Published:Updated:

`வீட்டுப் பாடம் எழுதவில்லை!'- 2ம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் சரமாரியாக அடித்த அரசுப் பள்ளி ஆசிரியர்

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றில் வீட்டுப் பாடம் எழுதி வராத 2-ம் வகுப்பு மாணவியை, வகுப்பாசிரியர் பிரம்பால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காயமடைந்த மாணவி
காயமடைந்த மாணவி

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே, பூனையன் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தத் தொடக்கப் பள்ளியில் 25 குழந்தைகள் கல்வி பயின்றுவருகின்றனர். இதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகள், இரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் தினமும் வீட்டுப் பாடம் எழுதக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், 2-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வகுப்பாசிரியர் வீட்டுப் பாடம் எழுதக் கொடுத்துள்ளார்.

மாணவி
மாணவி

அந்த வீட்டுப் பாடத்தை, 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எழுதி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், நேற்று மாணவியின் தோள்பட்டையில் 10-க்கும் அதிகமான முறை பிரம்பால் அடித்துக் காயப்படுத்தினார். வலியைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி, உடனே பள்ளிக்கூடத்தை விட்டு வீட்டுக்குச் சென்று, பெற்றோரிடம் நடந்ததைக் கூறி கதறி அழுதுள்ளார். தொடர்ந்து, அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாணவியைத் தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டுசென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்தச் சம்பவம், மற்ற பெற்றோர்கள் தரப்பில் பேரதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. ஆசிரியரின் இந்தச் செயலை சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். மாணவி தாக்கப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவிவருகிறது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

மாவட்ட கல்வி அதிகாரி ராகவனிடம் இதுபற்றிக் கேட்டபோது, "ஆசிரியர் அடித்துத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து எனக்கு தகவல்கள் வந்தன. பெற்றோர்கள் தரப்பில் இருந்து புகார் ஏதும் வரவில்லை. ஆனாலும்,  மாணவியை ஆசிரியர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தி இருந்தால், விசாரித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.