Published:Updated:

‘கூண்டு எலி’களான பொறியியல் மாணவர்கள்! - மீட்சிக்கு என்ன வழி?

பொறியியல்
பிரீமியம் ஸ்டோரி
பொறியியல்

உண்மையில், காலத்துக்கும் அழிவில்லாதது பொறியியல். எதிர்காலத்தில் உச்சமடையும் அடிப்படைத் தேவைகளான நகர விரிவாக்கம் தொடங்கி விவசாயம், நீர் மேலாண்மை வரை பொறியியலைத் தவிர்த்து எதுவும் சாத்தியமில்லை.

‘கூண்டு எலி’களான பொறியியல் மாணவர்கள்! - மீட்சிக்கு என்ன வழி?

உண்மையில், காலத்துக்கும் அழிவில்லாதது பொறியியல். எதிர்காலத்தில் உச்சமடையும் அடிப்படைத் தேவைகளான நகர விரிவாக்கம் தொடங்கி விவசாயம், நீர் மேலாண்மை வரை பொறியியலைத் தவிர்த்து எதுவும் சாத்தியமில்லை.

Published:Updated:
பொறியியல்
பிரீமியம் ஸ்டோரி
பொறியியல்
“என் பொண்ணுக்கு இன்ஜினீயரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்...”, “நான் படிச்சு பெரிய இன்ஜினீயராவேன்!” - சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்படியான பெருமிதங்களுடன் ஸ்டேட்டஸுக்கான அடையாளமாகத் திகழ்ந்தது பொறியியல் படிப்பு. இன்றோ பொறியியல் முடித்த பலரும் தகுதிக்கேற்ற வேலையில்லாமல் உணவு பார்சல் நிறுவன ஊழியர், கூரியர் சர்வீஸ் எனக் கிடைத்த வேலைகளைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய பொறியியல் கலந்தாய்வில், 93,402 பொறியியல் இடங்கள் காலியாக இருக்கின்றன. 20 பொறியியல் கல்லூரிகளில் ஓர் இடம்கூட நிரம்பவில்லை. 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியிருக்கின்றன. தமிழகத்தில் அழிவை நோக்கிச் செல்கிறதா பொறியியல்துறை?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையில், காலத்துக்கும் அழிவில்லாதது பொறியியல். எதிர்காலத்தில் உச்சமடையும் அடிப்படைத் தேவைகளான நகர விரிவாக்கம் தொடங்கி விவசாயம், நீர் மேலாண்மை வரை பொறியியலைத் தவிர்த்து எதுவும் சாத்தியமில்லை. தமிழகத்தில் தற்போது பொறியியல்துறை, காற்று வாங்குவதற்குக் காரணம், தேவைக்கும் அதிகமாகப் புற்றீசல்போலக் கிளம்பிய தரமில்லாத பொறியியல் கல்லூரிகளே. ‘இன்ஸ்டன்ட்’ கல்வித்தந்தைகளால் ‘உப்புமா’ கம்பெனிகளைப்போலத் தொடங்கப்பட்ட இவை, பணம் ஒன்றையே பிரதானமாக்கி, ஏதோ எலிகளைப் பிடிப்பதுபோலக் கவர்ச்சிப் ‘பொறி’வைத்து மாணவர்களைப் பிடித்து, பொறியியல் என்னும் கூண்டுக்குள் அடைத்தன.

எந்தவித உள்கட்டமைப்பு வசதிகளும், பொறியியல் தொழில்நுட்ப அறிஞர்களும் இல்லாத பல கல்லூரிகள் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே திணித்தன. கூண்டு எலிகளாக மாறிப்போனார்கள் மாணவர்கள். இவ்வாறு தகுதியும் திறமையும் இல்லாமல் ஆண்டுக்குச் சுமார் ஒரு லட்சம் பேர் படிப்பை முடித்து வெளியேறியதால், கானல்நீராகிப்போனது வேலைவாய்ப்பு.

சமீபத்தில் பிரபலமான கணிப்பொறி நிறுவனம் ஒன்று, இப்படி விளம்பரம் கொடுத்திருந்தது... ‘நீங்கள் ப்ளஸ் டூ படித்திருந்தால் போதும். ஐடி கம்பெனியில் வேலை; மாதம் ரூ.10,000 ஊதியம். கணிப்பொறி அறிவியல் படிப்பதற்கும் நாங்களே செலவிடுகிறோம்’ என்றது அது. அதாவது, ‘ப்ளஸ் டூ படித்த மாணவனுக்கும் பி.இ படித்த மாணவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’ என்பதைத்தான் முகத்தில் அறைந்ததுபோலச் சொல்கிறது இந்த விளம்பரம்.

‘கூண்டு எலி’களான பொறியியல் மாணவர்கள்! - மீட்சிக்கு என்ன வழி?

சென்னை கிண்டியிலிருக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தமிருக்கும் 1,62,154 இடங்களில், 93,402 இடங்கள் இன்னும் நிரம்பவில்லை. இதனால், கல்லா கட்ட முடியாத ‘கல்வித்தந்தை’கள் பலரும், தங்கள் கல்லூரிகளைத் தங்கும் விடுதிகளாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டனர். சில தனியார் நிர்வாகங்கள் தங்கள் பொறியியல் கல்லூரியை, கலைக் கல்லூரியாக மாற்ற முயன்றுவருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, ஏழு பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கலைக் கல்லூரியாக மாற்றுவதற்கு அனுமதி கேட்டு, 30 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. 12 கல்லூரிகள், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நிறுத்துவதற்காக விண்ணப்பித்திருக்கின்றன.

ஆனாலும், ``இதைக் கண்டு துவள வேண்டாம்’’ என்று நம்பிக்கையூட்டுகிறார் கல்வியாளர் `ஆனந்தம்’ செல்வகுமார். ``தரமில்லாத கல்லூரிகளே இழுத்து மூடப்படுகின்றன. தரமான பொறியியல் மாணவர்களுக்கு இன்னமும் டிமாண்ட் இருக்கிறது. பாரா மெடிக்கல் சயின்ஸ், வேளாண் படிப்பு ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. அதேநேரம், கல்லூரிகளிலிருந்து வெளியே வரும் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியோடு இருக்க வேண்டியது முக்கியம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன தொழில்நுட்பம் வரப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் இருப்பதில்லை. ஒரு மாணவருக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். இதைத்தான் தொழில் நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன. அதில் கோட்டைவிடும்போதுதான், மொத்த பொறியியல் படிப்பின்மீதே தவறான இமேஜ் ஏற்பட்டுவிடுகிறது” என்றார்.

``பொறியியல் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதா?” என்று பொறியியல் பிரிவு மாணவர் குணாநிதியிடம் பேசினோம். ``கடந்த சில ஆண்டுகளாகத் தனியார் கல்லூரியினரும், மாணவர்கள் பலருமே பொறியியல்துறையில் தங்களை அப்டேட் செய்துகொள்ளத் தவறிவிட்டனர். தற்போது தொழில் புரட்சி 4.0 தொடங்கிவிட்டது. மெக்கானிக்கல், சிவில் துறைகளில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. மெக்கானிக் துறையில் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா சயின்ஸ் பாடப்பகுதிகள் உருவாகிவிட்டன. ஐடி துறையில் மெஷின் லேர்னிங், ஏ.ஐ எனப் பொறியியல் பிரிவுகள் வளர்ந்துவருகின்றன. கண்ணை மூடிக்கொண்டு துறைகளையும் கல்லூரியையும் தேர்வு செய்யாமல், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு தேர்வு செய்தால், பொறியியல் படிப்பு காலை வாரிவிடாது” என்றார்.

மாணவர் சேர்க்கை குறைந்தது குறித்து, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மாணவர் சேர்க்கைச் செயலாளர் புருஷோத்தமனிடம் பேசினோம். ``கவுன்சலிங் முடியவில்லை. இன்னும் 6,000 இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன். பொறியியலுக்கு அழிவே இல்லை; மாணவர்களுக்குத் தேவை சிறு ‘பொறி’ மட்டுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism