Published:Updated:

``ஆன்லைனில் தமிழ் கற்பிக்க தன்னார்வலர்கள் தேவை" - தமிழக அரசின் வாய்ப்பு இதோ!

Online education (Representational Image)
News
Online education (Representational Image) ( Photo by Agung Pandit Wiguna from Pexels )

தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் கற்பிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணைய வழியில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அப்பணிகள், தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படும்.

தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம். உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், தமிழின் மீது ஆர்வம் கொண்டுள்ள பிற மொழியினருக்கும் தமிழ்மொழியை கற்பிக்க 2001-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி இதற்கான மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதில் தமிழர் வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, தமிழ் நூல்கள் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழக அரசு இணைய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடையே பெருகி வரும் இணைய வழி தேவைகளை அறிந்த அரசு, அனைவரும் எளிதில் பயன்படுத்தும்படியும், பகிரும்படியும் இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளது. தற்போது தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் இது செயற்பட்டு வருகின்றது.

Online Class (Representational Image)
Online Class (Representational Image)
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த இணையதள பக்கத்தில் நூலகம் எனும் பகுதி நூல்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக் காட்சியகம், தமிழிணையம் - மின்னுலகம் என நான்கு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் எண்சுவடி, சிறுவர் இலக்கியம் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள், அகராதிகள், நிகண்டுகள் கலைச்சொல் தொகுப்புகள், சங்க இலக்கியம் போன்றவை உள்ளன. மின் நூலகத்தில் அரிய நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நூல்கள், ஆய்விதழ்கள், பருவ இதழ்கள், சுவடிகள் ஆகியவை உள்ளன. கணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான பணிகளையும் இது மேற்பார்வையிட்டு வருகிறது.

இந்நிலையில், இணைய வழியில் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை தமிழ் கற்பித்தலுக்கான தன்விவரக் குறிப்பு படிவத்தில் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், கல்வித் தகுதி, தெரிந்த மொழிகள், பணி அனுபவம், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, அடையாள அட்டை எண், முகவரி போன்ற தகவல்களுடன் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் (www.tamilvu.org/eteach_reg/) முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். விவரங்களை 10-01-2022க்குள் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழியைக் கற்க விரும்பும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இணைய வழியிலும், நேரடியாகவும் கற்பிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Online class ( representational image)
Online class ( representational image)
Pexels

விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் , மாணவர்களுக்கு ஆங்கிலத்திலும் மற்றும் பிற மொழிகளிலும் தமிழ் மொழியை கற்பிக்கும் திறன் உடையவராக இருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் பணிபுரிய விருப்பமுள்வர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் எனவும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தமிழ் இணைய கல்விக்கழகத்தின் இணைய பக்கத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் உள்ள தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்/ இளைஞர்களைக் கொண்டு தமிழ் இணையக் கல்விக்கழகம் வழியாகவோ, உலகளவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் வாயிலாகவோ இணைய வழியில் கற்பித்தல் சேவைகள் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.