Published:Updated:

இந்த க்வாரன்டீனில் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கு 7 தளங்கள்!

Representational Image
Representational Image

இணையம் மூலம் கற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் நம் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளலாம்.

இந்த ஊரடங்கு நேரத்திலும் பல துறை விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு இணையம் மிகவும் உதவியாக உள்ளது. இணையவழிக் கல்வி மூலம் நாம் விரும்பிய பாடத்தை வீட்டிலிருந்தபடியே ஓய்வு நேரத்தில் படிக்க முடியும். இந்த நேரத்தை உபயோகமாகச் செலவழிக்க உதவும் வகையில் பல தளங்கள் இலவசமாகக் கல்விச் சேவையை வழங்குகின்றன. அவற்றில் சிறப்பாகக் கற்க உதவும் இலவச தளங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

Coursera:

Coursera Website
Coursera Website

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிலிருந்து இந்தத் தளம் வாயிலாக இலவசமாகக் கல்வி கற்கலாம். 45 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் இந்தத் தளத்தில் 3,900-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பாடங்களைப் படிக்கலாம். 20-க்கும் மேற்பட்ட பட்டயப் படிப்புகளும் உள்ளன. பல்வேறு துறை சார்ந்த பல படிப்புகளும் ஒரே தளத்தில் கிடைப்பதால் இத்தளம் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேலையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதற்குத் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும் இந்தத் தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இணையதள முகவரி: https://www.coursera.org/

10,000 பேருக்கு 2.1 மருத்துவர்கள், ஆப்பிரிக்காவில் கொரோனாவின் நிலை என்ன? #DoubtofCommonMan

Udemy:

Udemy Website
Udemy Website

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படும் இத்தளத்தில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். 42,000 வழிகாட்டுனர்கள் மூலம் 50 மொழிகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. மற்ற தளங்களில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலமே படிப்புகள் வழங்கப்படும். ஆனால், இங்கு அப்படி அல்ல. வழிகாட்டுனரே ஒரு படிப்பை தொடங்கி அதை மற்றவருக்குக் கற்பிக்கலாம். இங்கு பல முன்னணி பேராசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மற்ற தளங்களைப்போல் இல்லாமல், இதில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களுக்குக் கணிசமான அளவிலான பணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், இதையும் ஒரு முறை எப்படி இருக்கிறது என முயற்சி செய்து பார்க்கலாம்.

இணையதள முகவரி: udemy.com

edX:

edX Website
edX Website

ஹார்வர்ட் மட்டும் எம்.ஐ.டி-யுடன் இணைந்து தொடங்கப்பட்டது edex தளம். உலகம் முழுவதிலும் இருந்து 140-க்கும் மேற்பட்ட தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளில் ஆன்லைனில் கற்பிக்கின்றனர். 20 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் மாணவர்கள் இந்தத் தளத்தின் மூலம் பாடங்களைக் கற்கின்றனர். கணினி அறிவியல், மொழிகள், டேட்டா சயின்ஸ் மற்றும் பொறியியல் என முதன்மையான பாடப் பிரிவுகளில் பாடங்களை வழங்குகிறார்கள்.

இணையதள முகவரி: https://www.edx.org/

Khan Academy:

Khan Academy Website
Khan Academy Website

பல்வேறு உலக மொழிகளில், பல்வேறு பாடங்களை அளித்து வருகிறது கான் அகாடமி. இந்தத் தளத்தில் மழலையர் கல்வி முதல் கல்லூரி பாடம்வரை அனைத்துத் தரப்பினருக்கான பாடங்களும் எடுக்கப்படுகின்றன. கணிதம், இலக்கணம், அறிவியல், வரலாறு முதல் SAT தேர்வுகள் வரை இங்கே அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இந்தத் தளத்தில் நாம் கற்பது மட்டுமன்றி கற்பிக்கவும் முடியும். கற்பிக்க விருப்பமுள்ளவர்கள் தளத்திலேயே ஆசிரியர்களுக்கு என இருக்கும் பக்கத்தில் அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், எந்தப் பாடங்களைப் படிக்க வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதள முகவரி: https://www.khanacademy.org/

Codecademy:

Codecademy Website
Codecademy Website

coding கற்பதற்கான பிரத்யேக தளம் இது. இந்தத் தளத்தில் பாடம் எடுக்கப்படும் அதே நேரத்தில் நீங்கள் பயிற்சியும் மேற்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம். எளிதில் புரியும் வண்ணம் இத்தளத்தில் பாடங்கள் எடுக்கப்படுவதால், புதிதாக கோடிங் கற்றுக்கொள்ள விரும்புபவர்களும் எளிதில் கற்கலாம். மேலும் கற்பவர்களின் முன்னேற்றத்தை அறியும் வகையிலான வசதிகளும் இத்தளத்தில் உள்ளது. இதில், கோடிங்கில் பல பிரிவுகளை 11 மணி நேரத்திற்கும் குறைவாக நேரத்தில் முடித்துவிடலாம். Html தொடங்கி Ruby வரை அனைத்து விதமான கோடிங் பாடங்களையும் இந்தத் தளத்தில் மூலம் கற்கலாம்.

இணையதள முகவரி: https://www.codecademy.com/

Stanford online:

Stanford Online Website
Stanford Online Website

ஸ்டான்போர்டு இளநிலை கல்லூரி, சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி எனப் பல்வேறு துறைகளில் சான்றிதழ் கல்வி மட்டுமன்றி பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் தளத்திலும் இலவசமாகப் பலவிதமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். இந்தத் தளம் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பிரத்யேகமான தளம். இந்தத் தளத்தில் இலவசப் பாடங்கள் எனத் தனிப் பிரிவு உள்ளது. இலவசமாகப் பாடம் கற்க விரும்புபவர்கள் அந்தப் பக்கத்தைப் பயன்படுத்தி பயன் அடையலாம்.

இணையதள முகவரி: https://online.stanford.edu/

Ted Ed:

Ted Ed Website
Ted Ed Website

2,50,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களால் செயல்படுத்தப்படும் இந்தத் தளத்தால் உலக அளவில் பல்வேறு ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைகின்றனர். கற்றலை இனிமையாக்கும் வண்ணம் அனிமேட்டட் காணொளிகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அறிவுபூர்வமான பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் இத்தளம் சிறப்பாகச் செயல்படுகின்றது.

இணையதள முகவரி: https://ed.ted.com/

இணையம் மூலம் கற்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் துறை சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நம் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளலாம். இவற்றில் பலவும் நமக்கு இலவசமாகக் கிடைக்கின்றது என்பது இன்னும் சிறப்பு.

அடுத்த கட்டுரைக்கு