Published:Updated:

முதல் நாளிலேயே முடங்கிய இணையதளம்! - திண்டாடும் பொறியியல் கலந்தாய்வு மாணவர்கள்

துரைராஜ் குணசேகரன்

பொறியியல் கலந்தாய்வுக்கான இணையதளம் முதல்நாளிலேயே முடங்கியதால், மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு

கடந்த 22 ஆண்டுகளாக, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்திவந்தது. சமீபத்தில், பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் பதவியை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா ராஜினாமா செய்தார். பொறியியல் கலந்தாய்வுக் குழுவில் உயர் கல்வித்துறை செய்த சில மாற்றங்களில் ஏற்பட்ட அதிருப்தியே இதற்குக் காரணமாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த 22 வருடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாத முதல் கலந்தாய்வு இதுதான்.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தமிழக உயர் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. கடந்த 22 வருடங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாத முதல் கலந்தாய்வு இதுதான். தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகள், கடந்த ஆண்டிலிருந்து இணையம் மூலமாக மட்டுமே நடத்தப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு கலந்தாய்வை நடத்தவில்லை என்பதால், இதில் புதிய முறைகள் எதுவும் கையாளப்படுமா, எப்படி நடக்கும் இந்தக் கலந்தாய்வு என்ற ஐயம் மக்களின் மனதில் நிலைகொள்ளத் தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அதற்கேற்றாற்போல், ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய முதல் இரு தினம் இணையதளம் சரிவர வேலை செய்யாதது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஐயத்தை அதிகப்படுத்தியது. பின்னர், இணையதளம் சரியாக வேலைசெய்து வந்தது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு முறையில் சான்றிதழ்கள் சரிபார்ப்பது தவிர்த்து, விண்ணப்பிப்பதில் தொடங்கி கலந்தாய்வு வரை அனைத்தும் முழுமையாக ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.

இதுவரை சான்றிதழ்கள் சரிபார்ப்பது முதல், நேரடிக் கலந்தாய்வுகள் வரை அனைத்தும் முடிந்து, தரவரிசைப் பட்டியல் வெளியாகி, முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி (03.07.2019) தொடங்கியது. அந்த நாளில் பணம் செலுத்தியவர்கள் இன்று (08.07.2019) விருப்பமான கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்ய வேண்டும்.

சான்றிதழ்கள் சரிபார்தல்
சான்றிதழ்கள் சரிபார்தல்

இன்று காலை முதல் மாலை வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் இணையதளம் வேலை செய்யவில்லை. முதல்நாள் ஆன்லைன் கலந்தாய்வுகளே இப்படி ஆனதில் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உட்பட பல நகரங்களிலும் இணையதளம் காலையிலிருந்து வேலை செய்யவில்லை.

இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ``காலையிலேயே 35,000-க்கும் அதிகமான மாணவர்கள் விருப்பமான கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்ய முயன்றனர். இதனால், இணையதளம் சிறிதுநேரம் தற்காலிகமாகச் செயலிழந்து போனது. இந்தப் பிரச்னை என்ன என்பது கண்டறிந்து உடனடியாகத் தீர்வும் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் 6,500-க்கும் அதிகமான மாணவர்கள் தங்களின் விருப்பமான கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்துள்ளனர்.

இதுபோன்ற பிரச்னை பின்னாளில் திரும்ப வராமல் பார்த்துக்கொள்வோம். இன்று ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாணவர்களுக்கு ஒரு நாள் கூடுதலாகக் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. விருப்பமான கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்ய மொத்தம் மூன்று நாள்கள் இருப்பதல், கூடுதல் அவகாசம் தேவைப்படாது. அப்படி மாணவர்கள் தரப்பில் கூடுதல் நாள்கள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கை வந்தால் நிச்சயம் அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும். மாணவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளும் உடனடியாகச் செய்துதரப்படும்" என்றனர்.