Published:Updated:

எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?

எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?
பிரீமியம் ஸ்டோரி
எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?

கடந்த 25 ஆண்டுகளில் கல்விக்கூடங்களின் நிலை வெகுவாக மாறிவிட்டது. உலகமயமாக்கலின் விளைவுகள் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?

கடந்த 25 ஆண்டுகளில் கல்விக்கூடங்களின் நிலை வெகுவாக மாறிவிட்டது. உலகமயமாக்கலின் விளைவுகள் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

Published:Updated:
எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?
பிரீமியம் ஸ்டோரி
எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?

2022-23-ம் கல்வியாண்டு முதல் எம்.பில் படிப்பு செல்லாது என்று அறிவித்துள்ளது பல்கலைக்கழக மானியக்குழு. இனி, இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழகத்திலும் அப்படிப்பு பயிற்றுவிக்கப்படாது. புதிய கல்விக்கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்றாக இருந்த இந்தத் திட்டம், இப்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை இதுவரையிலிருக்கும் கல்வி நடைமுறைகள் பலவற்றைத் தலைகீழாக மாற்றுகிறது. எம்.பில் படிப்பு எந்தப் பணிக்கும் தகுதியாகக் கொள்ளப்படவில்லை என்பதால் கைவிடப்படுகிறது. பிஹெச்.டி படிப்பில் சேர, முதுநிலைப்படிப்போ, எம்.பில் படிப்போ அவசியமல்ல. நான்காண்டு இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் இனி நேரடியாக பிஹெச்.டி-யில் சேரலாம்.

தமிழகம் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டே எம்.பில் படிப்புகளை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்தன.

எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?

இந்தியாவில் கல்விக்கூட ஆராய்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தவும், முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிகளுக்கு மாணவர்களை முறைப்படி தயார்ப்படுத்தவும் ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பயிற்றுவிக்கவும் 1977-ம் ஆண்டு எம்.பில் படிப்பை அறிமுகம் செய்தது பல்கலைக்கழக மானியக்குழு. ஆய்வு அணுகுமுறை, நெறிமுறை, வளர்ச்சி உள்ளிட்ட பி.ஹெச்டி படிப்புக்கான அடிப்படைகளை வகுப்பறையில் பயிற்றுவிக்கும் இந்தப் படிப்பில் மாணவர்கள் ஓர் ஆய்வையும் முடித்து சமர்ப்பிப்பார்கள்.

எம்.பில் படிக்கும் அனைவரும் பிஹெச்.டி-யில் சேர்வார்கள் என்று சொல்லமுடியாது. உதவிப் பேராசிரியர் பணிக்கு, எம்.பில் படித்து NET தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண் ஊக்க மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. தவிர, குறுகிய காலத்தில் ஒரு தலைப்பில் ஆய்வு செய்யவேண்டும் என்று விரும்புபவர்கள்கூட தன்னார்வத்துடன் இந்தப் படிப்பைப் படிக்கலாம். எம்.பில் படித்தவர்கள் பிஹெச்.டி படிப்பை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்க முடியும். மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகைகளையும் பெறமுடியும். தரவுகள் சேகரிப்பது தொடங்கி, தொகுப்பது வரை பிஹெச்.டி படிப்புக்குச் தேவையான அனைத்தையும் எம்.பில் படிப்பில் கற்றுக்கொள்ள முடியும்.

கடந்த 25 ஆண்டுகளில் கல்விக்கூடங்களின் நிலை வெகுவாக மாறிவிட்டது. உலகமயமாக்கலின் விளைவுகள் கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. கல்வி குறித்த நோக்கங்களும்கூட மாறியிருக்கின்றன. உயர்கல்வியிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கல்விக்கூட ஆராய்ச்சிகள் ஆழமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் அவற்றில் முறைகேடுகள் நடக்கின்றன என்ற புகாரும்கூட இருக்கின்றன. மாணவர்களின் ஆராய்ச்சிகள் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் அரசுகள் ஏராளமான உதவித்தொகைகளை வாரி வழங்குகின்றன. ஆனால் பெரும்பாலான ஆராய்ச்சிகள் எதற்கும் பயன்படாமல் பல்கலைக்கழக நூலகங்களில் உறங்குகின்றன.

கணேஷ்குமார், சிவகுமார். மணிகண்டன்
கணேஷ்குமார், சிவகுமார். மணிகண்டன்

`இந்த இடர்களைக் களைந்து, சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடுவதாக, அறிவியல் செயல்பாடுகளை முன்னகர்த்துவதாக, வரலாறு, பண்பாடு, நம்பிக்கை சார்ந்த கூறுகளை மெய்ப்பிப்பதாக ஆராய்ச்சிகள் செய்யப்படுவதை உறுதி செய்வதற்குப் பதிலாக படிப்புகளை ரத்து செய்வதும் நடைமுறைகளை மாற்றுவதும் பெரும்பாலான மாணவர்களை கல்விக்கூடங்களை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கை' என்கிறார்கள் கல்வியாளர்கள்.

``தேசியக் கல்விக்கொள்கையின் முக்கிய உள்ளடக்கமே, யார் யார் எந்த அளவுக்குப் படிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதுதான். அதற்கான செயல்திட்டங்களில் ஒன்றுதான் எம்.பில் படிப்பை நீக்குவது. பட்டப்படிப்பில் முதலாண்டோடு வெளியேறினால் சான்றிதழ்; இரண்டாம் ஆண்டோடு வெளியேறினால் டிப்ளோமா; மூன்றாமாண்டு வரை படித்தால் பட்டம்; நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு நேரடியாக பிஹெச்.டி என்றெல்லாம் வரையறுத்திருக்கிறார்கள். கல்வி நிறுவனங்களில் மாணவர்களை உறுதியாகத் தக்கவைத்துக்கொள்வதுதான் தேசத்தின் வளர்ச்சிக்கு நல்லது. பள்ளிக்கு வராத மாணவர்களை ஆள்விட்டுத் தூக்கிவந்து படிக்கவைத்தது நம் மரபு. அப்படி கட்டாயக் கல்வி வழங்கியதால்தான் தமிழகத்தின் உயர்கல்விச் சேர்க்கை அகில இந்திய அளவில் அதிகமாக இருக்கிறது. நீ எப்போது வேண்டுமானாலும் கல்விக்கூடத்தை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்குவது தேசத்துக்கு நல்லதல்ல’’ என்கிறார், அரசுக்கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப.சிவகுமார்.

``முனைவர் பட்டப்படிப்பு என்பது உயர்கல்வியில் ஒரு இறுதி நிலையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பொருளில் நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வுசெய்து முடிவுகளை முன்வைக்கவேண்டும். சங்க இலக்கியம் முதல் விண்வெளித்துறை வரை பலரும் வெவ்வேறு தலைப்புகளில் ஆய்வுசெய்து முடிவுகளை வெளிக்கொணருகிறார்கள். இதைச்செய்ய ஒரு புகுமுக வகுப்பு மாதிரியாகத்தான் எம்.பில் படிப்பு இருக்கிறது. ஆய்வு அணுகுமுறைகளை தியரியாக இங்கே கற்றுத்தருவார்கள். பிஹெச்.டி படிப்புக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள அது மிகச்சிறந்த வாய்ப்பு. எம்.பில் படிக்காமல் பிஹெச்.டி படிப்பது, +1, +2 படிக்காமல் பட்டப்படிப்புக்குச் செல்வதுபோல...’’ என்கிறார், தனியார் கல்லூரி ஒன்றின் துறைத்தலைவர் முதுமுனைவர் மா.மணிகண்டன்.

எம்.பில் நீக்கம் சரியான முடிவுதானா?

``மத்திய அரசு, கல்வி பற்றிய எல்லா வரைவுகளிலும் திறனை ஒரு முக்கிய அம்சமாக முன்னிறுத்துகிறது. தமிழக உயர்கல்வி அமைச்சரும் அடுத்த கல்வியாண்டு முதல் பட்டப்படிப்புகளில் திறனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்கிறார். கல்வியின் நோக்கம் அறிவை விசாலமாக்குவது; சமூகத்தைப் பற்றி அக்கறையை உருவாக்குவது; ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை உருவாக்குவது. தொழில் திறனை வளர்ப்பதல்ல. இந்த அடிப்படையை மறந்துவிட்டு, தொழில் நிறுவனங்களுக்குத் தக்கவாறு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சிக்கூடமாகக் கல்வி நிறுவனங்களை மாற்றுவது எதிர்காலத்தைப் பாழ்படுத்திவிடும்’’ என்கிற பேராசிரியர் சிவகுமார், எம்.பில் படிப்பை நீக்குவதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் எவ்விதம் பாதிக்கப்படுவர் என்பதையும் விவரிக்கிறார்.

``ஆராய்ச்சிப் படிப்பில் சேர்வதற்கான விதிமுறைகளைப் பல பல்கலைக்கழகங்களில் இறுக்கமாக்கிவிட்டார்கள். இரண்டு பேப்பர்கள் பப்ளிஷ் செய்திருக்க வேண்டும்; செமினார்களில் பங்கேற்றிருக்கவேண்டும். இந்தத் தகுதிகள் இருந்தால் மட்டுமே பிஹெச்.டி-யில் சேரமுடியும். ஒரு கிராமப்புற பட்டதாரி நேரடியாக இவற்றையெல்லாம் செய்ய வாய்ப்பில்லை. எம்.பில் படித்தால் அதன்மூலம் செமினார்களில் பங்கேற்பார். ஆய்வறிக்கை சமர்ப்பிப்பார். அதன்மூலம் பிஹெச்.டி படிப்பதற்கான தகுதியடைவார். இனி அந்த வாய்ப்பு பறிபோய்விடும்’’ என்கிறார் சிவகுமார்.

``ஒரு அரசு, கல்வியை வேலையோடு தொடர்புபடுத்துவது வியப்பாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. கல்வி, வெவ்வேறு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை எம்.பில் படிப்பு எனக்கு பிஹெச்.டி படிப்புக்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தது. ஆராய்ச்சி என்பது வகுப்பறையோடு முடிந்துபோகும் விஷயமில்லை. நுழைவுத்தேர்வு எழுதி சிண்டிகேட் அனுமதி பெற்று, நெறியாளர் அங்கீகரித்து, நிபுணர் குழுவின் கண்காணிப்பின் கீழ்தான் இங்கே ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆராய்ச்சி முடித்தவர்கள் வைவாவில் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் சொல்லியாகவேண்டும். ஆராய்ச்சிகள் தரமற்று இருந்தால் அதைத்தான் சரி செய்யவேண்டும். மாறாக, இருக்கும் கல்விமுறையை மாற்றி எளிய மாணவர்களைக் கல்விக்கூடங்களை விட்டு வெளியே தள்ளுவது சரியல்ல. இந்த மாற்றங்கள் தமிழகக் கல்விமுறையை வெகுவாக பாதிக்கும்’’ என்கிறார், ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் முனைவர் ச.கணேஷ்குமார்.

நீட் தேர்வு குறித்த எதிர்ப்புகளே தணியாதபோது, மத்தியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு கொண்டுவரும் பல்கலைக்கழக மானியக்குழுவின் முடிவு கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. எம்.பில் படிப்பை நீக்குவது என்பதும் கல்வித்துறையில் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது.

பாகுபாடற்று எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை உருவாக்குவதே நற்கல்வி. அதைத்தான் அரசுகள் மக்களுக்குத் தரவேண்டும். இருக்கும் வாய்ப்புகளைப் பறித்துவிடக்கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism