Published:Updated:

`சுளையாக பணம் வாங்குகிறார்கள்; ஆனால், பயிற்சி இல்லை' - தனியார் கல்லூரி குறித்து குமுறும் கேரள மாணவிகள்!

சிந்து ஆர்

லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கேரளத்தில் இருந்து படிக்க வந்தோம். சரியான பயிற்சி இல்லாததால் இரண்டு வருடங்களை இழந்து நிற்கிறோம் என நூருல் இஸ்லாம் கல்லூரி மாணவிகள் குமுறல் வலைதளங்களில் எதிரொலிக்கிறது.

நூருல் இஸ்லாம் கல்லூரி மாணவிகள்
நூருல் இஸ்லாம் கல்லூரி மாணவிகள்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரகோவிலில் இயங்கிவருகிறது நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம். இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகமாகப் படித்து வருகின்றனர். கேரளத்தில் பந்த் போன்ற காரணங்களால் படிப்பு முடங்கும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளை கேரள மாணவர்கள் அதிகமாக விரும்புகின்றனர். இந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட கேரள மாணவிகள் நேற்று ஒரு வீடியோவை வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தனர். `ஒரு கூட்டம் மாணவிகளின் சோதனைகளும் வேதனைகளையும் நாங்கள் இங்கு கூறுகிறோம்' எனத் தொடங்குகிறது அந்த வீடியோ.

மாணவிகள்
மாணவிகள்

அதில், "பி.எஸ்ஸி சயின்ஸ் பிரிவில் அலைன்ஸ் பாடத்திட்டமாக பாரா மெடிக்கல் இருப்பதாகக் கூறி இந்தக் கல்லூரியில் சேர்த்தார்கள். டெக்னிக்கல் பாடத்திட்டமான இதில் இதுவரை நாங்கள் நோயாளிகளைத் தொட்டுக்கூட பார்த்ததில்லை. ஆறு லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கினார்கள். அதற்கு எந்த ரசீதும் தரவில்லை. 2017-2018-ம் கல்வியாண்டு மாணவிகள் நாங்கள். மெடிக்கல் காலேஜ், மருத்துவமனை எதுவும் இல்லாமல் பாரா மெடிக்கல் கோர்ஸ் தொடங்கியுள்ளார்கள்.

சைன்ஸ் பாடத்திட்டத்தில் அலைன்ஸ் ஹெல்த் சைன்ஸ் என விளம்பரம் கொடுத்ததால்தான் நாங்கள் இங்கு படிக்க வந்தோம். எந்தப் பயிற்சியும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வீணாகப் போய்விட்டன. இங்குள்ளவர்கள் யாரும் அம்பானிகளின் பிள்ளைகள் அல்ல. லோன் எடுத்து, கட்டணம் செலுத்தி படிக்க வந்திருக்கிறோம். ஆய்வுக்கூடத்துக்கான பீஸ் வாங்குகிறார்கள். ஆனால், இங்கு ஆய்வுக்கூடம் இல்லை. அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்து எங்களைக் காப்பாற்றுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

வீடியோ வெளியிட்ட மாணவிகள்
வீடியோ வெளியிட்ட மாணவிகள்

இந்த வீடியோ வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மேலாளர் ஜனார்த்தனனிடம் பேசினோம், "பி.எஸ்ஸியில் மூன்று பாடத்திட்டங்களுக்கு அனுமதிபெற்று நடத்தி வருகிறோம். நெய்யாற்றின்கரையில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு வாரம் ஒருமுறை மாணவர்களை பயிற்சிக்காக அனுப்பி வருகிறோம். இந்த வீடியோ வெளியானதும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை நெய்யாற்றின்கரை நிம்ஸ் மருத்துவமனையில் வைத்து இன்று சந்தித்துப் பேசியிருக்கிறோம். இது பெரிய பிரச்னை அல்ல" என்றார்.