Published:Updated:

`கல்லாவில் ஆள் கிடையாது!' கடை நடத்தி அசத்தும் கடலாடி அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool

கடலாடி அரசுப் பள்ளியிலுள்ள நேர்மை அங்காடி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பள்ளிக்கூடம் என்பது புத்தகங்களில் உள்ள பாடங்களைக் கற்றுத்தரும் இடம் மட்டுமல்ல. நாம் வாழும் சமூகத்தில் எவ்வாறு மற்றவர்களோடு பழக வேண்டும், நம் பழக்கங்களில் எத்தகைய மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுக்கும் இடமும்கூட. மற்றவர் நம்மைக் கவனிக்கிறாரோ இல்லையோ நாம் எப்போதும் நேர்மையாக நடந்துகொள்வது அவசியம் என்பதைச் சிறு வயது முதலே பழக்குவது மிகவும் அவசியம். முன்பெல்லாம் நீதிநெறிகளைக் கதைகளின் வழியே மாணவர்கள் அறிந்துகொள்ளும் தனி வகுப்புகள் இருந்தன. ஆனால், அவை காலப்போக்கில் நீக்கப்பட்டுவிட்டன. சில ஆசிரியர்கள் அவர்களது சுயவிருப்பத்தின் பெயரில் கதைகள் சொல்வதும், கதை புத்தகங்கள் வாங்கி வந்து, மாணவர்களுக்குத் தரவும் செய்கிறார்கள்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இங்கே ஓர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு நேர்மை எனும் பழக்கத்தை என்று விட்டுவிடாதிருக்கப் பழக்கப் படுத்தும் முயற்சி ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனெனில், குழந்தைகள் ஒருபோதும் மனதறிந்து திருடவோ, நேர்மையின்றி நடக்கவோ செய்ய மாட்டார்கள். இந்தக் குணங்களில் மாற்றம் வராதிருக்கப் பழக்குவதே முதன்மையானது என்பதறிந்துள்ளது இப்பள்ளி.

ராமநாதபுரம் மாவட்டம், கடாலாடியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நரசிங்கக்கூட்டம். இந்த ஊரிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவனுடன் பேசினேன்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

"எங்கள் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அதாவது மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே 7 தான். இதனால், ஊரிலுள்ளவர்களுடன் தொடர்ந்து பேசுவது, அரசுப் பள்ளியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வைக்கும் முயற்சிகளைக் கையாண்டது என எங்களின் விடா முயற்சியின் பலனாக, தற்போது 22 மாணவர்கள் படித்துவருகின்றனர். அடுத்த ஆண்டில் இன்னும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கவனத்துடன் பார்த்துக்கொள்வதுடன், விளையாட்டுடன் பாடங்களைக் கற்றுத்தருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவர்களின் உடல்நலன் மிகவும் முக்கியம். ஏனென்றால், உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிப்பிலும் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள் மாணவர்கள். அதனால், மாதம் ஒரு பழம் எனும் திட்டம் மூலம், மாதத்தின் ஒரு நாள் மதியம், ஏதேனும் ஒரு பழத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்வோம். அப்பழங்களை நிறைய வாங்கிக்கொள்வோம். மாணவர்கள் போதும் போதும் என்று சொல்லுமளவுக்குக் கொடுப்போம். கூடவே நாங்களும் சாப்பிடுவோம். மேலும், அந்தப் பழம் என்ன வகையானது, அதில் என்ன சத்துகள் இருக்கின்றன போன்றவற்றையும் விரிவாகக் கூறுவோம்.

நேர்மையாக நடந்துகொள்ளும் பழக்கத்தை சின்ன வயதுமுதலே பழக்கப்படுத்துவதே சரியானதாக இருக்கும் அல்லவா?
கிறிஸ்து ஞான வள்ளுவன் (ஆசிரியர்)

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை அடிக்கடி நடத்தி, பள்ளியின் வளர்ச்சியில் என்ன விதமாக மாற்றம் கொண்டுவரலாம் என விவாதிப்போம். அதன் அடிப்படையிலேயே பள்ளிக் கட்டடங்களுக்கு புதிய வண்ணம் அடித்ததும், மாணவர்கள் விரும்பும் விதத்தில் பல்வேறு ஓவியங்களை வரைந்ததும்" என்று பள்ளியின் சிறப்புகளை விவரித்துக்கொண்டிருந்தவரிடம், பள்ளியில் கடை நடத்துவது பற்றிக் கேட்டேன்.

"நேர்மையாக நடந்துகொள்ளும் பழக்கத்தை சின்ன வயதுமுதலே பழக்கப்படுத்துவதே சரியானதாக இருக்கும் அல்லவா? அதற்காக, முதலில் கடலை மிட்டாய், எள் மிட்டாய் ஆகியவற்றை வாங்கிவந்தேன். இரண்டில் விலை ரூபாய் 105. இதை இரண்டு பாட்டில்களில் போட்டு, நேர்மை அங்காடியை உருவாக்கினேன். அதாவது இரண்டு பாட்டில்களின் நடுவே காசு போடுவதற்காக ஒரு பாட்டிலும் இருக்கும். கடலை மிட்டாய் 2 ரூபாய், எள் மிட்டாய் 1 ரூபாய். அதை விற்பதற்குத் தனியாக ஆள் யாரும் கிடையாது. எந்த மாணவருக்கு மிட்டாய் தேவையோ அவர் சென்று காசுப் பாட்டிலில் காசைப் போட்டுவிட்டு, அதற்கு உரிய மிட்டாயை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குத் பெரிய மாணவர்கள் உதவலாம். இதுதான் விதி. இதைப் பள்ளியின் பிரேயரில் நேர்மை அங்காடியின் விதிகளை மாணவர்களிடம் சொன்னேன். எல்லோரும் மகிழ்ச்சியோடு கைதட்டி வரவேற்றனர்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

அடுத்த நாள் நேர்மை அங்காடியில் விற்பனை தொடங்கியது. மாணவர்கள் பள்ளித் தொடங்குவதற்கு முன்பும், மதிய இடைவேளியிலும் தாமவே காசைப் போட்டு மிட்டாயை எடுத்துச் சென்றார்கள். இரண்டு நாள்களில் மிட்டாய்கள் அனைத்தும் தீர்ந்ததும், காசை எண்ணிப்பார்க்கையில் மிகச் சரியான ரூபாய் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், இந்த நேர்மை அங்காடியில் இன்னும் நிறைய பொருள்களை வாங்கி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளோம்.

இந்த அங்காடியில் மாணவர்களின் உடலுக்குத் தீங்கு இழைக்கும் உணவுப் பொருள்களை ஒருபோதும் விற்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். முழுவதும் நம் பாரம்பர்ய உணவுப் பொருள்கள் மட்டுமே விற்கவிருக்கிறோம்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இதன்மூலம் மாணவர்களுக்கு ஜங் ஃபுட் சாப்பிடும் முறையிலும் மாற்றம் வரும் என உறுதியாக நம்புகிறோம்" என உறுதியாகச் சொல்கிறார் தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன். நல்ல முயற்சிகள் தொய்வின்றி நடக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு