Published:Updated:

காட்டைக் கற்கலாம்!

புலி
பிரீமியம் ஸ்டோரி
புலி

கல்விச் சிறப்பிதழ்

காட்டைக் கற்கலாம்!

கல்விச் சிறப்பிதழ்

Published:Updated:
புலி
பிரீமியம் ஸ்டோரி
புலி

ங்கள் மகனோ மகளோ விலங்குகளை, பறவைகளை, பூச்சிகளைக் கவனிப்பதில், அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் பேரார்வம் கொண்டவராக இருக்கிறாரா?! அவர்களுக்குக் காட்டுயிர் ஆய்வாளர் ஆவதற்கான திறன்கள் இருக்கின்றன. அவருக்கு அதுகுறித்த படிப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காட்டுயிர் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காட்டுயிரியல், காட்டியல், சுற்றுச்சூழல் அறிவியல், கடல்சார் அறிவியல் என்று பல்வேறு படிப்புகள் முதுகலையில் இருக்கின்றன. அவற்றைப் படிக்க, இளங்கலைப் படிப்பில், பி.எஸ்ஸி விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), நுண்ணுயிரியல் (Micro Biology), காட்டியல் (Forestry) போன்ற படிப்புகளைப் படிக்கவேண்டும். அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலுமே இந்தப் படிப்புகள் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காட்டுயிர் அறிவியல் என்ற படிப்புக்குத் தமிழகத்தில் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி கல்லூரி மிகவும் புகழ்பெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற காட்டுயிர் ஆய்வாளர்களான முனைவர்கள் ஏ.ஜெ.டி.ஜான் சிங், குமரகுரு, ப.ஜெகநாதன் போன்றோரும் இதே கல்லூரியில்தான் படித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காட்டுயிர் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறித்த படிப்புக்குத் தமிழகத்தில் மிகவும் பழைமையான கல்லூரியாக இது அறியப்படுகிறது. காட்டுயிர் அறிவியல் படிப்பில், காட்டுயிர் தொடர்பான அனைத்தையும் பாடத்திட்டத்தின் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். கூடுதலாக, புராஜெக்ட்டுக்காகக் காடுகளுக்குள் சென்று ஆய்வு செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறார்கள்.

காட்டைக் கற்கலாம்!
காட்டைக் கற்கலாம்!

வனத்துறை நடத்தக்கூடிய யானை, புலி, வண்ணத்துப்பூச்சி, பறவைகள் கணக்கெடுப்பின் போதெல்லாம் காட்டுயிர் அறிவியல் மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற கள அனுபவங்கள், அவர்களுடைய ஆய்வு மனப்பான்மையை வளர்த்தெடுக்கப் பெரிதும் உதவுகின்றன. கள ஆய்வின்போது ஏற்படும் சிரமங்கள் என்ன, என்னென்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்பது போன்ற அனைத்தையும் இந்தக் கள ஆய்வு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. அதன்மூலம் அவர்கள், தங்கள் துறையில் செய்யக்கூடிய எதிர்கால ஆய்வுகளில் சிறந்து விளங்க முடிகிறது.

எம்.எஸ்ஸி முடிக்கும்போதே மாணவர்கள் காட்டுயிர் ஆய்வு நிறுவனங்களில் வெளியிடும் பல்வேறு ஆய்வுத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டேராடூனிலுள்ள இந்திய காட்டுயிர் நிறுவனம், கோவையிலுள்ள சலீம் அலி இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு, மும்பையிலுள்ள பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் போன்ற அமைப்புகள் அத்தகைய ஆய்வுகளுக்குக் காட்டுயிர் அறிவியல், கடல்சார் அறிவியல், காட்டியல் படித்த மாணவர்களைத் தேர்வுசெய்கின்றன. இந்த நிறுவனங்கள், இந்தியா முழுக்கப் பல்வேறு காடுகளில் பல்வேறு காட்டுயிர்களை ஆய்வுசெய்கின்றன.

காட்டுயிர் ஆராய்ச்சிக்குள் இளைஞர்கள் வரவேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அதிலுள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசிய பறவை ஆய்வாளர் கிருபாநந்தினி, “ஆய்வு நிறுவனங்களே முதுகலை முடித்த மாணவர்களை வேலைக்கு எடுக்கும். முதுகலைப் படிப்பில் காட்டுயிர் அறிவியல் முடிக்கும் மாணவர்கள், அப்படிப்பட்ட ஆய்வு நிறுவனங்களில் ஏதேனும் ஆய்வுத் திட்டத்தில் இணைந்து பணியாற்றலாம். சில வருடங்கள் அவர்கள் அங்கு அனுபவம் பெற்ற பிறகு, அவர்களே சுயமாகச் சில ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்கலாம். அதற்குரிய நிதியுதவியைக் கொடுக்கப் பல அமைப்புகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, Department of Science & Technology என்ற அமைப்பு முதன்முதலாக சுயமாக ஆய்வுசெய்ய வருபவர் களுக்கும் பெண்களுக்கும் முதலுரிமை கொடுத்து ஊக்குவித்துவருகிறது. ஆய்வு மாணவர்கள் தங்கள் துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் ஆரம்பக்காலத்தில் இத்தகைய அமைப்புகளின் உதவி அவர்களுக்குத் துணைபுரியும்” என்று கூறினார்.

இதுபோக, இயற்கைப் பாதுகாப்பு உயிரியல் (Conservation Biology), சூழலியல் மற்றும் உயிர்த் தகவலியல் (Ecological and Bio Informatics), காட்டுயிர் மருத்துவம் (Wildlife veterinary) போன்ற படிப்புகளும் இங்குள்ளன.

இவை தவிர பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் படிக்காத மாணவர்களும்கூட, கீழே குறிப்பிட்டுள்ள படிப்புகளின் மூலம் இயற்கைப் பாதுகாப்புத் துறைக்குள் நுழையலாம்.

கிருபாநந்தினி
கிருபாநந்தினி

அவர்களும் இயற்கை மற்றும் காட்டுயிர்ப் பாதுகாப்பில் நேரடியாகவோ மறைமுகமாகவோ படிக்கமுடியும். உதாரணத்திற்கு, சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிரியப் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த பட்டப்படிப்புகள் இருக்கின்றன. அதுபோக, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கொள்கைகளை வகுப்பதற்கான படிப்புகளான பாலிசி ஸ்டடீஸ் (Policy Studies), தொலையுணர்தல் (Remote Sensing), புவியியல் தகவல் முறைமை (Geographical Information System – GIS) தொடர்பான படிப்புகளும் இருக்கின்றன. இந்தப் படிப்புகளைப் படிப்பதற்கான கல்லூரிகள் தமிழகத்தில் திருச்சி, சென்னை, மேட்டுப்பாளையம், ஊட்டி, கோவை, மதுரை மற்றும் பாண்டிச்சேரியிலும் இருக்கின்றன. காட்டுயிர் ஆய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான படிப்புகளுக்குப் பெரிய அளவில் செலவும் எடுப்பதில்லை. அதேநேரம், இவற்றைப் படிப்பதற்குக் கல்விக்கடனும் மற்ற படிப்புகளுக்குக் கிடைப்பதுபோலவே கிடைக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும், தீவிரமாகி வரும் காலநிலை மாற்றத்தால் அழிந்துகொண்டிருக்கும் உயிரினங்களைப் பாதுகாக்கக் காட்டுயிர் தொடர்பான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தத் துறையில் இந்தியா மிக நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது. பல்வேறு உயிரினங்கள் இன்று அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் என்று மனிதத் தலையீடுகளால் அதிகரித்திருக்கும் சூழலியல் சீர்குலைவு உயிரின அழிவை விரைவுபடுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் ஆய்வுத்துறைக்குள் இளைஞர்களின் பங்கு அதிகம் தேவைப்படுகிறது. அதற்குரிய பலனும் இந்தத் துறைக்குள் வருபவர்களுக்குக் கிடைக்கவே செய்கிறது.

புலி
புலி

வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, காட்டுயிர்களைப் பாதுகாக்கப் போராடிய பல்வேறு ஆய்வாளர்கள் இன்றும் நம் முன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆசியாவிலேயே குஜராத்தில் மட்டுமே வாழும் சிங்கங்களைப் பாதுகாக்கத் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் ரவி செல்லம் செய்த ஆராய்ச்சிகள், காட்டுயிர் ஆய்வுத்துறையில் மறக்க முடியாதவை. புவி வெப்பமயமாதலாலும் ஆக்கிரமிப்புகளாலும் தங்கள் வாழ்விடங்களையும் புகலிடங்களையும் இழந்துவரும் பறவைகளைப் பாதுகாக்க மாநிலம் மாநிலமாக ஓடிக் கொண்டிருக்கிறார் பறவை ஆய்வாளர் கிருபா நந்தினி. காட்டுயிர்கள் இருந்தால்தான் காடுகள் இருக்கும். காடுகள் இருந்தால்தான் நாடுகள் நிலைக்கும். அப்படிப்பட்ட காட்டுயிர்களைப் பாதுகாக்க ஆய்வுகள் அவசியம். அதை முன்னெடுக்கும் இத்தகைய ஹீரோக்களைப்போல் உங்கள் குழந்தைகளாலும் நாளை மாற முடியும்.

இனி, உங்கள் குழந்தை என்ன படிக்கலாம் என்று கேட்டால் காட்டுயிர் ஆராய்ச்சிக்கான படிப்புகளையும் அறிமுகப் படுத்துங்கள். அவர்களுடைய தனித்துவத்திற்கான அங்கீகாரமும் அதில் நிச்சயம் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism