Election bannerElection banner
Published:Updated:

`மொபைல் சிக்னலுக்கே மாணவியின் 5 கி.மீ பயணம்; பின் ஆன்லைன் வகுப்பு!'- இதுவும் `டிஜிட்டல் இந்தியா'தான்

online class
online class

நகரத்தில் இருக்கும் குழந்தைகளைப் போல அல்லாமல் எத்தனையோ சவால்களைத் தாண்டிதான் கிராமத்து ஏழைக் குழந்தைகள் படிக்க வருகிறார்கள். அதற்கு இன்டர்நெட் வசதி பெரிய தடை என்றால் அதை உடைத்து எறியலாமே.

ஆன்லைன் வகுப்புகளை அட்டெண்ட் செய்ய தினமும் 5 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்கிறார் 6 வயது மாணவி சரஸ்வதி.

கிராம மக்களுக்குத் தினசரி காட்சியாகப் பழகிப்போயிருந்த சிறுமி சரஸ்வதியின் ஆன்லைன் கிளாஸ் பயணத்தை வீடியோ எடுத்திருக்கிறார் இணையவாசி ஒருவர். அவர் சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்த சரஸ்வதியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தெலங்கானாவில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி சரஸ்வதியை அவரின் குடும்ப நபர் ஒருவர் ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் செய்ய வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவு வெளியே அழைத்துச் செல்கிறார்.

Online class (Representational Image)
Online class (Representational Image)

சிறுமி சரஸ்வதியை பைக்கில் அமர்த்தியபடி கையிலிருக்கும் செல்போனில் சிக்னல் கிடைக்கிறதா எனப் பார்த்துக்கொண்டே போகிறார் அந்த நபர். வீட்டிலிருந்து தொடங்கும் அந்தப் பயணத்தில் ஒருவழியாக செல்போனில் டவர் கிடைக்க 5 கிலோமீட்டர் தொலைவில் கிராமத்துக்குழாய் பாலத்தில் நிறைவடைகிறது.

செல்போனில் டவர் கிடைப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவு வரை போக வேண்டுமா என மலைப்பவர்களுக்கு, 'இது வெறும் டிரெய்லர்தான்' என்கின்றன கிராமத்துக் குழந்தைகளின் தினசரி ஆன்லைன் வகுப்பு சம்பவங்கள்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு முதலில் லேப்டாப் வேண்டும். அப்படி இல்லையா ஆண்டிராய்டு போனாவது நிச்சயம் வேண்டும். அடுத்து மிக முக்கியமானது நெட் கனெக்க்ஷன். ஆண்டிராய்டு போனுக்கும் நெட்டுக்கும் அல்லல்பட்டு பக்கத்து வீடுகளில் போனை கடன்கேட்கும் நிலை இன்னுமே தொடர்ந்து வருகிறது.

நகரங்களில் இருப்பவர்களுக்கே நெட் கனெக்ஷன் பெரும்பாடாக இருக்க, அடிப்படை வசதிகளே பூர்த்தி செய்யப்படாத கிராமத்தில் ஆன்லைன் வசதி பெரிய விஷயம்தானே.

சாதாரண தற்காலிக பிரச்னையான இன்டர்நெட் சிக்கலால் குழந்தையின் படிப்பு நின்றுவிடக் கூடாதே எனச் சிரமம் பார்க்காமல் சரஸ்வதியைப் படிக்க ஊக்கம் கொடுத்து வருகின்றனர் அந்தக் குடும்பத்தினர்.

'கல்வி அவசியம்' என்ற புரிந்துணர்வு உள்ள கிராமத்துப் பெற்றோர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எத்தனையோ காரணங்களால் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுப் போவதைக் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் சிறுமியின் படிப்பு நின்றுவிடாதபடி தகுந்த ஏற்பாடுகளைச் செய்து உடனிருந்து ஊக்கப்படுத்தும் அவர் குடும்பத்தினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நகரங்களில் இருக்கும் குழந்தைகளைப் போல அல்லாமல் எத்தனையோ சவால்களைத் தாண்டிதான் ஏழை கிராம குழந்தைகள் படிக்க வருகிறார்கள். அதற்கு இன்டர்நெட் வசதி பெரிய தடை என்றால் அதை உடைத்து எறியலாமே.

இந்தச் சிறுமியைப் போல பல சரஸ்வதிகள் கிராமங்களில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கான நிரந்தர தீர்வைத் தர அரசு இத்தனை காலம் தாழ்த்தியிருந்தாலும் கூட இனிமேலாவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே சரி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு