Published:Updated:

அட்மிஷனில் அசத்தும் அரசுப் பள்ளி... மாணவர்களுக்கு வைப்பு நிதி, பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை!

ஆலடிக்குமுளை அரசுப்பள்ளி மாணவர்கள்
ஆலடிக்குமுளை அரசுப்பள்ளி மாணவர்கள்

தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் நிலவுகிறது. ஆனால் யதார்த்தம் இதுவல்ல. விஞ்ஞானிகளாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் வெற்றிநடை போடுபவர்கள் அரசுப்பள்ளிகளில் பயின்றவர்கள்தாம்.

இன்றைய தலைமுறைப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும்கூட இன்றைக்கு இதுதான் நிலை. இதனால் தமிழ்நாட்டில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் ஏராளம். இந்நிலையில்தான் சில அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, உயரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளையில் இயங்கிவரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு, அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. பெற்றோர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், முன்னாள் மாணவர்கள் சிலரும் ஒன்றாக இணைந்து, இதனை வழங்கிவருகிறார்கள்.

ஆலடிக்குமுளை அரசுப்பள்ளி மாணவர்கள்
ஆலடிக்குமுளை அரசுப்பள்ளி மாணவர்கள்

தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் நிலவுகிறது. ஆனால் யதார்த்தம் இதுவல்ல. பெரிய விஞ்ஞானிகளாக, அரசியல் தலைவர்களாக, மருத்துவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வெற்றிநடைபோடுபவர்களில் பெரும்பாலானோர், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள்தாம். அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால், அது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அரசுப் பள்ளிகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை கிராமத்தில் 1900 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இயங்கிவரும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்குமான அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்துள்ளார்கள். பின்னர், இந்த ஊரில் இரண்டு தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டதால், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து, தற்போது, 50-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆலடிக்குமுளை ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து வருகிறார்கள்.

மேலும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலரும் சேர்ந்து, தங்களது சொந்தப் பணத்தில், சில சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். புதிதாகச் சேரும் மாணவர்களின் பெயரில் அஞ்சலகத்தில் 1,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுவதோடு, பெற்றோர்களை ஊக்கப்படுத்த, குலுக்கல் முறையில் 10,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு அட்மிஷன் தொடங்கிய சில நாள்களிலேயே புதிதாக 14 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் தொடங்கிய வைப்புக் கணக்குப் புத்தகத்தை இப்பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன், முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கினார்.

ஆலடிக்குமுளை அரசுப்பள்ளி
ஆலடிக்குமுளை அரசுப்பள்ளி

"எங்க பள்ளிக்கூடத்துல புதுசா சேர்ந்த மாணவர்களுக்கு அஞ்சலகத்துல, ஒவ்வொருத்தர் பேர்லயும், ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி, வைப்புக் கணக்கு தொடங்கியிருக்கோம். இதுமட்டுமல்லாமல், இவங்க பெற்றோர்களில் 3 பேரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ரூ.10,000, ரூ.5,000, ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கவுள்ளோம், நீண்ட தூரத்துல இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசு, 450-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் மேல் படிப்பில் சேருவதற்கான கல்விச் செலவும் வழங்கப்படும்’’ என்கிறார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன். இப்பள்ளியின் இந்தச் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும்பாராட்டு குவிந்துவருகிறது. அரசுப்பள்ளியை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வதென்பது ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு ஆணிவேராகும்.

அடுத்த கட்டுரைக்கு