Published:Updated:

``விகடனின் உதவி, கைகொடுத்த சிவகார்த்திகேயன் அண்ணா... இப்போ மெடிக்கல் சீட் கிடைச்சிடுச்சு!" - சஹானா

பெற்றோருடன் சஹானா
News
பெற்றோருடன் சஹானா ( ம.அரவிந்த் )

நடிகர் சிவகார்த்திகேயன் தன் உதவியாளர்களை சஹானா வீட்டுக்கு நேரில் அனுப்பி வைத்ததுடன், ``தங்கச்சி, உன்னை படிக்க வைத்து டாக்டராக்க வேண்டியது என் பொறுப்பு, எதுக்கும் கவலைப்படாதே. நீட் தேர்வு எழுது" என போன் மூலம் பேசி சஹானாவுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

பேராவூரணி அருகே மாணவி ஒருவர் ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தும் குடும்ப வறுமையால் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற தன்னுடைய லட்சியம் கனவாகவே கலைந்துவிடுமோ எனத் தவித்து நின்றது விகடனில் செய்தியாக வெளியானது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தன் செலவில் அந்த மாணவியை நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்துப் படிக்க வைத்த நிலையில், தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவிக்கு டாக்டர் சீட் கிடைத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கணேசன். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு தேவிபாலா, சஹானா என இரண்டு மகள்கள். வாடகை வீட்டில் குடியிருக்க வருமானம் இடம் கொடுக்காததால் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் உள்ள குடிசை வீட்டில் தோப்பைக் கவனித்தபடி வசித்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முழுதாக எழுந்து நிற்கக்கூட முடியாத குருவிக்கூடு குடிசை வீட்டையும் 2018-ல் வீசிய கஜா புயல் களைத்துப் போட்டது. மின்சார வெளிச்சத்தையே பார்த்திராத வீடு, எப்போதும் விலகாமல் சூழ்ந்திருந்த வறுமை இவற்றுக்கு மத்தியில், `படிப்பு மட்டுமே நம் குடும்பத்தை நிமிரச் செய்யும்' என்ற வைக்கிராக்கியத்துடன் அரசுப் பள்ளியில் படித்து வந்தார் சஹானா. பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடமும், 2019-ல் ப்ளஸ் டூவில் 600-க்கு 524 மார்க்கும் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தந்தையுடன் சஹானா
தந்தையுடன் சஹானா

டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது சஹானாவின் கனவு. அதற்கான மதிப்பெண்ணும் கிடைத்துவிட்டது. ஆனால் பணம்? குடும்பமே கலங்கி நின்றது. தன் கனவு கரை சேருமா என்ற தவிப்பு சஹானாவின் கண்களில் கண்ணீராகக் கொட்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது நம் கவனத்துக்கு வந்ததுமே, சஹானாவின் வீட்டுக்கு நேரில் சென்றதுடன், `மின்சாரமே பார்த்ததில்லை பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம், ப்ளஸ் டூவில் 524-சஹானா' என்ற தலைப்பில் அந்தக் குடும்பத்தின் நிலையை விகடனில் செய்தியாக வெளியிட்டோம்.

இதைப் படித்த விகடன் வாசர்கள் பலர் சஹானாவுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து நெகிழ வைத்தனர். அப்போதைய தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் சஹானாவின் வீட்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் வெளிச்சம் படர்ந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகர் சிவகார்த்திகேயன் தன் உதவியாளர்களை சஹானா வீட்டுக்கு நேரில் அனுப்பி வைத்ததுடன், ``தங்கச்சி, உன்னை படிக்க வைத்து டாக்டராக்க வேண்டியது என் பொறுப்பு, எதுக்கும் கவலைப்படாதே. நீட் தேர்வு எழுது" என போன் மூலம் பேசி சஹானாவுக்கு நம்பிக்கை கொடுத்தார். சொன்னது போலவே நீட் பயிற்சிக்கான செலவு முழுவதையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டார்.

பெற்றோருடன் மாணவி சஹானா
பெற்றோருடன் மாணவி சஹானா

இதை, `தஞ்சாவூர் கலெக்டர் மின்சாரம் கொடுக்கவும், கடலூர் கலெக்டர் உதவுறதாவும் சொல்லியிருக்காங்க! சஹானா',

`நன்றி விகடன்... சிவகார்த்திகேயனும் மேலும் பலரும் உதவுறாங்க!' நெகிழும் சஹானா',

`நீட்ல மார்க் குறைஞ்சிடுச்சு, சென்னையில் கோச்சிங் ஏற்பாடு செய்றாங்க சிவா அண்ணா' என்ற தலைப்புகளில் அடுத்தடுத்து விகடனில் சஹானா குறித்து ஃபாலோஅப் செய்திகள் எழுதினோம்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற மருத்துவ கவுன்சலிங்கில் சஹானாவுக்கு அரசு ஒதுக்கிய 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின்படி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைத்திருக்கிறது. சஹானா மட்டுமல்ல, சிவகார்த்திகேயன் தரப்பிலும் இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் போட்டுவிட்டு தன் கனவுகளுக்கான வாசல் திறந்த உற்சாகத்தில் இருக்கும் சஹானாவிடம் பேசினோம். ``டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது சின்ன வயசுலேயிருந்தே எனக்கு பெரும் ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. வீட்ல லைட் கிடையாது. இருக்க ஒழுங்கான இடம் கிடையாது. பகல் நேர சூரிய வெளிச்சம்தான் எனக்கான லைட்.

கடும் வைராக்கியத்துடன் படித்ததில் ப்ளஸ் டூவில் நல்ல மார்க் கிடைத்தது. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்றால் நீட தேர்வு எழுதணும். அதில் பாஸ் செய்தால் மட்டுமே மெடிக்கல் சீட் கிடைக்கும். நீட் கோச்சிங் கிளாஸ்ல சேர்த்து படிக்க லட்சக்கணக்குல செலவாகும்னு பலரும் சொன்னாங்க. என் லட்சியம் கனவாகவே கலைஞ்சிடுமோனு கலங்கி நின்றேன்.

என்னோட இந்த நிலையைப் பற்றி அந்த நேரத்தில் விகடன்ல செய்தி வெளிவந்தது. அதைப் படித்த அண்ணன் சிவகார்த்திகேயன், தன் உதவியாளர்களை எங்க வீட்டுக்கு அனுப்பியதுடன் எனக்கு நம்பிக்கை வார்த்தைகளையும் தந்தார். மேலும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிப்பதற்கான முழு செலவையும் ஏத்துக்கிட்டார்.

என் பெற்றோர் முகத்தில் முதல் முறையா சிரிப்பை அப்பதான் நான் பார்த்தேன். உள்ளூரிலேயே கோச்சிங் எடுத்து 2019-ல் நீட் தேர்வு எழுதினேன். ஆனா போதுமான மார்க் கிடைக்கலை. என்னோட கனவும், சிவா அண்ணா என் மேல வெச்சிருந்த நம்பிக்கையும் பொசுங்கிடுச்சேனு ரொம்ப கலங்கிப் போனேன்.

ஆனா சிவா அண்ணா, `தங்கச்சி, நீ டாக்டருக்குப் படிக்க வேண்டியது என் பொறுப்பு. திரும்பவும் நீட் தேர்வு எழுதலாம். நிச்சயம் நீ பாஸாகிடுவ. உனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்'னு சொன்ன வார்த்தைகள் என் மனதுக்குள் விதையாக விழுந்தது.

வீட்டில் சஹானா
வீட்டில் சஹானா

சொன்னதுபோலவே சென்னையில் உள்ள தனியார் கோச்சிங் சென்டரில் என்னை சேர்த்து படிக்க வைத்தார். தங்கும் செலவு, உணவு, கோச்சிங் சென்டருக்கான பீஸ் என அனைத்தையும் உதவியாளர் மூலம் செலுத்த வைத்தார். என் மேல நம்பிக்கை வெச்சு லட்சக்கணக்குல சிவா அண்ணன் செலவு பண்றார், இந்த வாய்ப்பை விட்டுடக் கூடாதுனு படித்தேன்.

சிவா அண்ணன் உதவியாளர், `காசு, பணத்தையெல்லாம் கணக்கு பண்ணாதடா, எந்தக் கவலையும் இல்லாம படிக்கச் சொல்லியிருக்கார் சிவா சார்'னு என்னை உற்சாகப்படுத்தினார். ஒருமுறைகூட என்னை நேரில் பார்க்கலை. ஆனா எனக்கான தேவைகளைக் கொஞ்சமும் சுணக்கம் இல்லாமல் நிறைவேற்றிக் கொடுத்துகிட்டே இருந்தார் சிவா அண்ணன்.

சமீபத்தில் வெளியான நீட் தேர்வில் 273 மார்க் எடுத்தேன். இப்போது அரசு பள்ளியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டின்படி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கு சீட் கிடைச்சு கல்லூரியிலும் சேர்ந்துட்டேன். சொன்னதுபோலவே மருத்துவப் படிப்புச் செலவு முழுவதையும் சிவகார்த்திகேயன் அண்ணாவே ஏற்றுக்கொள்வதா சொல்லிட்டார். இனி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வு

என் லட்சிய கனவுக்கான வாசல் திறந்துடுச்சு. மருத்துவக் கல்லூரி தொடங்கி கிளாஸுக்குள் காலடி எடுத்து வைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதற்கான ஆரம்பப்புள்ளி, விகடன் மூலமாகவே தொடங்கியது. என்மேல என்னைவிட அதிக நம்பிக்கை வைத்த சிவா அண்ணா இதை சாத்தியமாக்கிக் கொடுத்திருக்கிறார். எனக்குக் கைகொடுத்து, என் கனவுக்கு உயிர் கொடுத்த விகடன் மற்றும் சிவா அண்ணாவுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.

என் அக்கா தேவிபாலா, தனியார் கல்லூரியில் பி.எட் படிக்கிறாங்க. எப்பவும் கவலை படர்ந்திருந்த என் அம்மா, அப்பாவின் முகத்தில் இப்பதான் நிரந்தர சிரிப்பை பார்க்க முடியுது. தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் சார் எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஏற்பாடு செய்து கொடுத்தா, எங்களுக்குனு சொந்தமா சின்னக் குடிசை வீட்டை அமைச்சுக்குவோம். எங்க சந்தோஷமும் எப்பவும் நிலைச்சிருக்கும்'' என்கிறார் சஹானா.

உதவிகளால் அழகாகிறது உலகம்!