திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே உள்ளது கடலாடி. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் அண்ணாமலை என்பவருக்கும், அதே பள்ளியில் பணிபுரிந்துவரும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என்று தெரியவருகிறது.

அப்படி ஒரு வாக்குவாதம் நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் உச்ச நிலையை அடைந்து, திடீரென கைகலப்பாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் சட்டையைப் பிடித்துத் தாக்கி கீழே விழுந்து சண்டையிட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த சக ஆசிரியர்கள் சிலர் அவ்விருவரையும் விலக்கிவிட்டு, சமாதானம் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர், சட்டையைப் பிடித்து சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வேகமாகப் பரவிய இந்த வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பாக விளக்கம் கேட்க, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் பேசினோம். "போளூர் கல்வி மாவட்ட அதிகாரியை அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி கூறியிருந்தோம். நேற்று (28.01.2022) அவர் விசாரணைக்குச் சென்றபோது ஒரு சிலர் அங்கு இல்லை. அதனால் இன்று மீண்டும் விசாரணைக்குச் செல்கிறார். அவர் விசாரணை செய்துவிட்டு வந்து கூறும்போதுதான் மேற்கொண்டு என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்க முடியும்" என்றார்.
மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித்தரவேண்டிய ஆசிரியர்களே சண்டையிட்டுக்கொண்டதாக வெளியாகியிருக்கும் வீடியோ, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.