இந்தி, சம்ஸ்கிருதத்தைக் கவனப்படுத்தும் ஐரோப்பாவின் மற்ற பல்கலைக்கழகங்களைப் போலல்லாமல், தமிழைக் கவனப்படுத்துவது இந்தப் பல்கலைக்கழத்தின் சிறப்பு!
ஜெர்மனியின் கோலோன் நகரில் அமைந்திருக்கிறது கோலோன் பல்கலைக்கழகம். மத்திய ஐரோப்பாவின் ஆறாவது பல்கலைக்கழகமாக 1388-ம் ஆண்டு நிறுவப்பட்ட இது, உலகின் மிகப் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. 1798-ல் மூடப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், 1919-ல் மீண்டும் தொடங்கப்பட்டு இன்றுவரைச் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பழைமையான பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் புலத்தில் தமிழ்ப் படிப்புகள் துறை இயங்கிவருகிறது. இந்தி, சம்ஸ்கிருதத்தைக் கவனப்படுத்தும் ஐரோப்பாவின் மற்ற பல்கலைக்கழகங்களைப் போலல்லாமல், தமிழைக் கவனப்படுத்துவது இதன் சிறப்பு. இங்குப் படித்தவர்களில் இருவர் சிகாகோ பல்கலைழக்கத்திலும், பெர்லின் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றுகின்றனர். இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப் படிப்புகளை வழங்கும் இந்தத் துறையில் இப்போது 12 மாணவர்கள் பயில்கின்றனர்.
தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இந்தியவியல் அறிஞரான கிளாஸ் லுத்விக் ஜேனேவால் 1963-ல் இத்துறை தொடங்கப்பட்டது. அப்போது லுத்விக் தொடங்கிய தமிழ் நூலகம், 40,000 புத்தகங்களுடன் இன்று பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது; மேற்குலகில் இருக்கும் மிகப் பெரிய தமிழ் நூலகங்களில் இதுவும் ஒன்று. சங்க இலக்கியம் தொடங்கி பழங்குடிகள் மொழிவரை பல்துறை ஆய்வுகளுக்கு கோலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் படிப்புகள் துறை மிகப்பெரிய பங்களிப்புகளை இதுவரை வழங்கியிருக்கிறது.

2005-ல், ஐரோப்பா முழுக்க இந்தியவியல் துறைகள் மூடப்பட்டபோது, கோலோனின் தமிழ்த் துறையும் அந்த நிலையை எதிர்கொண்டது. ஆனால், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் எதிர்ப்பால் பல்கலைக்கழகம் அந்த முடிவை மறுபரிசீலனை செய்தது. என்றபோதிலும், 2022-ல் பணி நிறைவு பெறவிருக்கும், துறையின் தற்போதைய பேராசிரியை உல்ரிக் நிக்லாஸுக்குப் (Ulrike Niklas) பிறகு அடுத்த பேராசிரியரை நியமிக்கப் போவதில்லை என்று 2014-ல் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருந்தது. தமிழ்ச் செவ்விலக்கியங்களை ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்ததற்காக, பேராசிரியர் நிக்லாஸுக்குத் தமிழக அரசு இந்தாண்டு ஜி.யு.போப் விருது வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிதிப் பற்றாக்குறை என்ற அடிப்படைப் பிரச்னையால், சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் வெகு சிலவற்றில் பிரத்தியேகமாக இருக்கும் தமிழ்த் துறைகளில் ஒன்றும், தனிச் சிறப்பு வாய்ந்த நூலகமும் மூடப்படும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.
குறைந்தபட்சம் தமிழ் விரிவுரையாளர் இடம் ஒன்றையாவது தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகள் தற்போது தீவிரமடைந்திருக்கின்றன. மார்ச் 2021 வரையிலான இந்த விரிவுரையாளர் பணிக்கு, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை €1,37,500 (சுமார் 1.25 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்கியிருந்தது. கற்பித்தல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறுத்தப்படாமல் தொடர்வதை இந்த நிதியுதவி உறுதிசெய்தது. அந்நிய மொழியாகத் தமிழைக் கற்பிப்பதில் நவீன வழிமுறைகளை உருவாக்குவது இப்பணியின் முதன்மைப் பணி.
மே 2022 வரை திட்டமிடப்பட்டிருக்கும் இப்பணியை நிறைவு செய்வதற்கு மேலும் €1,37,500 மார்ச் 2021-க்குள் தேவைப்படுகிறது. ஒருவேளை இந்தத் தொகையைத் திரட்ட முடியாதபட்சத்தில், நிதிப் பற்றாக்குறையால் தமிழ்த் துறை மூடப்படும். ஆகவே, கோலோனின் தமிழ்த் துறையில் விரிவுரையாளர் இடம் தொடர்வதற்கு நிதியுதவி உடனடியாகத் தேவை.
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ஆகஸ்ட் 2020-ல் ஐரோப்பாவிலுள்ள 8 தமிழ்ச் சங்கங்கள் இணைந்து ‘நாட்டுப்புறக் கலை விழா’ என்ற நிகழ்வை முன்னெடுத்தனர். இப்போது கோலோனின் தமிழ்த் துறையைத் தக்க வைக்க ஐரோப்பா தமிழர்கள் என்ற பெயரில் 12 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 20 தமிழ்ச் சங்கங்கள் நிதி திரட்டும் பணியில் இணைந்திருக்கின்றன.
இதுவரை €9,041.5 (சுமார் 7 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்கள்) சேர்ந்திருக்கின்றன; நீங்களும் இதற்குப் பங்களிக்க விரும்பினால் இங்குச் செல்லுங்கள்.