இதுகுறித்து, மாணவியின் தந்தை கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதலில் பள்ளி நிர்வாகம் மீது சந்தேகம் எழுந்தது. வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்த பிறகே வலிப்பு ஏற்பட்டு மாணவி மயக்கமடைந்தது தெரியவந்தது.

நிவேதினி
நிவேதினி

`பள்ளி நிர்வாகம் மீது எந்தத் தவறும் இல்லை' எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாணவி வலிப்பு ஏற்பட்டுத் துடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு