Published:Updated:

`பள்ளி மாணவர்களின் திறனறிய `Tamanna' தேர்வு!' - சிபிஎஸ்இ-யின் புதிய முயற்சி

பள்ளி மாணவர்களின் திறன்களை அறியும் விதமாக புதிய தேர்வை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது.

தமன்னா தேர்வு
தமன்னா தேர்வு

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறன்களை அறியும் விதமாக தமன்னா என்ற புதிய தேர்வு முறை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்களது திறன்களை அறியும் விதமாக இந்தத் தேர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் எந்தப் பாடத்தில் சிறப்பாக உள்ளனர். வருங்காலத்தில் உயர்கல்விக்குச் செல்லும்போது எந்தப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு இந்தத் தேர்வு உதவும் எனக் கூறப்படுகிறது.

தமன்னா தேர்வு
தமன்னா தேர்வு

அது என்ன தமன்னா தேர்வு என்கிறீர்களா. இதோ உங்கள் கேள்விக்கான விடை. என்.சி.இ.ஆர்.டி மற்றும் சிபிஎஸ்சி இணைந்து உருவாக்கியுள்ள திறனறி தேர்வின் பெயர்தான் தமன்னா. ஆங்கிலத்தில் Try And Measure Aptitude And Natural Abilities என்பதன் சுருக்கம்தான் இந்த TAMANNA. மொழித்தேர்வு, பகுத்தறிவு , வாய்மொழித்தேர்வு, எண் திறன், கண்ணோட்டத் திறன் உள்ளிட்ட 7 தலைப்புகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

`சந்தேகம் எழுகிறது; நியாயமற்ற கட்டண உயர்வு ஏன்?!' - சி.பி.எஸ்.இ முடிவால் கொதிக்கும் கல்வியாளர்

ஒவ்வொரு தலைப்பிலும் 30 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு தலைப்புக்கும் 10 நிமிடங்கள் என 70 நிமிடங்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதிகம், சராசரி, குறைவு என்ற மூன்று நிலைகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த 7 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்து உயர்கல்வித் துறையைத் தேர்வு செய்யலாம். உதாரணமாக மொழித்தேர்வு, பகுத்தறிவு , வாய்மொழித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் சட்டம், இதழியல், விளம்பரம் உள்ளிட்ட துறை சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

தமன்னா தேர்வு
தமன்னா தேர்வு

எண் திறன், கண்ணோட்டத் திறன் போன்றவற்றில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் வங்கி, புள்ளியியல் உள்ளிட்ட துறைகளைத் தேர்வு செய்யலாம். இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்தத் தேர்வானது மாணவர்களின் பலத்தை அறிந்துகொள்வதற்கு மட்டுமே பயன்படும் என்கிறது சிபிஎஸ்இ. இந்தத் தேர்வில் வெற்றி, தோல்வி என்பது இல்லை. இந்தத் தேர்வும் எல்லா மாணவர்களுக்கும் கட்டாயம் இல்லை. ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டுமே இதில் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சோதனை முயற்சியாக 17,586 மாணவர்களுக்கு இத்தேர்வை சிபிஎஸ்இ ஏற்கெனவே நடத்தியுள்ளது.