Published:Updated:

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 மருத்துவக் கல்லூரிகள்- கூடுதலாக 1350 இடங்கள்! தமிழகத்துக்கு என்னவெல்லாம் பலன்?

கடந்த மாதம், 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான ஒப்புதலை ஒரே சமயத்தில் பெற்ற நிலையில், இந்த ஒரு வருடத்தில் மட்டும் 2,925 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை அமைக்க இருக்கிறது தமிழக அரசு.

விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி
விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி

மருத்துவக் கல்லூரிகளும் போதிய மருத்துவ வசதிகளும் இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது தமிழக அரசு. ஏற்கெனவே, கடந்த மாதம் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான ஒப்புதலை ஒரே சமயத்தில் பெற்ற நிலையில், இந்த ஒரு வருடத்தில் மட்டும் 2,925 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகளை அமைக்க இருக்கிறது.

விஜயபாஸ்கர், மோடி
விஜயபாஸ்கர், மோடி

``ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பது ஜெயலலிதாவின் கனவு; ஆளும் அ.தி.மு.க அரசின் கொள்கை" என இதுகுறித்து பேசத் தொடங்குகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் கூறுகையில், "இந்தியாவில் ஒரே வருடத்தில் ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது வரலாற்றுச் சாதனை.

ராமநாதபுரம், நாகை, ஊட்டி போன்ற பகுதிகளில் மருத்துவர்களை நியமிப்பதே அரசுக்கு இதுநாள் வரை பெரிய சவாலாக இருந்தது. அப்படி நியமித்தாலும் உடனடியாகப் பணியிட மாற்றம் கேட்பார்கள். ஊட்டியில் இருக்கும் யாருக்காவது அவசரசிகிச்சை தேவையென்றால், அவர்கள் மேட்டுப்பாளையம் அல்லது கோவை வரவேண்டியிருக்கும். ஆனால், 15 ஆண்டுகள் தமிழக மருத்துவத்துறையில் நடக்கவேண்டிய முன்னேற்றம் தற்போது ஒரே ஆண்டில் கிடைக்கப்பெற்றிருக்கிறது. தலா 325 கோடி ரூபாய் செலவில் தற்போது மருத்துவமனைகள் உருவாக இருக்கின்றன.

சீன அதிபர் தமிழகம் வந்த பரபரப்பான சூழலுக்கு இடையேதான், அனைத்து அமைச்சக இலாக்காக்களிலும் மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒப்புதல் பெறப்பட்டது. மற்ற மாநில மருத்துவக் கல்லூரிகளில், ஒவ்வொரு வருடமும் மாணவர் சேர்க்கைக்கு 100 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன என்றால், தமிழகத்தில் மட்டும்தான் 150 சீட்டுகள் ஒதுக்கப்படுகின்றன. மொத்தம் 1,350 இடங்கள். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 15 சதவிகிதம் அனைத்திந்திய ஒதுக்கீடு போக, மீதமுள்ள தமிழக மாணவர்களே படிப்பார்கள். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 300 மருத்துவர்கள் மற்றும் 900 மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதனால் மாவட்டவாரியாக வேலைவாய்ப்பு பெருகும். மருத்துவக் கல்லூரி அமைக்கப்பெறும் மாவட்டங்களிலிருந்து இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது" என்றார்.

மத்திய அரசுடன் 60-40 பார்ட்னர்ஷிப் அடிப்படையில்தான் இந்த மருத்துவமனைகள் அமையவிருக்கின்றன.
ரவீந்திரநாத்
ரவீந்திரநாத்

மக்களின் கருத்துகளுடன், கூடுதலாக சில கேள்விகளையும் முன்வைக்கிறார், மருத்துவரும் செயற்பாட்டாளருமான மருத்துவர் ரவீந்திரநாத்.

"ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 150 மருத்துவச் சீட்டுகள் இருப்பதால் மருத்துவக் கல்விக்கான போட்டியை இது குறைக்கும். அதனால் மருத்துவக் கல்லூரி வருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், மத்திய அரசுடன் 60-40 பார்ட்னர்ஷிப் அடிப்படையில்தான் இந்த மருத்துவமனைகள் அமையவிருக்கின்றன. அதனால், மத்திய அரசு இதில் என்ன நிபந்தனை விதித்திருக்கிறது என்பது தெரிய வேண்டும். எதிர்காலத்தில், ஒருவேளை மத்திய அரசு இந்த மருத்துவமனைகளை அரசு-தனியார் பார்ட்னர்ஷிப் அடிப்படையில் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது.

அது, அரசு மருத்துவமனைகளுக்கு ஆபத்து. 60 சதவிகித நிதி கொடுப்பதால், மாணவர் சேர்க்கைக்கு பொருளாதார அடிப்படையில், முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மத்திய அரசு நிர்பந்தித்தால், மாநில அரசு அதற்கு அடிபணியக் கூடாது. மேலும், ஏற்கெனவே இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளின் தரத்தையும் அதனுடன் சேர்த்து முன்னேற்றுவதற்கான வேலைகளையும் அரசு செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில், பேராசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தும், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. உறுப்புதான அறுவைசிகிச்சைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலேயே செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மருத்துவக் கல்லூரிகள் தொடங்கினால் மட்டும் போதாது, அங்கே எல்லா வகையான வசதிகளையும் அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்கிறார்.