Published:Updated:

மாணவர்களை தேர்வெழுத நிர்பந்திக்கின்றனவா ஐ.சி.எஸ்.இ பள்ளிகள்?

ஐ.சி.எஸ்.இ தேர்வு
ஐ.சி.எஸ்.இ தேர்வு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் இந்த நெருக்கடி நிலையில் மாணவர்களை ஐ.சி.எஸ்.இ தேர்வு எழுத சி.ஐ.எஸ்.சி.இ அழுத்தம் கொடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தியாவின் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளில் இறுதி மற்றும் செமெஸ்டர் தேர்வுகள் நடத்துவதில் குழப்பங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கும் தேர்வு நடத்துவதில் சிக்கல் நிலவியது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால், சி.ஐ.எஸ்.சி.இ (CISCE - Council for the Indian School Certificate Examinations) நடத்தும் தேர்வுகளில் இன்னும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. மாணவர்களை தேர்வெழுத சி.ஐ.எஸ்.சி.இ தேர்வாணையம் கட்டாயப் படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாணவ, மாணவிகள்
மாணவ, மாணவிகள்

Council for the Indian School Certificate Examinations என்றால் என்ன?

1952-ம் ஆண்டு அப்போதைய கல்வித்துறை அமைச்சர் மவுலானா அப்துல் கலாம் ஆசாதின் கீழ் அனைத்திந்திய சான்றிதழ் தேர்வுக்கான மாநாடு நடைபெற்றது. இதையடுத்து இந்தியாவில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக 1958-ம் ஆண்டு தனியார் அமைப்பாக CISCE தொடங்கப்பட்டது. இதன் கீழ் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 2,100 பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை முறையே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான இடைநிலைக் கல்வி இந்தியச் சான்றிதழ் தேர்வை (ICSE) நடத்திவருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐ.சி.எஸ்.இ ‌(பத்தாம் வகுப்பு தேர்வு) மற்றும் ஐ.எஸ்.சி (பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு) தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படும் என்று சி.ஐ.எஸ்.சி.இ அறிவித்திருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் இந்த நெருக்கடி நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத சி.ஐ.எஸ்.சி.இ அழுத்தம் கொடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை சி.ஐ.எஸ்.சி.இ நிர்வாகம், தேர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், மாணவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை மாதத்தில் மாணவர்கள் தேர்வு எழுதலாம். அந்த மதிப்பெண் மூலம் தேர்ச்சி அறிவிக்கப்படும். அல்லது, இதற்கு முன் எழுதிய உள்தேர்வுகளின் (Internal Assessment) மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த இரண்டில் ஒரு முடிவை ஜூலை 22-ம் தேதிக்குள் தங்கள் பள்ளி முதல்வரிடம் பெற்றோர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்? கல்வியாளர் வழிகாட்டல் #DoubtOfCommonMan

கோரோனா தொற்றாலும், தொடர் ஊரடங்காலும் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், ஐ.சி.எஸ்.இ மாணவர்கள் இந்த ஜூலை மாதமே தேர்வெழுத வேண்டும் என்று சி.ஐ.எஸ்.சி.இ கட்டாயப்படுத்துகிறது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் திபின்கர் தட்டா, ஜே.ஜே ஷண்டே இந்த மனுவை விசாரித்தனர். `ஜூலையில் தேர்வெழுத முடியாது என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு எப்படி இறுதி தேர்வு முடிவுகள் வெளியிடுவீர்கள்' என்று தேர்வாணையத்திடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் பெற்றோர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அரவிந்த் திவாரி, தேர்வுகள் நடைபெற்றால் வரும் பின்விளைவுகளை‌ சுட்டிக்காட்டினார். அதில், ’’ஏற்கெனவே எழுதப்பட்ட உள் தேர்வுகளில் மாணவர்களுக்கு மிகக்கடுமையான முறையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு குறைவான மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கும். எனவே, மாணவர்கள் உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் தேர்வெழுத கட்டாயப்படுத்தப்படுவார்கள்” என்று கூறினார்.

மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஷ்டோஷ் கும்பகோனி, "மாநில அரசு தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக உள்ளது. எத்தனை மாணவர்கள் தேர்வெழுத சம்மதிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க மாநில அரசு காத்திருக்க வேண்டும்” என்றார். தேர்வாணையம் சார்பாகப் பேசிய மூத்த வழக்கறிஞர் டேரியஸ் கம்பட்டா, "ஒருவேளை மாநில அரசாங்கம் தேர்வுகளை நடத்த அனுமதி தரவில்லையெனில் தேர்வுகள் கைவிடப்படும்” என்றார்.

தமிழகம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை மேற்கோள்காட்டி சி.ஐ.எஸ்.சி.இ நடத்தும் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்திலும் பெற்றோர்களின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜூலை மாதம் நடைபெற உள்ள தேர்வை ரத்து செய்வது குறித்தும் உள்தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்ணை வழங்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா, ஏற்கெனவே 250 சி.பி.எஸ்.இ பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சி.ஐ.எஸ்.சி.இ சுற்றறிக்கை

கடந்த புதன்கிழமை சி.ஐ.எஸ்.சி.இ யின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அராத்தூன் மாணவர்களை தேர்வு எழுத கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வந்தள்ளதாகக் குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். ’’மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்தான் முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளின் இந்தச் செயல் சி.ஐ.எஸ்.சி.இ முடிவின் நோக்கத்திற்கு எதிரானது” என்று அவர் கூறினார்.

 கொரோனா: ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ, ஜேஇஇ உள்ளிட்ட முக்கியத் தேர்வுகள்!

ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி, சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம்.

"இந்த ஆண்டு அவசர அவசரமாக மருத்துவப் பாதுகாப்புடன் மாணவர்களை தேர்வெழுத வைத்து என்ன செய்யக் காத்திருக்கின்றன பள்ளிகள். இந்த நெருக்கடியான நிலை வருடாவருடம் வருவதில்லை. என்னைப் பொறுத்தவரை மாணவர்களின் உடல்நலம்தான் முதன்மையானது. மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும். பள்ளிகள், தேர்வாணையம், அரசாங்கம் மாணவர்களின் நிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு இதற்கு முன் நடத்தப்பட்ட உள்தேர்வுகளின் மதிப்பெண்ணின் அடிப்படையில் தரம் பிரிக்கக் கூடாது. பொதுத்தேர்விற்கும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

மாணவர்களின் இறுதித் தேர்வு முடிவுகளை ஏற்கெனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டாலும் எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தும்படியான முழுவரைவு, உறுதியான திட்டம் ஒன்றை‌ அரசு கொண்டு வர வேண்டும். பள்ளிகளிடம் இந்தப் பொறுப்புகளைத் தருவது சரியான‌‌ முடிவாக இருக்காது. பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து, கட்டண உயர்வுகளைக் கண்டித்து குரலெழுப்பிய பெற்றோர்களின் பிள்ளைகளை பள்ளி நிர்வாகம் பழிவாங்க வாய்ப்புள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கமே முன்வந்து இதற்கொரு முடிவெடுக்க வேண்டும். அரசுப்பள்ளிகளின் மாணவர்களுக்கு ஏற்கெனவே தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், சி.பி.எஸ்.இ, ஐ.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ தேர்வுகள் நடைபெற்றால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த வாய்ப்புள்ளது" என்றார்.

விருதுநகரில் உள்ள ஆர்.ஜே.மந்த்ரா பள்ளியின் தாளாளர் V.R.முத்துவிடம் இதுகுறித்து கேட்டபோது, "இந்தக் காலகட்டத்தில் மாணவர்களை தேர்வு என்று கூறி தொந்தரவு செய்யக்கூடாது. மாணவர்களுக்குச் சுதந்திரம் அவசியம். இணையவெளி வகுப்புகள் நடத்தலாம். ஆனால் பழுவைத் திணிக்கக்கூடாது. இணைய வெளியில் இரண்டு மணி நேரம் படிக்கலாம். 6 மணி நேரம் 7 மணி நேரமெல்லாம் வகுப்புகள் நடத்தக் கூடாது.

 V.R.முத்து
V.R.முத்து

கொரோனா காலத்தில் தேர்வைவிட உயிரைக் காப்பாற்றுவதே முக்கியம். உயிருடன் இருந்தால்தானே படிக்க முடியும் . உயிரைக் காப்பாற்ற பத்திரமாக இருப்பதே அவசியம். மாணவர்கள் மன நிலையிலிருந்து பார்த்தால், தேர்வு இல்லையென்றால், அவர்கள் வரவேற்பார்கள். பெற்றோர்கள் தேர்வு வேண்டும் என்றே எண்ணுவார்கள். என் பிள்ளை 24 மணி நேரமும் படிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இந்தக் கொரோனா தாக்கம் உள்ள காலகட்டத்தில், தேர்வுகளை நடத்தி இக்கட்டான சூழலை ஏற்படுத்தக் கூடாது" என்றார்.

கொரோனா: `COVID-19 பெயரில் சைபர் தாக்குதல்!’- மத்திய அரசின் அலர்ட்

மாணவர்களின் விருப்பம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆர்.ஜே.மந்த்ரா பள்ளியின் முதல்வர் ரஜினி கூறுகையில்,

"பத்தாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் பிரீபோர்டு தேர்வு மதிப்பெண்ணையே எடுத்துக்கொள்ளக் கூறியிருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் கணினி மற்றும் வணிகவியல் பிரிவுகளுக்கான தேர்வுகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், உயிரியல் தேர்வு மட்டுமே மீதம் உள்ளது. உயிரியல் பிரிவை தேர்வு செய்த மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த மூன்று மாத இடைவெளியில் பள்ளிக்கு வர முடியாததால் பாடத்தை ரிவைஸ் பண்ண முடியாமல் தன்னம்பிக்கையை இழந்துள்ளனர். பிரீபோர்டு தேர்வை அவர்கள் சிறப்பாகச் செய்துள்ளதால் அந்தத் தேர்வே இருக்கட்டும் என்று பெரும்பாலான மாணவர்கள் கூறுகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களில் சிலர் தேர்வு எழுதுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு