Published:Updated:

`கடந்தாண்டைவிட 3,600 இடங்கள் அதிகம்!' - பொறியியல் படிப்புக்கு மீண்டும் மவுசு?

சத்யா கோபாலன்

நீட் தேர்வு எழுதி அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பலர் இந்த ஆண்டு பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான 4 கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்று முடிந்து அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இன்று முதல் சிறப்புத் துணை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொறியியல் கலந்தாய்வு
பொறியியல் கலந்தாய்வு

வழக்கமாகச் சிறப்புக் கலந்தாய்வில் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களே கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த வருடம் அளவுக்கு அதிகமான மாணவர்கள் இன்றைய கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். நீட் தேர்வு எழுதி மருத்துவ இடம் கிடைக்காமல் போன மாணவர்கள் பொறியியல் துறையைத் தேர்ந்தெடுத்ததால் இந்த வருடம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வு பற்றி கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமாரிடம் பேசினோம், “ தமிழகத்தில் நடந்த நான்கு கட்ட ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்தமாக 1,67,001 இடங்கள் இருந்தன. அதில் 76,364 இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரம்பியுள்ளன. 90,737 இடங்கள் காலியாகவுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,600 இடங்கள் அதிகமாக நிரம்பியுள்ளன. பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற சூழலில் இவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளது என்ற செய்தி சிறிய நேர்மறையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

கலந்தாய்வு முடிவுகள்
கலந்தாய்வு முடிவுகள்

கடந்த ஆண்டு புள்ளி விவரத்தைப் பார்த்தால் 1,70,538 காலி இடங்களில் 72,648 இடங்கள் நிரம்பி, 97,890 இடங்கள் காலியாக இருந்தன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பொறியியல் காலி இடங்கள் குறைந்து 5% சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தக் கலந்தாய்வில் மொத்தமாக 479 கல்லூரிகள் பங்கேற்றன. அவற்றில் 13 கல்லூரிகள் மட்டுமே 100% மாணவர்கள் சேர்க்கையைப் பெற்றுள்ளன. 30 கல்லூரிகள் 90% சேர்க்கையும், 157 கல்லூரிகள் 50% சேர்க்கையும் பெற்றுள்ளன. 28 கல்லூரிகளில் ஒற்றை இலக்க மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 16 கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை.

இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத்தான் அதிகமான மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்தமுள்ள 27,000 இடங்களில் 17,000 இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோல், மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினீயரிங் போன்ற படிப்புகள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற அழுத்தமான கருத்து இளைஞர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதன் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம், கால்நடை மருத்துவம், பாரா மெடிக்கல் போன்ற படிப்புகள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. மேலும் தரமில்லாத பொறியாளர்களை தனியார் கல்லூரிகள் வீட்டுக்கு அனுப்பியதும் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

கலந்தாய்வு முடிவுகள்
கலந்தாய்வு முடிவுகள்

பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டங்கள் 16 வருடங்களுக்கு முன்பு கொண்டு வந்தவை. ஆனால் தொழில்நுட்பமோ தினம் தினம் வளர்ந்து வருகிறது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பாடத்திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வந்தது அவ்வளவுதான். நான்கு வருடம் படித்து முடித்துவிட்டு வெளியில் வரும் மாணவர்கள் என்ன மாதிரியான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை பல்கலைக்கழகம் ஆராய்ந்து, ஒவ்வோர் ஆண்டும் பாடங்களில் சிறிய சிறிய மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். அப்படி இல்லையெனில் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதிய மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்.

Vikatan

ஒரு நிறுவனம் ஒரு தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்து அது வேலை செய்து முடித்து வெளியில் சென்ற பிறகுதான் பாடப்புத்தகத்துக்கு அதைக் கொண்டு வருகிறோம். தரமான பொறியாளர்களின் தேவை இந்தியாவில் உள்ளது. அதனால் தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் படியான ஒரு பாடபுத்தகத்தை கொண்டு வரவேண்டும். சிறிய தொழில்நுட்பம் முதல் ரஃபேல் போன்ற பெரிய தொழில்நுட்பம் வரை அனைத்துக்கும் நாம் வெளிநாடுகளை நம்பி உள்ளோம். மக்கள் தினமும் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தேவையான தொழில்நுட்பம் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கவேண்டும். அதற்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. தரமில்லாத பொறியாளர்களை உருவாக்கியதே வேலை இல்லாமல் போனதற்கான காரணம்.

`ஆனந்தம்' செல்வகுமார்
`ஆனந்தம்' செல்வகுமார்

மாணவர்களுக்கு நான் ஒரு விசயம் மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். கல்லூரிகளை குறை சொல்லாமல் இணையத்தைப் பயன்படுத்தி வருங்காலத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். கல்லூரிகளை விட அதிக பொறுப்பு மாணவர்களுக்குத்தான் உள்ளது. மாணவர்கள் நினைத்தால் மட்டுமே நல்ல பொறியாளராக உருவாக முடியும். மாணவர்களால் தான் பொறியியலின் மீது உள்ள எதிர்மறையான பார்வையை மாற்றமுடியும்” என நிதானமாகக் கூறினார்.