Published:Updated:

ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பம்... பல்கலைக்கழகத்துக்கு ஒரு வேண்டுகோள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சட்டக்கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுக்கால அளவிலான இளநிலை சட்டப்படிப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி? ஒரு வழிகாட்டல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சட்டக்கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுக்கால அளவிலான இளநிலை சட்டப்படிப்புகளில் 2021 - 2022ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சிறப்புச் சட்டப் பள்ளி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கற்றலைப் பரப்புதல், சட்ட அறிவை வழங்குதல் மற்றும் சமூகத்திற்குச் சிறப்பான சேவை செய்யக்கூடிய வழக்கறிஞர்களை இந்திய அரசின் தேசிய சட்டக்கல்லூரிகளுக்கு இணையான தரத்துடன் உருவாக்கும் நோக்கத்துடன் 2002ஆம் ஆண்டில் சிறப்புச் சட்டப்பள்ளி ஒன்றை நிறுவியது. இச்சிறப்புச் சட்டப்பள்ளியில், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு இளநிலை சட்டப்படிப்புகளில் 1) B.A.LL.B(Hons.), 2) B.B.A.LL.B. (Hons.), 3) B.Com.LL.B. (Hons.), 4) B.C.A.LL.B. (Hons.) எனும் நான்கு வகையான படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 156 இடங்கள் வீதம் நான்கு பிரிவுகளில் மொத்தம் 624 இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

இணைப்புச் சட்டக் கல்லூரிகள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டிருக்கும் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுக்கால அளவிலான B.A.LL.B இளங்கலை சட்டப் பட்டப்படிப்புக்கான இடங்களாக மொத்தம் 1651 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் அரசுச் சட்டக்கல்லூரிகளில் சென்னை (புதுப்பாக்கம்) - 241, மதுரை - 171, திருச்சிராப்பள்ளி - 160, கோயம்புத்தூர் - 160, திருநெல்வேலி - 160, செங்கல்பட்டு – 160, வேலூர் - 80, விழுப்புரம் - 80, தருமபுரி - 80, இராமநாதபுரம் - 80, சேலம் - 80, நாமக்கல் - 80, தேனி – 80 என்று மொத்தம் 1612 இடங்கள் இருக்கின்றன. திண்டிவனத்திலுள்ள தனியார் கல்லூரியான சரஸ்வதி சட்டக் கல்லூரியில் மொத்தமுள்ள 39 இடங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35% இடங்கள் நிருவாக ஒதுக்கீட்டு இடங்களாகவும் இருக்கின்றன. சட்டக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 4% இடங்கள் 10+2 வகுப்பில் தொழிற்கல்வி (Vocational Courses) பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளியில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு 10+2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடைய படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் மொத்தமாகச் சேர்த்து 70%, எஸ்சி / எஸ்டி பிரிவினர் – 60% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 கல்வியில் வணிகப்பாடமெடுத்துப் படித்தவர்கள் B.Com.LL.B. (Hons.), படிப்பிற்கும், கணினி அறிவியல் பாடமெடுத்துப் படித்தவர்கள் B.C.A.LL.B. (Hons.) படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. 10+2 படிப்பினை நேரடியாகப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் B.A.LL.B இளங்கலை சட்டப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 10+2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடைய படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் மொத்தமாகச் சேர்த்து 45%, எஸ்சி / எஸ்டி பிரிவினர் – 40% மதிப்பெண்களுக்குக் குறைவில்லாமல் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. 10+2 படிப்பினை நேரடியாகப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

சட்டப்பட்டப்படிப்பு
சட்டப்பட்டப்படிப்பு

இட ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி ஓசி – 31%, பிசி – 26.5%, பிசி (முஸ்லிம்) – 3.5%, எம்பிசி (வன்னியர்) – 10.5%, எம்பிசி மற்றும் டிஎன்சி – 7%, எம்பிசி – 2.5%, எஸ்சி – 15%, எஸ்சி (அருந்ததியர்) – 3%, எஸ்டி – 1% எனும் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு தவிர்த்த, பிற மாநில மாணவர்கள் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவர்.

சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள்

முன்னாள் படைவீரர்கள் குழந்தைகள் 1% இடங்கள், விடுதலைப்போராட்ட வீரர்களின் குழந்தைகள் 1% இடங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர், ஐந்து வகையான மாற்றுத் திறனாளிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிற்கும் 1% இடங்கள் வீதம் 5% இடங்களும், விளையாட்டுப் பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு 1% இடங்கள் எனும் அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கும்.

மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கல்லூரி பட்டப்படிப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விண்ணப்பப் பதிவு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் https://tndalu.ac.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளிக்குத் தனியாக, படிக்க விரும்பும் பாடப்பிரிவிற்கேற்ற பிரிவைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். B.A.LL.B (Hons.) மற்றும் B.B.A.LL.B (Hons.) படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஒரே விண்ணப்பப்படிவத்தைப் பயன்படுத்தலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரிகளுக்குத் தனியாக, ஒரே விண்ணப்பமாக விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புச் சட்டப்பள்ளி மாணவர் சேர்க்கைக்குப் பொதுப்பிரிவினர் ரூ.1000/- எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினர் ரூ.500/- என்றும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரிகளிலான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவினர் ரூ.500/- எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி பிரிவினர் ரூ.250/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்திட வேண்டும்.

விண்ணப்பம் பதிவு செய்யக் கடைசி நாள்: 26-8-2021.
சட்டப்பட்டப்படிப்பு
சட்டப்பட்டப்படிப்பு

தரவரிசைப்பட்டியல்

இணையதளம் வழியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்களது தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, இப்பல்கலைக்கழகத்தின் https://tndalu.ac.in/ எனும் முகவரியிலான இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய 10+2 தகுதித் தேர்வில் மொழிப்பாடங்கள் நீங்கலாக பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் கணக்கிட்டுத் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் 10+2 தேர்வில் முதன் முறையாக (First Attempt) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேம்பாட்டுத் தேர்வில் (Improvement Examinations) பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விண்ணப்பதாரர்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நிலையில், விண்ணப்பதாரர்களின் பிறந்தநாளைக் கொண்டு, மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதுவும் சமமாக இருக்கும் நிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு

தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அமர்வுகள் அனைத்தும் இணையம் வழியாகவே நடத்தப்படும். கலந்தாய்வுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் அலைபேசிக் குறுஞ்செய்தி வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இக்கலந்தாய்வின் வழியாக, விண்ணப்பதாரர்கள் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையிலும், இனவாரியான இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு இடஒதுக்கீடுகளின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர். அரசுச் சட்டக்கல்லூரிகளில் சேர்க்கைக்கான ஆணையைத் தரவிறக்கம் செய்யும்பொழுதே, பல்கலைக்கழகத்திற்கு ரூ.1620/- ஐச் செலுத்த வேண்டும். சேர்க்கை ஆணை கிடைக்கப்பெற்ற கல்லூரியில் மாணவர்களின் அனைத்துச் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, கல்விக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்களைச் செலுத்திய பின்பு மாணவர் சேர்க்கை உறுதிப்படுத்தப்படும். அதன் பிறகு செப்டம்பர் இரண்டாம் வாரத்திலோ, அதன் பின்போ வகுப்புகள் தொடங்கும்.

சட்டப்பட்டப்படிப்பு விண்ணப்பம்
சட்டப்பட்டப்படிப்பு விண்ணப்பம்

கூடுதல் தகவல்கள்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பள்ளி மற்றும் இணைப்பு செய்யப்பெற்ற கல்லூரிகளில், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப்படிப்புச் சேர்க்கை குறித்து மேலும் கூடுதல் தகவல்களை அறிய, https://tndalu.ac.in/ எனும் இணைய முகவரியில், இடம்பெற்றிருக்கும் மாணவர்களுக்கான தகவல்கள் மற்றும் வழிமுறைகள் குறிப்பேட்டை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் அல்லது ’தலைவர், சட்டப்படிப்புச் சேர்க்கை 2021-2022, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பூம்பொழில், 5, டாக்டர் டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை - 600028’ எனும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம். கோவிட் நோய்த்தொற்று காரணமாக, நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அலுவலக வேலை நாள்களில் 044 - 24641919 அல்லது 044 -24957414 எனும் உதவி எண்களில் தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

****************************

இளம் மாணவ விஞ்ஞானி: அறிவியல் படிப்புகளுக்கு உதவித்தொகை - தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கான வழிகாட்டல்!

பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு...

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு இளநிலை சட்டப் பட்டப்படிப்புகளுக்கான 2021 - 2022ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக வெளியிடப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் வழிமுறைகள் குறிப்பேட்டில் விண்ணப்பக் கட்டணம் குறித்த தகவல்கள் எதுவுமில்லை. 044 - 24641919 அல்லது 044 -24957414 எனும் உதவி எண்களில் கேட்டாலும், இணைய வழியில் விண்ணப்பத்தை நிறைவுசெய்த பின்பு, இணைய வழியிலான பணம் செலுத்தும் வழிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள் என்கிற பதில் மட்டுமே கிடைக்கிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

மேலும், இணைய வழியில் விண்ணப்பிக்கும்போது, முதல் நிலையான விண்ணப்பதாரர்களுக்கான பதிவு சரியாகச் செயல்படுகிறது. அடுத்ததாக, விண்ணப்பிப்பதற்காகப் புகுபதிகை (Login) செய்யும்பொழுது மின்னஞ்சல் உள்ளீடு (Enter Email), கடவுச்சொல் உள்ளீடு (Enter Password), படிப்புத் தேர்வு (Select Registered to Course), உள்ளீட்டுக் குறியீடு (Please enter Captcha Value) போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. புகுபதிகை செய்யும் பொழுது பலமுறை உள்ளீட்டுக் குறியீடு மாறி மாறி வந்து கொண்டிருப்பதாகவும், புகுபதிகை செய்ய முடியவில்லை என்கிற தொழில்நுட்பக் குறைபாடும் இருந்துவருகிறது.

இதனைச் சரி செய்திடத் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முன்வரவேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு