சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“பள்ளிகளுக்கு வெளியே பாடம் இருக்கிறது!”

 சூர்யபிரகாஷ்,  அஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யபிரகாஷ், அஜய்

30 நாள்கள், 9,000 கி.மீ, மாற்றுக் கல்வி முறையைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள் அஜய் மற்றும் சூர்யபிரகாஷ்.

ழங்குடியின மக்களோடு இணைந்து சத்தியமங்கலம் காடுகளைப் பராமரிப்பதுதான் அஜய்யின் வேலை. சூர்யபிரகாஷ் ஒரு கல்லூரிப் பேராசிரியர். இவர்கள் இருவரும் சேர்ந்து 9,000 கி.மீ சாலை வழியாகப் பயணம்செய்து பொதுக்கல்வி முறையிலிருந்து விலகி இருக்கும் பள்ளிகளைப் பார்வையிட்டு வந்துள்ளார்கள்.

மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்ட்ரா

எப்படி இவர்களின் பயணம் ஆரம்பமானது..? இந்தப் பயணம் என்ன படிப்பினைகளை வழங்கியது? அவர்களே சொல்கிறார்கள்.

“பிரபலமான பள்ளிகள், பெரிய நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளைத் தவிர்த்துவிட்டு ஒரு சிறிய குழுவினரால் அந்தச் சமூகத்துக்காக நடத்தப்படும் கல்வி நிலையங்களை மட்டுமே நாங்கள் தேடிச்சென்றோம். எந்தெந்தப் பள்ளிகளைப் பார்க்கப்போகிறோம் என்பதை நான் முடிவு செய்ய, பயணத்தை அஜய் திட்டமிட்டார்” என்றார் சூர்யபிரகாஷ்.

சூரத்
சூரத்

“சாலை வழியாக மட்டுமே பயணம், அதுவும் பொதுப் போக்கு வரத்தை மட்டுமே பயன்படுத்துவோம் என முடிவுசெய்ததால் செல்வதற்கு சிரமமான பகுதிகளான காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைத் தவிர்த்துவிட்டு மற்ற இந்தியப் பகுதிகளுக்குச் சென்று மொத்தம் 24 பள்ளிகளைப் பார்த்தோம். ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு அனுபவத்தையும், ஆச்சர்யத்தையும் கொடுத்தது. லோனோவாலா நகரில் ஒரு பள்ளி ‘Inclusive Learning’ என்ற முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இங்கே சிறப்புக் குழந்தைகளும், சாதாரண குழந்தைகளும் சரிவிகிதத்தில் உள்ளார்கள். இருவரும் ஒன்றுபோலவே நடத்தப்படுகிறார்கள். இதனால் ஒரு குழந்தையின் உலகத்தை இன்னொரு குழந்தையால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

மும்பையில் நிறைய வித்தியாசமான கல்வி நிலையங்களைப் பார்த்தோம். ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க முடியும் எனும் அளவுக்கு மொழியைக் கற்றுக் கொடுக்க சுலபமான வழிமுறைகளை ஒரு பள்ளி வைத்திருக்கிறது. ஒரு தன்னார்வ நிறுவனம் பணம் கட்டி அரசுப் பள்ளிகளைக் குத்தகைக்கு எடுத்து இளைஞர்களை வைத்துப் பாடம் எடுப்பதைப் பார்த்தோம். ‘Khel’ என்ற ஒரு கல்வி நிலையம், அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று அங்கு எல்லோருக்கும் கால்பந்து சொல்லிக்கொடுத்து அவர்களைப் பள்ளிக்கு வரவைக்கிறார்கள். இதன் விளைவாக இப்போது மும்பையில் கிட்டத்தட்ட 20 பெண்கள் கால்பந்து அணி உள்ளன. இதில் பலர் இந்தியாவின் இளைஞர் கால்பந்து அணியில் முக்கியமான வீரர்களாகவும் இருக்கிறார்கள்.

மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்ட்ரா

சூரத் நகரின் ஒரு பள்ளியில் மரத்தடியில், இயற்கைச் சூழலில் பாடம் எடுக்கிறார்கள். மாணவர்களே பள்ளியைப் பராமரிக்கிறார்கள்.

அகமதாபாத்தில் சப்ஜெக்ட், சிலபஸ் என்ற ஒரு விஷயமே இல்லாமல் மொழி மற்றும் திறனை மட்டுமே வளர்க்கப் பயிற்சி கொடுக்கும் ஒரு பள்ளியைப் பார்த்தோம். உதய்பூரில் ஸ்வராஜ் பல்கலைக்கழகம் என்ற பாட நிலையத்தைப் பார்த்தோம். பல்கலைக்கழகமாக இதை எங்கேயும் பதிவுசெய்யவில்லை என்றாலும் இங்கே நிறைய மாணவர்களும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். யாராவது ஆர்க்கிடெக்ட் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டால் இங்கே வந்து ஆர்க்கிடெக்ட் ஆசிரியருடன் தங்கி வேலை செய்து தொழிலைக் கற்றுக்கொண்டு போகலாம். தங்களது பாட முறையைத் தாங்களே வடிவமைத்துக்கொள்ளும் ‘செல்ஃப் டிசைண்டு லெர்னிங்’ என்று இதைச் சொல்கிறார்கள்.

ஃபைசாபாத்
ஃபைசாபாத்

திலோனியா எனும் இடத்தில் 70-களில் தொடங்கப்பட்ட பழைய பள்ளி ஒன்றைப் பார்த்தோம். அந்த ஊருக்கு மாணவர்களே தனிநாடாளுமன்றம் நடத்தி, சாதிப்பஞ்சாயத்து, குழந்தைத் திருமணம் போன்ற விஷயங்களை நிறுத்தியுள்ளார்களாம். காலையிலிருந்து வேலைசெய்துவிட்டு, சாயங்காலம் தங்கள் பெற்றோரோடு பள்ளிக்கு வந்து குழந்தைகள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். அந்தப் பாடங்களும் அவர்களின் ஊர் சார்ந்த, தொழில் சார்ந்ததாகவே இருக்கன்றன.

லக்னோவில் குழந்தைகளே தங்களுக்கான நேரத்தையும், வகுப்பையும், உரிமைகளையும் முடிவுசெய்துகொள்ளும் ஜனநாயகப் பள்ளி என்ற இடத்தைப் பார்த்தோம். ஃபைசாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளி முழுவதும் ஓவியங்களை வைத்து பாடம் சொல்லித்தருகிறார்கள். மேற்கு வங்கத்தில் ஒரு ஸ்கூலில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாடம் எடுக்கிறார்கள். டாக்டர், இன்ஜினீயர், ஐஏஎஸ், ஓவியர் என ஒரே வகுப்பில் யாருக்கு என்ன தேவையோ அதற்கேற்ப பாடத்திட்டமும், பயிற்சி முறையும் மாறுபடுகின்றன. நாங்கள் சென்ற 24 பள்ளிகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, இவர்கள் நாம் படித்த பாடத்திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது மட்டும்தான்” மூச்சிரைக்கப் பேசி முடித்தார் அஜய்.

 சூர்யபிரகாஷ்,  அஜய்
சூர்யபிரகாஷ், அஜய்

“இப்படி மற்றவர்களைவிட வித்தியாசமான முறையில் படிக்கும் குழந்தைகள், பள்ளியை முடித்தபிறகு நம் பொதுச் சமூகத்தோடு கலக்கிறார்களா?” என்று கேட்டேன். “இதற்கான பதில் எங்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே கிடைத்தது” என்கிறார் சூர்யபிரகாஷ். “பெரும்பாலான பள்ளிகள் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே மாற்றுக்கல்வி முறையில் சொல்லிக்கொடுக்கிறார்கள். எட்டாம் வகுப்புக்கு மேல் மாணவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுச் சமூகத்துக்குக் கொண்டுவந்து விடுகிறார்கள். இதனால், இவர்களுக்கு நம் பாடமுறையால் ஏற்படும் அழுத்தம் என்பது இல்லை. படிப்பின் மேல் இவர்களுக்கு பயம் இல்லை. நம் சாதாரணப் பாட முறைக்கு மற்றவர்களைவிட இவர்கள் சுலபமாக மாறிவிடுகிறார்கள்” என்றார்.

“இந்த மாற்றுக்கல்வி என்பது ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ப மாறுபடுகிறது. இதை முறைப்படுத்தி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பின்பற்றும்படி செய்யமுடியாது. நாம் இப்போது குழந்தைகளை ஒரு சிஸ்டத்துக்குள் அடக்கி அவர்களின் திறனைக் கட்டுப்படுத்துகிறோம். அதைச் செய்யாமல் ஆசிரியர்கள் இயற்கையாகக் குழந்தைகளின் திறனை மேம்படுத்த வேண்டும். அதற்காக இந்த மாற்றுக் கல்வி நிலையங்களைப் பார்வையிடுவது மிகவும் அவசியம் என்று நினைக்கிறோம்” என்கிறார்கள் இருவரும்.

ஹெயின்ரிச் ஹரரின் வரிதான் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. `தரைத்தளத்திலிருந்து தொடங்காமல் யாரும் ஐந்தாவது தளத்தை அடைய முடியாது.’